தேடுதல்

ஏர்வாடி தீ விபத்து ஏர்வாடி தீ விபத்து 

இனியது இயற்கை - ஏர்வாடி தீ விபத்து

மன நோயாளிகள் இந்திய சட்டங்களுக்குப் புறம்பாக, அவர்கள் தூங்கும் படுக்கைகளில் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்ததால், தப்ப இயலாமல் உயிழப்புகள் அதிகரித்தன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஏர்வாடி தீ விபத்து என்பது, 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஏற்பட்ட ஒரு தீ விபத்து ஆகும். இந்த தீ விபத்தால், மதநம்பிக்கை சார்ந்த மனநலக் காப்பகத்தில் 28 மன நோயாளிகள் தீயில் கருகி இறந்தனர். இந்த மன நோயாளிகள் தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி கிராமத்தில் இயங்கி வந்த மொகைதீன் பாதுசா மனநலக் காப்பகத்தில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர். இங்கு ஏராளமான மனநலக் காப்பகங்கள் இருந்தன. நோயாளிகள் பகலில் தடிமனான கயிறுகளால் மரங்களில் கட்டிவைக்கப்பட்டிருப்பார்கள். இரவில் அவர்களது படுக்கைகளில் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பார்கள். தர்காவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், நோயாளிகளைப் பராமரிப்பதாக ஏராளமான காப்பகங்கள் அமைக்கப்பட்டன. ஏர்வாடிக்கு தங்கள் உறவினரைக் குணப்படுத்த அழைத்து வருபவர்களுக்காக இந்த காப்பகங்கள் பெரும்பாலும் நிறுவப்பட்டன.

தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை, தீ பரவிய பின்னர், அங்கு இருந்த 45 நோயாளிகளைக் காப்பாற்ற குறைந்த அளவே வாய்ப்பு இருந்தது, ஏனென்றால் மன நோயாளிகள் இந்திய சட்டங்களுக்குப் புறம்பாக, அவர்கள் தூங்கும் படுக்கைகளில் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தனர். தீயில் இருந்து தப்ப முயன்ற மன நோயாளிகள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததால் தப்ப இயலவில்லை. இந்த சம்பவத்தில் ஐந்து பேர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாதவையாக இருந்தன.

இங்கு செயல்பட்டுவந்த மனநலக் காப்பகங்கள் அனைத்தும் 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதியன்று மூடப்பட்டு, அங்கு இருந்த 500 மனநோயாளிகள் அரசு பராமரிப்பில் கொண்டுவரப்பட்டனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, என்.இராமதாஸ் தலைமையிலான ஓர் ஆணையம், இந்த மரணங்களை விசாரிக்க அமைக்கப்பட்டது. இந்த ஆணையமானது, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீது கவனிப்பு மேம்படுத்தப்பட வேண்டும், மனநலக் காப்பகத்தை அமைக்க விரும்புபவர்கள் அனைத்து வசதிகளும் கொண்டதாக காப்பகத்தை அமைக்க வேண்டும், அதற்கு உரிய உரிமத்தைக் கட்டாயம் பெறவேண்டும் என்று பரிந்துரைத்தது.

2007ஆம் ஆண்டு, தீ விபத்து நேர்ந்த மொகைதீன் பாதுசா மனநலக் காப்பக உரிமையாளர், அவரது மனைவி, மற்றும் இரண்டு உறவினர்களுக்கு குற்றவியல் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 November 2022, 12:02