வாரம் ஓர் அலசல் - இந்திய தேசிய குழந்தைகள் நாள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
குழந்தைத்தொழிலாளர்கள் அதிகரித்து வருவதைத் தடுக்கவும், இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்பதை எடுத்துரைக்கவும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி இந்தியாவில் குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகின்றது. குழந்தைகள் மீது அன்பும் அக்கறையும் கொண்டு அவர்களின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டவருமான இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளையேக் குழந்தைகள் நாளாகக் கொண்டாடி மகிழ்கின்றோம். குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை அளித்து, அவர்கள் வளர்ந்து வரும் சூழலில் சமமான வாய்ப்புகள் வழங்கும் போது தான், நாட்டின் வளர்ச்சியில் பங்கு கொள்பவர்களாக அவர்கள் வளர்வார்கள் என்று கூறிய பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளில் இக்குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகின்றது.
பிரதமர் நேரு அவர்கள் பிறந்த நாளில் கொண்டாடப்படும் இந்நாளானது அவருக்கு அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகள் நேருவைப் போல் எல்லாரிடத்திலும் அன்பு செலுத்தி அறிவாற்றலுடன் சிறந்து வாழ வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது. எதிர்கால தேசத்தை ஆளவிருக்கும் இன்றைய குழந்தைகள் புத்திசாலித்தனமாகவும் புதுமையான ஆற்றல் உடையவர்களாகவும் வளர வேண்டும் வருங்கால இந்தியாவின் சொத்துக்களான குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நாளானது அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கள்ளங்கபடமற்ற குழந்தைகளின் வடிவில் வாழும் இறைவன், மனிதர்களின் மனக்காயங்களுக்கு அக்குழந்தைகள் வழியாகவே மருந்திடுகின்றார். குழந்தைப்பருவத்தில் பாதுகாப்பாக ஆரோக்கியமாக வாழும் குழந்தைகள் தான் சிறப்பான எதிர்காலத்தைப் பெறுகின்றனர் என்பதால் அவர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் பத்திரப்படுத்தப்பட வேண்டும். குழந்தை பருவத்தில் குழந்தைகள் தாங்கள் வாழ்கின்ற சூழலில் இருந்து ஏராளமானவற்றைக் கற்றுக் கொள்வதால் அவர்கள் வாழ்கின்ற சூழல் அமைதியானதாக இருக்கும்பொழுது அவர்களும் நிறைய கற்று கொள்ளுவார்கள் என்று இந்நாளில் வலியுறுத்தப்படுகின்றனர்.
குழந்தைகள் நாள் கொண்டாட்டங்கள்
பள்ளி மாணவ மாணவியர்கள் குழந்தைகள் நாளைத் தத்தமது பள்ளிகளில் மிகச்சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். காலையில் தேசியக்கொடி ஏற்றி ஆரம்பிக்கப்படும் இந்நாளானது குழந்தைகள் தலைமை தாங்குதல், சொற்பொழிவாற்றல் கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்ற சிறப்பான நிகழ்வுகளாலும் பல இடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகளைக் கொடுத்து மகிழ்விப்பதும் நடைபெறுகின்றது. இந்தியாவில் நவம்பர் 14 ஆம் தேதிக் கொண்டாடப்படும் குழந்தைகள் நாள் உலகின் பல நாடுகளிலும் பல்வேறு நாள்களில் கொண்டாடப்படுகின்றன. பன்னாட்டுக் குழந்தைகள் நாளானது பல நாடுகளில் ஜூன் 1ம் தேதி கொண்டாடப்படுகின்றது. சில நாடுகளில் குறிப்பாக இலங்கையில் அக்டோபர் 1, ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 4, பங்களாதேசில் மார்ச் 17, மத்திய ஆப்ரிக்காவில் டிசம்பர் 25 போன்ற தேதிகளிலும் கொண்டாடப்படுகின்றன. எதிர்கால சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும், ஆற்றல் பெற்ற குழந்தைகள் கட்டாயம் தேவை என்ற அடிப்படையில் இந்நாள் மிகுந்த மகிழ்வுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.
குழந்தைகளால் அமையும் வருங்கால இந்தியா
இந்திய நாடு சுதந்திரம் பெற்ற வேளையில் நாட்டின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு வருங்கால இந்தியா இன்றைய குழந்தைகளில் கைகளில் இருக்கின்றது என்பதை உணர்ந்து, அவர்களுடன் அதிகமான நேரத்தை செலவிட பயன்படுத்தினார். அவரைப் போலவே, இளையோரே மாணவர்களே கனவு காணுங்கள் என்று கூறிய அப்துல் கலாம் அவர்களும் குழந்தைகளுக்கு கற்பிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டினார். தலைவர்கள் அனைவரும் வருங்கால இந்தியா குழந்தைகளால் அமையும் என கனவு கண்டனர். அதை நிறைவேற்ற பாடும்பட்டனர்.
