பிலிப்பீன்ஸ் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
மெரினா ராஜ் – வத்திக்கான்
தெற்கு பிலிப்பீன்ஸின் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்து, 3 பேர் காணாமல் போயுள்ள நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது எனத்தெரிவித்துள்ளார் Mati நகரக் காவல்துறை உயர் அதிகாரி Ernesto Gregore.
டிசம்பர் மாதம் 28 புதன்கிழமை தொடங்கிய கனமழையால் பிலிப்பீன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் , காணாமல் போன இருபதுக்கும் மேற்பட்டவர்களை அதிகாரிகள் இன்னும் தேடி வரும் நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை உயர் அதிகாரி Gregore தெரிவித்துள்ளார்.
மேற்கு Misamis மாநிலத்தில் உள்ள Mindanaoவில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில், மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 பேர் புதையுண்டு இறந்ததாகவும், அதில் 62 வயதுடைய ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவரோடு உடன் இருந்தவர்களின் உடல்களைத் தேடும் பணி இன்னும் நடைபெற்று வருவதாகவும் Gregore தெரிவித்தார்.
நூற்றுக்கணக்கான வீடுகள் அழிவுற்றுள்ளதுடன் 5,000 ஹெக்டேர் (12,400 ஏக்கர்) பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்காப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் பிலிப்பீன்ஸ் இடம் பெற்றுள்ளது எனவும், உலகம் வெப்பமயமாதலால் புயல்கள் மிகவும் சக்திவாய்ந்ததாக உருமாறுகின்றன எனவும், வானியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்