மியான்மார்: புதிய சட்டங்கள் மனிதாபிமானப் பணிகளுக்கு பாதிப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
மியான்மாரில் தொடர்நது இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரால் 14 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்துள்ளவேளை, ஆயுதத் தாக்குதல்கள், நடைமுறையிலுள்ள கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மனிதாபிமானப் பணியாளர்கள் மீதுள்ள அச்சுறுத்தல் மற்றும், கட்டுப்பாடுகள் ஆகியவை நாடெங்கும் மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன என்று ஐ.நா. அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது,.
அந்நாட்டின் பல மாநிலங்களில் உள்நாட்டுப் போர் இடம்பெற்றுவருதால் அப்பாவி குடிமக்கள் கடுந்துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும், இதனாலேயே இடைக்காலப் போர் நிறுத்தத்திற்கு துயர்துடைப்பு அமைப்புகள் அழைப்புவிடுத்து வருகின்றன என்றும், ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் (OCHA) அறிவித்துள்ளது.
இவ்வாண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து Rakhine மற்றும், Chin மாநிலங்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளவேளை, Arakan விடுதலைப் படைக்கும், மியான்மார் இராணுவத்திற்கும் இடையே போர் நிறுத்தம் அவசியம் என்று, அந்த ஐ.நா. அலுவலகம் கூறியுள்ளது.
அதேநேரம், அரசு-சாரா அமைப்புகள் பதிவுசெய்யப்படவேண்டும் என்று மியான்மாரில் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சட்டம் குறித்து பிறரன்புப் பணியாளர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர் என்றும், இத்தகைய பதிவு, இராணுவ அரசுக்கு சட்டரீதியான அங்கீகாரம் அளிக்கும் என்பதால், பல உள்ளூர் அமைப்புகள் அரசில் பதிவுசெய்யவில்லை என்றும் பீதேஸ் செய்தி கூறியுள்ளது.
மியான்மாரில் ஒன்றரை ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் போரில், வீடுகள், சொத்துக்கள், ஆலயங்கள், துறவு இல்லங்கள் மற்றும், பள்ளிகள், என ஏறத்தாழ 31 ஆயிரம் குடிமக்களின் இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆயினும் இதன் உண்மையான எண்ணிக்கையைத் தெரிந்துகொள்வது கடினம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்