குழந்தை உரிமைகள்
இந்தியாவில் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு பலவகையான சட்டங்கள் குழந்தை உரிமைகள் எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பான வாழ்விடம், ஆரோக்கியமான உணவு, சுத்தமான குடிநீர், விரும்பியவாறு கல்வி கற்கும் உரிமை, மகிழ்ச்சியாக விளையாடும் உரிமை என பல உரிமைகளும் சட்டங்களும் சட்டரீதியாக நடைமுறையில் உள்ளன. இவற்றை கடைப்பிடிக்காத பெற்றோர்களை தண்டிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. எதிர்கால இந்தியாவை அரசாள இருக்கும் இன்றைய குழந்தைகள் புத்திசாலித்தனமாகவும் புதுமையான ஆற்றல் உடையவர்களாகவும் வளர வேண்டும். ஒரு நாட்டின் சொத்து களஞ்சியங்களில் இல்லை அவை பள்ளிக்கூடங்களில் உள்ளது. எனவே நாட்டின் அதிகாரிகளும் குழந்தைகளது பெற்றோர்களும் குழந்தைகளைப் பாதுகாத்து அவர்களை சிறப்பான நிலைக்கு கொண்டு வருவதன் வழியாக நாட்டை சிறப்பானதாக கட்டியெழுப்ப முடியும் என்று இந்நாளில் அதிகமாக வலியுறுத்தப்படுகின்றனர்.
வருடம் தவறாமல் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறவர்களே… தினங்கள் கொண்டாடுவதை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகின்றீர்கள்? என்ற கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை, குழந்தைகளைக் காத்து வழிநடத்த நமக்கு அறிவுறுத்துகின்றது. குழந்தைகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்குதல், கல்வியில் மனிதப் பண்புகள் மற்றும் விழுமியங்களை வளர்த்தல், குழந்தைகளுக்கான இலக்கிய அறிவை வளர்ப்பதற்கான பயிற்சிகள், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பின் தேவை, தமிழகத் தொடக்கக் கல்வியில் பின்பற்றப்படும் செயல்வழிக் கற்றல் அணுகுமுறை , சமத்துவக் கல்வி, என கல்வித்துறை சார்ந்த பல்வேறு தளங்களில் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.
குழந்தைகள் நல்ல தோட்டத்தின் பூச்செடிகள். நாம் ஆசிரியர்களானாலும், பெற்றோர்களானாலும் நல்ல தோட்டக்காரர்களைப் போல் செயல்படுவோம். குழந்தைகளை குழந்தைகளாக வாழ விடுவோம். நமதுப் பேச்சை நிறுத்தி குழந்தைகளின் வாயசைப்புகளுக்குக் காது கொடுப்போம். குழந்தைகளோடு உரையாடுவோம் அந்த உரையாடல்கள் வழியாக கனத்த மௌனங்கள் உடையும். புது வாழ்க்கை பிறக்கும்.
பள்ளிக்குச் சென்று பகுத்தறிவு பெறும் பாலப்பருவக்குழந்தையே! இன்றைய நாள் உனது நாள்.! குறு நடையும், மகிழ்வுணர்வும் கொண்டு குதூகலிக்கும் குழந்தைகள் நாள்!!! குழந்தைகள் சிறப்பானவர்கள். எண்ணான்கு பற்கள் காட்டி தர முடியாத மகிழ்வை அதன் செந்நாக்குப் புன்னகை தந்து விடுகிறது! அழுதால் அரவணைக்கத்தாய், ஆறுதல் தந்து தோள் சாய்க்கத் தந்தை, கைதூக்கி விளையாட மகிழ்வூட்ட தனையன், இடுப்பாசனத்தில் அமர்த்தி சீராட்ட தமையாள், அதன் சிறு அசைவையும் கண்டு ரசிக்க உற்றார், உறவினர் அவர்கள்தான் எவ்வளவு பாக்கியசாலிகள். செவ்விதழ் மேனியும், பாலிலிட்டக் கருந்திராட்சைக் கண்களும் , சிப்பி மூக்கும், செம்பவள வாயும், தளிர்கிளைகளாய் கை கால்களும், குழந்தைகள் என்று நினைக்கும் போதே மனம் மகிழ்வால் நிரம்பும். இவற்றை எல்லாம் எண்ணும்போது நாமும் குழந்தைகளாகவே இருந்திருக்கக் கூடாதா??? என்றெல்லாம் எண்ணத்தோன்றும்.
