தேடுதல்

சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் 

இனியது இயற்கை – விண்வெளிப் பயணங்கள்

வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா தாமதமாகவே விண்வெளி ஆராய்ச்சிக் களத்தில் குதித்தது. செவ்வாயைச் சுற்றுவதற்கு மங்கள்யானை அனுப்பி, தனது முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்ற முதல் நாடு இந்தியாதான்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் 1-ஐ சோவியத் இரஷ்யா அக்டோபர் 4, 1957 அன்று பறக்கவிட்டது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருள் ஒன்று விண்வெளிக்குச் சென்றது அதுவே முதன்முறை. ஸ்புட்னிக் என்றால், ரஷ்ய மொழியில் ‘சக பயணி’ என்று பொருள். கொரோனா தடுப்பு மருந்துக்கும் தங்கள் பெருமைக்குரிய பெயரான ‘ஸ்புட்னிக்’கையே இரஷ்யா சூட்டிக்கொண்டதில் வியப்பில்லை.

விண்வெளியில் புவியைத் தவிர்த்த ஒரு விண்பொருளில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற பெயரை சோவியத் இரஷ்யாவின் லூனா 2 பெற்றது. இது ஆளற்ற விண்கலம். 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதியன்று இந்தச் சாதனையை லூனா 2 புரிந்தது. நவம்பர் 3, 1957-ல் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் லாய்க்கா என்ற நாயை சோவியத் இரஷ்யா அனுப்பியது. விண்கலம் திரும்பிவந்தபோது, அந்த நாய் இறந்திருந்தது. இதற்குப் பிறகு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் 4 ஆண்டுகள் கழித்து சோவியத் இரஷ்யா வெற்றிபெற்றது. 1961ஆம் ஆண்டில் ஏப்ரல் 12ல் அனுப்பப்பட்ட வோஸ்டோக் 1 விண்கலத்தில் சென்ற யூரி ககாரின்தான் விண்வெளியில் பறந்த முதல் மனிதர் என்ற சாதனையைப் புரிந்தார். 1963ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று வோஸ்டோக் 6 விண்கலத்தில் சென்றதன் மூலம் ‘விண்வெளிப் பயணம் மேற்கொண்ட முதல் பெண்’ என்ற பெயரைப் பெற்றார் சோவியத் ரஷ்யாவின் வேலன்டினா டெரெஷ்கோவா.

விண்வெளிப் பந்தயத்தில் சோவியத் இரஷ்யாவே முன்னணியில் இருந்தாலும், நிலவுக்கு மனிதனை அனுப்பி அமெரிக்கா முந்திக்கொண்டது. 1969ஆம் ஆண்டு ஜூலை 20ம் தேதியன்று அப்போலோ 11 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் என்ற பெயரைப் பெற்றார்.

சூரியக் குடும்பத்தின் புறப் பகுதியில் உள்ள கோள்களைத் துழாவுவதற்கு மணிக்கு ஏறக்குறைய 38 ஆயிரம் மைல் வேகத்தில் வாயேஜர்-2, வாயேஜர்-1 என்ற இரண்டு துழாவிகளை (probes) நாஸா அனுப்பியது. மனிதர்கள் உருவாக்கிய பொருட்களில், சூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்ற முதலாவது பொருள், விண்மீன்களுக்கு இடைப்பட்ட வெளியில் பயணிக்கும் முதலாவது பொருள் என்ற புகழை 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதியன்று வாயேஜர்-1 பெற்றது.

வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா தாமதமாகவே விண்வெளி ஆராய்ச்சிக் களத்தில் குதித்தது. இந்தியாவின் முதல் விண்கலமான ஆர்யபட்டாவை இஸ்ரோ உருவாக்கியிருந்தாலும் அதைச் செலுத்தியது சோவியத் இரஷ்யாதான். அந்தப் புள்ளியிலிருந்து இந்தியா இன்று அடைந்திருக்கும் வளர்ச்சி வியக்க வைக்கிறது. ஒளிபரப்பு, தகவல்தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை, புவியிடமறிதல், தொலைமருத்துவம், தொலைதூரக் கல்வி என்று சாதாரண மனிதர்கள் அனைவருக்கும் தொடர்புடைய சேவைகளை இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் சாதித்திருக்கின்றன. நிலவைச் சுற்றும் கலமான சந்திரயான்-1-ஐ 2008ஆம் ஆண்டில் இஸ்ரோ அனுப்பியது. 2013 ஆம் ஆண்டில் செவ்வாயைச் சுற்றுவதற்கு மங்கள்யானை அனுப்பியது. இதில் சிறப்பு என்னவென்றால், செவ்வாயைப் பொறுத்தவரை தனது முதல் முயற்சியிலேயே இப்படி வெற்றிபெற்ற முதல் நாடு இந்தியாதான். 2016-ல் இஸ்ரோ 20 விண்கலங்களை ஒரே ஏவுகலத்தின் மூலம் ஏவியது. 2017ஆம் ஆண்டில் ஒரே ஏவுகலத்தின் மூலம் 104 விண்கலங்களை இஸ்ரோ ஏவியது உலக சாதனை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 December 2022, 15:46