தேடுதல்

புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வில் சென்னை பெண்கள் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வில் சென்னை பெண்கள்  

வாரம் ஓர் அலசல் - தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்

புற்றுநோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து, குணப்படுத்துவதை வலியுறுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 7-ந் தேதி, இந்தியா முழுவதும் ‘தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகின்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உடலில் செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபணுக்களில் ஏற்படும் மாற்றத்தால் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுவதாலும், அதேநேரம் பழைய செல்கள் இறக்காமல் இருப்பதாலும் அவைகள் ஒன்று சேர்ந்து புற்றுநோய்க் கட்டியாக மாறுகின்றன. உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் தன்மை கொண்ட இப்புற்றுநோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து, குணப்படுத்துவதை வலியுறுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 7-ந் தேதி, நாடு முழுவதும் ‘தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகின்றது. புற்றுநோயைத் தடுத்தல், முன்கூட்டியே நோயைக் கண்டறிதல் பற்றிய விழிப்புணர்வு போன்றவற்றின்  முக்கியத்துவத்தை இந்நாள் வலியுறுத்துகின்றது.

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாளின் வரலாறு

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் முதன்முதலில் இந்திய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் என்பவரால் செப்டம்பர் 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7 ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்படுகின்றது.  நோயின் ஆரம்பகாலத்தைக் கண்டறிதல் அதிக பாதிப்பைத்தரும் புற்றுநோய்களை தவிர்த்தல் போன்றவற்றை இந்நாள் வலியுறுத்துகின்றது. ஹர்ஷவர்தன், புற்றுநோயை முன்கூட்டியேக் கண்டறிதல் மற்றும் குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சியை ஊக்குவித்து, மாநில அளவிலான புற்றுநோய்க் கட்டுப்பாட்டைத் தொடங்கினார். தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாளில் அரசு மருத்துவமனைகள், வட்டார மற்றும் கிராமப்புற மருத்துவ நிலையங்கள் இலவச பரிசோதனை செய்ய மக்களை ஊக்குவிக்கின்றன. புற்றுநோய் வராமல் தடுத்தல், ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிதல், போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் தகவல் கையேடுகளும் இந்நாளில்  மக்களுக்கு வழங்கப்படுகின்றன. 1975 ஆம் ஆண்டில், இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சை வசதிகளை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் 1984-85ஆம் ஆண்டு, புற்றுநோயைத் தடுப்பதற்கும், முன்கூட்டியே கண்டறிவதற்கும் உந்துதல் அளிப்பதற்காக மாற்றியமைக்கப்பட்டது.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மேரி கியூரி அம்மையாரின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது. 1867 ஆம் ஆண்டு போலந்தின் வார்சாவில் பிறந்த மேரி கியூரி, ரேடியம் மற்றும் பொலோனியத்தைக் கண்டுபிடித்தவர். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் அவர் ஆற்றிய பெரும் பங்களிப்பும், அவரது அயராத பணியும், அணுசக்தி மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான கதிரியக்க சிகிச்சையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. கார்சினோஜென்கள் எனப்படும் ஒருவகை ஊக்கிதான் நமது உடம்பில் புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கிறது. இது புகையிலையில் மட்டுமன்று, அனுதினமும்  நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் வழியாகவும் உடலுக்குள் நுழைகின்றது. செயற்கை வேதிப்பொருட்களான சோடியம் பென்சோயிட், சோடியம் நைட்ரேட் ஆகியவை குழந்தைகளைப் பாதிப்பதுடன், பெரியவர்களுக்கு வயிற்றுப் புற்றுநோய் வரக் காரணமாகவும் அமைகின்றது.   நம் உடம்பில் பாதிக்கப்பட்ட செல்கள் கட்டியாக உருமாறுகின்றன. மரபுவழி, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணிகள் அக்கட்டிகள் சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய்க்கான கட்டியா என்பதைத் தீர்மானிக்கின்றன.

