இனியது இயற்கை - சூரியக் குடும்பத்தின் செவ்வாய் கோள்(Mars)
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
சூரியனிலிருந்து நான்காவது கோளான செவ்வாய், ஒரு சிவப்பு நிறக்கோள். வறண்ட ஆறுகள், செயலிழந்த எரிமலை, பாலைவனங்கள், பாறைகள், பனிமூடிய துருவங்கள் இங்கு உள்ளன. கோபால், டெய்மோஸ் என இரு துணைக்கோள்கள் இதற்கு உள்ளன. சூரியக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது.
செவ்வாய் கிரகத்தில் உயிரினம் இருக்கலாம் என ஆராய 1979ல் வைக்கிங் விண்கலமும், 1998ல் சோனேஜர் விண்கலமும் அனுப்பப்பட்டன. தற்போதையை நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் சென்று வசிப்பது என்பது அதீத கற்பனையாக இருக்கலாம். ஆனால், அது தொடர்பான ஆராய்ச்சிகளும், செவ்வாய் கிரகத்தை நோக்கிய பயணங்களும் தீவிரமடைந்துள்ளன. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கும்பட்சத்தில், இந்நூற்றாண்டு இறுதிக்குள் மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்குச் சென்று வசிப்பதற்கான சூழலை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றனர் அறிவியலாளர்கள். 2030-ல் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பவும் நாசா திட்டமிட்டுள்ளது.
அளவில் சிறியது என்றாலும், பூமியின் நிலப்பரப்புக்கு நிகரான நிலப்பரப்பு செவ்வாய் கிரகத்தில் உள்ளது. முந்தைய காலகட்டங்களில் செவ்வாய் கிரகத்தில் நீர் வளம் இருந்ததற்கான தடங்கள் உள்ளன. ஆக, ஒரு காலத்தில் பூமியைப் போல நீர் வளங்களைக் கொண்டிருந்த செவ்வாய் கிரகம், காலம் செல்லச் செல்ல, நீர் வறண்டு, மணலால் ஆன கோளாக மாற்றம் அடைந்திருக்கிறது என்பதே அறிவியலாளர்களின் ஊகம்.
பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் இடையே அளவில் நிறைய வித்தியாசம் உள்ளது.
பூமியின் ஆரமானது 6378 கிலோமீட்டர் ஆகும். அதுவே செவ்வாய் கிரகத்தின் ஆரம் (radius) 3397 கிலோமீட்டர்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரமானது 14 கோடியே 95 இலட்சத்து 97 ஆயிரத்து 891 கிலோமீட்டர் ஆகும். செவ்வாய்க்கும், சூரியனுக்கும் இடையிலான தூரம் 22 கோடியே 79 இலட்சத்து 36 ஆயிரத்து 637 கிலோமீட்டர்.
பூமியின் வளிமண்டலத்தில் அதிகம் நிறைந்திருப்பது நைட்ரஜன்தான். அதாவது 77 விழுக்காடு நைட்ரஜன் உள்ளது. அடுத்து ஆக்சிஜன். இது 21 விழுக்காடாகும். இவை தவிர, நீராவி 1 விழுக்காடும், ஆர்கான் 1 விழுக்காடும் உள்ளன. செவ்வாயின் வளிமண்டலத்தில் அதிகம் இருப்பது கார்பன் டை ஆக்சைடுதான். அதாவது 95.32 விழுக்காடு கார்பன் டை ஆக்சைடுதான். நைட்ரஜனின் அளவு 2.7 விழுக்காடுதான். ஆக்சிஜனோ வெறும் 0.13 விழுக்காடு.
ஈர்ப்பு விசையின் அளவானது பூமியில் 2.66 ஆகவும், செவ்வாயில் 1 என்ற அளவிலும் உள்ளது. பூமியின் தரைப்பரப்பு வெப்பநிலையானது சராசரியாக 14 டிகிரி செல்சியஸ் ஆகும். அதுவே செவ்வாயில் மைனஸ் 63 டிகிரி செல்சியஸ் ஆகும்.
பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக உள்ளது. செவ்வாயில் அது 24 மணி 37 நிமிடமாக இருக்கும். பூமியில் ஆண்டிற்கு 365 நாட்களாகும். அதுவே செவ்வாயில் 687 பூமி நாட்களாகும். அதாவது பூமியில் உள்ள 687 நாட்கள் செவ்வாயில் ஓர் ஆண்டிற்குச் சமமாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்