இனியது இயற்கை: சனிக் கோள்
மேரி தெரேசா: வத்திக்கான்
சூரியக் குடும்பத்தில், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என எட்டுக் கோள்கள் உள்ளன. இவற்றில் புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகியவை சிறிய கோள்களாகவும், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை பெரிய கோள்களாகவும் அமைந்துள்ளன. Saturn என ஆங்கிலத்தில் சொல்லப்படும சனிக்கோள், சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து அமைந்துள்ள இரண்டாவது பெரிய கோளாகும். இதன் சராசரி ஆரம் புவியின் ஆரத்தைவிட ஒன்பது மடங்காகும். அதேநேரம், புவியின் அடர்த்தியில் எட்டில் ஒரு பங்கே ஆகும். எனினும் சனிக்கோள் தனது பெரிய அளவினால் புவியைவிட 95 மடங்கு நிறையுடையதாக உள்ளது. இக்கோளின் வளிமண்டலத்தில் அம்மோனியா படிகங்கள் இருப்பதால் இது வெளிர் மஞ்சள் நிறத்தைக் கொண்டுள்ளது. சனிக்கோளின் வெளிப்பரப்பு எவ்வித மேடுபள்ளங்களும் இல்லாமல் உள்ளது. இக்கோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பாலும் பனித்துகள்கள், பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. இக்கோளின் மிகப் பெரிய நிலவான டைட்டன், புதன் கோளைவிடவும் பெரியது.
சனிக்கோளிலுள்ள வளையங்கள், பூமியின் நடுநிலைக்கோட்டிற்குமேல் ஏறத்தாழ 6630 கி.மீ.லிருந்து 1,20,700 கி.மீ வரை நீண்டிருக்கிறது. அதன் சராசரி தடிமன் 20 மீட்டர் ஆகும்.
இக்கோளின் வளிமண்டலத்தின் வெளிப் பகுதியில் 3% ஹீலியம், 0.4% மீத்தேன் மற்றும் 0.01% அம்மோனியா, மற்றும் 96% ஹைட்ரஜன், அசிடிலின், ஈத்தேன் மற்றும் பாஸ்பின் ஆகியவை உள்ளன. சனிக்கோளைச் சுற்றி 61 நிலவுகள் சுழல்கின்றன. இதில் தொண்ணூறு விழுக்காட்டை மிக பெரிய நிலவான டைட்டன் கொண்டிருக்கிறது. இக்கோளின் அனைத்து நிலவுகளுக்கும் கிரேக்கக் கடவுள்களான டைடன்களின் பெயர்களே சூட்டப்பட்டுள்ளன. 1610ஆம் ஆண்டில் இத்தாலிய அறிவியலாளரான கலிலியோ கலிலி அவர்கள், தனது முதல் தொலைநோக்கி வழியாக அதன் வளையங்களைக் கண்டுபிடித்தார். 1655ஆம் ஆண்டில், கிறிஸ்டியன் ஹிகென்ஸ் என்பவரே, சனிக்கோளைச் சுற்றிய வளையங்களைக் கண்டறிந்த முதல் அதிகாரப்பூர்வ நபராவார். சனிக் கோளத்தில் தண்ணீர் இருப்பதாகவும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (உதவி: விக்கிப்பீடியா)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்