இனியது இயற்கை - எரி விண்மீன்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
விண்வெளியில் ஏராளமான கோள்கள், நட்சத்திரங்கள், விண் கற்கள் உள்ளன. இவை தங்களுக்கு என்று தனிப்பாதை அமைத்துக்கொண்டு வலம்வருகின்றன. இதில் சில நேரங்களில் சில விண்கற்கள் தங்கள் பாதையைவிட்டு விலகி பூமியை நோக்கி வேகமாக விழத்தொடங்கும். அதுபோல சில விண்கற்கள் ஒன்றோடு ஒன்று மோதி வெடித்து சிதறும். அப்போது அதன் சிதறல்கள் பூமியை நோக்கி வேகமாக விழும்.
அதுபோன்ற சூழ்நிலையில் வான்வெளியில் நுழைந்ததும் அந்த விண்கற்கள் காற்றைக் கிழித்துக்கொண்டு பூமியை நோக்கி வேகமாகப் பாயும். அப்போது காற்றுடன் அவை உரசும்போது உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு தீப்பிடித்துக்கொள்ளும் விண்கற்களை எரி நட்சத்திரங்கள் என்று அழைக்கிறார்கள். இந்த எரிநட்சத்திரங்கள் தீப்பிடித்தபடி பூமியை நோக்கி விழுந்தாலும், வழியிலேயே அவை எரிந்து சாம்பலாகிவிடும். இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்துவிடுகின்றன. விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்தில் மணிக்கு 2,15,000 கிலோ மீட்டர் வேகத்தில் நுழைகின்றன என்றாலும், அவற்றால் எந்த ஆபத்தும் நேர்வதில்லை.
சில நேரங்களில் சில எரி நட்சத்திரங்கள் அல்லது விண்கற்கள் பூமியில் விழுவதும் உண்டு. அவ்வாறு பூமியில் விழும் விண் கற்களை அறிவியலாளர்கள் சேகரித்து ஆய்வுகள் நடத்துகிறார்கள். இந்த விண் கற்களில் இரும்பு, நிக்கல், கோபால்ட், பாஸ்பரஸ், கந்தகம் உள்பட சில இரசாயன பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்