இனியது இயற்கை - வியாழன் கோள்(Jupiter)
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
வியாழன் என்பது கதிரவனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோளும், கதிரவ அமைப்பிலேயே மிகப்பெரிய கோளும் ஆகும். இதன் நிறை கதிரவனின் நிறையில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவே ஆகும். எனினும் அது கதிரவ அமைப்பில் உள்ள மற்ற கோள்களை இணைத்தால் கிடைக்கும் நிறையைவிட இரண்டரை மடங்கு அதிகமானதாகும். ஆகவே, வியாழனே நமது சூரியத் தொகுதியின் நாயகன்! இந்த வியாழன்கோள் அதிகளவான ஈர்ப்புவிசையையும் கொண்டுள்ளது, இந்த அதிகப்படியான ஈர்ப்புவிசையால், சூரியத்தொகுதியில் மிக முக்கிய ஓர் அங்கத்தவராக இருப்பதுடன், பூமியில் உள்ள உயிர்களையும் பாதுகாக்கிறது.
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் பூமியைத் தாக்கி டைனோசர்கள் எல்லாம் அழிந்தன என அறிவியல் உரைக்கிறது. வியாழன் என்ற ஒரு கோள் இல்லாவிடில், இன்னும் பல விண்கற்கள் பூமியை மனிதரின் வாழ்வுக் காலத்தைத் தாக்கியிருக்கும். இன்னமும் தெளிவாகச் சொல்லப்போனால், பூமியில் மனித உயிரினம் தோன்றுவதையே இந்த விண்கற்களின் மோதல் தடுத்திருக்கும். வியாழனது பெரிய ஈர்ப்புவிசை, பெரும்பாலான விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகள் போன்றவற்றை பூமியை நோக்கி வராமல் திசை திருப்பிவிடும்!
வியாழன் தன்னைத்தானே சுற்ற 10 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. சூரியனைச் சுற்ற 12 ஆண்டுகள். இதன் துணைக்கோள்கள் 63. பூமியைவிட 11 மடங்கு பெரியது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்