மனித உரிமைகள், மனித மாண்புக்கு அடித்தளம்
மேரி தெரேசா: வத்திக்கான்
இன்றைய உலகளாவிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளில் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்று, டிசம்பர் 10, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மனித உரிமைகள் நாள் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார், ஐ.நா. தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்.
மனித உரிமைகள், மனித மாண்புக்கு அடித்தளம் என்றும், அமைதி, நீதி, சமத்துவம், வளமையான சமூகங்கள், மற்றும், எவரையும் ஒதுக்காத நிலைக்கு மூலைக்கல் என்றும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், இவையே ஒன்றிணைக்கும் சக்தி என்றும் கூறியுள்ளார்.
இன்றைய உலகில் பசி, வறுமை, பெண்கள் மற்றும், சிறுமிகளுக்கு எதிரான வன்முறை போன்றவை அதிகரித்துள்ளன, ஊடகச் சுதந்திரம் நசுக்கப்படுகின்றது, நிறுவனங்கள் மீதுள்ள நம்பிக்கை, குறிப்பாக இளையோர் மத்தியில் குறைந்து வருகிறது, இவை போன்ற மனித உரிமைகள் குறித்த சவால்களை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது என்றும் அச்செய்தி கூறுகிறது.
இக்காலக்கட்டத்தின் அழிக்கின்ற போக்கை மாற்றுவதற்குரிய முயற்சிகளில் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு, ஐ.நா.வின் உறுப்பு நாடுகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார், கூட்டேரஸ்.
1948ஆம் ஆண்டில் ஐ.நா. பொது அவை, உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கையை வெளியிட்ட டிசம்பர் 10ம் தேதியன்று, ஒவ்வோர் ஆண்டும் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. (UN)
மனித உரிமை ஆர்வலர் Sandya Ekneligoda
மேலும், 2022ஆம் ஆண்டில் சமுதாயங்களில், விழிப்புணர்வு மற்றும், நல்தாகத்தை மிக அதிகமாக ஏற்படுத்திய நூறு பெண்களில் ஒருவராக, இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலர் Sandya Priyangani Ekneligoda அவர்களைத் தெரிவுசெய்துள்ளது, பிபிசி ஊடகம்.
புலனாய்வு பத்திரிகையாளரும், கேலி ஓவியங்களான கார்ட்டூன்களை வரைபவருமான Sandya Ekneligoda அவர்களின் கணவர் 2010ஆம் ஆண்டு காணாமல்போனதிலிருந்து, இலங்கையில் கட்டாயமாக காணாமல்போயுள்ள ஆயிரக்கணக்கானோரின் பேச்சாளராக அவர் செயல்பட்டு வருகிறார்.
தமிழ் விடுதலைப்புலிகளுக்கு எதிரான உரிமை மீறல்கள் குறித்து புலனாய்வு செய்துகொண்டிருந்தவேளையில் 2010ஆம் ஆண்டில் Sandya Priyangani Ekneligoda அவர்களின் கணவர் காணாமல்போயுள்ளார்.
Sandya Ekneligoda அவர்கள், 2017ஆம் ஆண்டில் துணிச்சல் பெண்கள் உலக விருதைப் பெற்றுள்ளார். இவர், இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த ஆயிரக்கணக்கான அன்னையர் மற்றும், மனைவிகளுக்கு உதவிசெய்துள்ளார். இவர் முன்னாள் அரசுத்தலைவர் Mahinda Rajapaksa அவர்களை ஆதரிப்போரை குறைகூறியிருப்பவர்.
இவர் ஆசியச் செய்திக்கு அளித்த பேட்டியில், மற்றவரின் உரிமைகளுக்காக மட்டுமல்ல, இதில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் நீதிக்காகவும் போராடுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். (Asia News)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்