இனியது இயற்கை - சுழல்காற்று
மெரினா ராஜ் வத்திக்கான்
சுழல்காற்று (Tornado) என்பது மின்னலையும், இடியையும் உருவாக்கக்கூடிய மேகம் என்னும் முகிலின் உட்பகுதியிலிருந்து தொடங்கி நிலம் வரை நீண்டு, வேகமாக சுழல்கின்ற காற்றின் கூட்டமாகும். கடுமையான இடி, மின்னல், புயல்கள் ஏற்படும் போது உருவாகும் இச்சூறாவளிகள் குறுகிய நேரத்தில் குறுகிய இடத்தில் அதிகமான அழிவை ஏற்படுத்தக்கூடியவைகள். இச்சுழல்காற்றின் மிகப்பெரிய பாதிப்பாக 1999 ஆம் ஆண்டு வீசிய பிரிட்சு கிரேக்கு சுழல்காற்று கருதப்படுகின்றது. மணிக்கு முந்நூறு மைல்கள் வேகத்தில் அடித்த இச்சுழல் காற்றின் அகலம் இரண்டு மைல்கள் இருந்ததுடன் நூறு கிலோமீட்டர்களுக்கு மேல் நகர்ந்து சென்று அதிகப்படியான சேதத்தையும் ஏற்படுத்தியது.
வேகம்
சராசரியான சுழல்காற்றின் சுழற்சி வேகம் மணிக்கு 120 கிலோமீட்டர் முதல் 500 கிலோமீட்டர் வரை வேறுபடலாம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வாறு சுழல்கின்ற காற்றுக் கூட்டத்தின் நடுப்பகுதியில் வளிமண்டல அழுத்தம் மிகக் குறைவாகக் காணப்படுவதால், இக்காற்றானது தரையிலுள்ள பொருட்களை உறிஞ்சி மேலே இழுத்தெடுக்கின்றது. இதனால் மனிதர்கள் வாழ்கின்ற இடங்கள், வாகனங்கள், மரங்கள் போன்றவை அதிகமாக சேதமாகின்றன. புவியின் வடஅரைக் கோளத்தில் உருவாகும் சுழல் காற்று இடப்புறமாகவும், புவியின் தென்அரைக் கோளத்தில் உருவாகும் சுழல்காற்று வலப்புறமாகவும் சுழல்கின்றன. சுழல்காற்றானது இடம்பெயராமல் ஒரேயிடத்தில் சுழன்றும் வீசலாம் அல்லது அதிக வலிமையுடன் சுழற்சியடைந்து கொண்டே முன்னோக்கியும் நகரலாம். (இணையதள உதவி)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்