இனியது இயற்கை - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காற்று
மெரினா ராஜ் – வத்திக்கான்
எங்கும் பரவி எத்திசையிலிருந்தும் நம்மைக் காக்கும் காற்றானது மிக சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. எங்கும் காற்று மாசுபாடு சூழ்ந்துள்ள இக்காலகட்டத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத ஆபத்தில் நாம் இருக்கின்றோம். இதிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சியினை நாம் நாள்தோறும் செய்யவேண்டும் என்று இயற்கையியலாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆழமாக நாம் சுவாசிக்கும் காற்று நம் உடலினுள் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களையும் நன்றாக செயல்படவைக்கின்றது. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் நிறைந்த காற்று, செல்களுக்குத் தேவையான எரிபொருளாகவும் உடலிலுள்ள இரத்தத்தை சுத்திகரிக்கவும் மிக முக்கியமான காரணமாக அமைகின்றது. ஆழமாக சுவாசிக்கும் காற்றானது நம் நுரையீரலைப் பலப்படுத்தி தொற்று நோயிலிருந்தும் நம்மைக் காக்கின்றது.
ஒரு நாளைக்கு ஏறக்குறைய 17,000 முதல் 23,000 முறை சுவாசிக்கும் நாம் எத்தனை முறை அதனை உணர்ந்து சுவாசிக்கின்றோம் என்பதை அறிவதில்லை. சுவாசத்தில் நமது கவனத்தை செலுத்தி அதற்கேற்றப் பயிற்சிகளை முயற்சிக்கும் பொழுது மன அழுத்தம் குறைந்தவர்களாக, இதயத்துடிப்பும் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர்களாக மாறுகின்றோம். நம் நுரையீரலைப் பலப்படுத்த அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பு ஆழ்ந்த மூச்சுப்பயிற்சியினை செய்ய வேண்டும். காலையிலும் இரவில் படுக்கைக்கு செல்லும் முன்பும் 10 முறை ஆழமாக நாம் செய்யும் சுவாசப் பயிற்சியானது, ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்திற்கும் புத்துணர்ச்சியான காலை துயில் எழுதலுக்கும் காரணமாக அமைகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்