எங்கே சென்றன நம்முடன் பிறந்தக் குழந்தை மனம்.??? சூழல் மாற்றியதா??? இல்லை சூழலுக்கு ஏற்ப நாம் மாற்றிக்கொண்டோமா?? நம் குழந்தைப் பருவம் பத்துப்பருவங்களால் ஆனது என்று நம் தமிழ் நூல்கள் பாடுகின்றன. (காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர்) பத்துப் பருவங்களும் ஏறுவரிசையில் சென்றால், இளமைப்பருவம். இறங்குவரிசையில் சென்றால் அது முதுமைப்பருவம். ஏதோ ஒருவகையில் நாம் நம் குழந்தைப்பருவத்தை சார்ந்தே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். குழந்தைகளாய்ப் பிறக்கையில் நலமாய்த் தானிருக்கின்றோம். அனைவராலும் விரும்பப்படுகின்றோம். பாராட்டப்படுகின்றோம். ஆனால் காலப்போக்கில் அவை காணாமல் போகின்றன. சில நேரங்களில் நாமே அதைக் காணடித்துவிடுகின்றோம். தானாய் மாறியவை சில வலிய நாமே மாற்றிக்கொண்டவை பல. சிலர் வளர்க்கப்படும் சூழலால் மாறுகின்றோம். மாற்றப்படுகின்றோம் என்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. ''எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே!!! '' என்றொரு திரைப்படப்பாடல் வரிகள் உண்டு. அன்னை இல்லாமல் வளரும் எத்தனையோக் குழந்தைகள் நன்முறையில் தான் வளர்க்கப்படுகின்றன. பெற்றெடுத்த அன்னை மட்டும் அன்னை அல்ல. அன்னை நிலையில் யார் அந்தக் குழந்தையைப் பொறுப்பெடுத்து வளர்க்கிறார்களோ அவர்கள் யாவரும் அன்னையே அவ்வகையில் நாம் அனைவரும் நல்லவர்களாக வளர்க்கப்பட்டவர்களே.
குழந்தை மனம் நம்மில் நிறையவே உண்டு. மகிழ்ச்சிப் பெருக்கில் துள்ளிக் குதிக்கும் போது , விரும்பியதைத் தேடிக் கண்டடைந்ததும் சப்தமிட்டு கத்தும் போது, வளர்ந்த பின்பும் தாயின் கையால் உண்ணும் போது, நண்பனுடன் தோள் சேர்த்து நடக்கும் போது என பல நேரங்களில் நாமும் குழந்தைகளாய் மாறி இருக்கின்றோம். ஆனால் நம்மை நாமே பெரியவர்களாக, உயர்ந்தவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினால் நமக்குள் மறுதுளிர்விடும் குழந்தை மனத்தை நாமே பொசுக்கிவிடுகின்றோம். சிலர் குழந்தை மனம் உடையவர்களாய் மாறுவதற்குப் பதில் குழந்தைத்தனம் உடையவர்களாய் மாறி விடுகின்றனர். குழந்தை மனம் வேறு குழந்தைத்தனம் வேறு. என்பதை உணர்ந்து வாழ பழகிக்கொள்ளவேண்டும். எதையும் ரசித்துப் பார்த்த மனது இன்று அதனை ரசிப்பதற்கே காரணம் தேடுகிறது. எல்லாவற்றையும் சுதந்திரமாக செய்த குணம் இன்று மறைமுகமாகச் செய்ய வழி தேடுகிறது. நமது மகிழ்வை நாமே மனதிற்குள் புதைக்கிறோம். பிறருக்காக வாழாமல் நமக்காக வாழ்வோம் . அன்றிருந்தக் குழந்தை மனது இப்போதும் நம்மிடம் உள்ளது. நாம் அதனை கர்வம் , பெருமை, மரியாதை, செல்வாக்கு, பதவி, கொண்டு மறைத்து வைக்கிறோம். இன்றைய குழந்தைகள் நாள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. நம் எல்லோருக்கும் உரியது. நாமும் குழந்தைகள் தான், நமது தூய மனத்தால், நமது தன்னலமற்ற செயலால், நமது கள்ளம் கபடமற்ற பேச்சால்!!!!
மின்னஞ்சலிலும்,( E.mail) முகப்புப் புத்தகத்திலும் (facebook)குழந்தைகள் படத்தை பார்த்து பதிவிறக்கம் (download)செய்யும் மனிதர்களாய் இல்லாமல் உள்ளத்தில் குழந்தை மனம் கொண்டு வாழ்பவர்களாய் மாறுவோம். இன்றைய குழந்தைகள் தினம் நம்முள் மறைந்துகிடக்கும் குழந்தை மனத்தை வெளிக்கொணர்வதாக இருக்கட்டும். குழந்தைகளை குழந்தைகளாய்ப் பார்ப்போம் அவர்கள் பூக்கள் பூக்கும் பூச்செடிகள் தான் ஆனால் பூக்கப்போகும் பூக்களில் கவனத்தை அதிகம் வைக்காமல் பூக்கள் மலர காரணமாகும் வேர்களில் கவனம் செலுத்துவோம். பின்னர் பூக்கள் தானாய்ப் பூக்கும். குழந்தைகளைக் காப்போம் குழந்தைகளாய் வாழ்வோம் அனைவருக்கும் இனிய இந்திய தேசிய குழந்தைகள் நாள் நல்வாழ்த்துக்கள்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்