புற்றுநோய் விழிப்பூணர்வு கலை நிகழ்ழ்ச்சிகள் சென்னை
புற்றுநோய் விழிப்பூணர்வு கலை நிகழ்ழ்ச்சிகள் சென்னை

புற்றுநோயின் வகைகள்

புற்றுநோயில் பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டவை. பாதிப்பின் அளவு, குணப்படுத்தலின் கால அளவு, போன்றவற்றை புற்றுநோயின் தன்மையும் வகையும் முடிவு செய்கின்றன. ஆரம்ப நிலையில் நோய் கண்டறியப்பட்டால் நோயை குணப்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் எளிது என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். புற்று நோயானது நம் உடம்பில்  மார்பகம், தலை, கழுத்து,, வாய், கர்ப்பப்பைவாய், நுரையீரல், இரத்தம், பெருங்குடல், வயிறு, கருப்பை, கல்லீரல், மூளை, கணையம், தோல்  போன்றவற்றில் உருவாகின்றது. தீவிரமான நோயான புற்று நோயை, அதன் ஆரம்பக்கட்டத்திலேயே அறிந்துகொள்வதன் வழியாக  நம்மால் அதைக் குணப்படுத்த முடியும். சில அறிகுறிகள் மூலம் நாம் நமக்குப் புற்றுநோய் இருப்பதை அறிய முடியும். ​

வழக்கத்திற்கு மாறாக மிகவும் வேகமாக எடை குறைதல் கணையம், வயிறு, உணவுக்குழாய் அல்லது நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் உருவானதற்கான அறிகுறியாகவும், ​உடலில் வீக்கம் அல்லது கட்டி ஏற்படுதல் வயிறு, மார்பகம் போன்ற இடங்களில் புற்றுநோய்க்குக் காரணமாகவும், ​தொடர் இருமல் நுரையீரல் புற்றுநோய்க்கான காரணமாகவும் அமைகின்றது. ​மச்சம் அல்லது மருவில் மாற்றம், ​சிறுநீரில் இரத்தம், ​உடல் வலி, ​தொடர்ந்து நெஞ்செரிச்சல், ​உணவை விழுங்குவதில் சிரமம், ​இரவில் அதிகம் வியர்த்தல் போன்ற அறிகுறிகள் நம் உடம்பில் புற்று நோய்க் கட்டிகள் வளர்வதற்கான ஆரம்பகால அறிகுறிகளாகும். ​

புற்றுநோய் வகைகள்

50 ஆண்டுகளுக்கு முன்பு வரை புற்றுநோய் என்று சொன்னாலே அது ரத்தப் புற்றுநோய் தான் என்று நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் புற்றுநோயில் ஏராளமான வகைகள் உண்டு. குறிப்பாக, தோல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், விதைப்பை புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் என பல வகைகள் உண்டு. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே சில குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்கும்.

புற்றுநோயின் நிலைகள்

இந்தியாவில், ஆண்டுதோறும் 11 இலட்சம் புதிய புற்று நோயாளிகள் உருவாகின்ற சூழலில் ஒவ்வொரு 8 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயால் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புகையிலைப் புற்று நோயினால் 2018 ஆம் ஆண்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஏறக்குறைய 3,17,928 பேர் இறந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. ஆண்களில் 25 விழுக்காடுக்கும் அதிகமான இறப்புகள்   தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோயினாலும், பெண்களில் 25 விழுக்காடுக்கும் அதிகமான இறப்புகள் மார்பகம் மறும் கர்ப்பப்பைப் புற்று நோயினாலும் ஏற்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் 11,60.000 பேர் புதிய புற்றுநோயாளிகளாக உருவெடுக்கின்றனர் எனவும், 10 ல் ஒருவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டும் 15 ல் ஒருவர் புற்றுநோயால் இறக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.

புற்றுநோய் விழிப்பூணர்வு பேரணியில் கல்கத்தா மகளீர்
புற்றுநோய் விழிப்பூணர்வு பேரணியில் கல்கத்தா மகளீர்

புற்றுநோய்ப் பரிசோதனை மையங்கள்

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் உயிரைக் காப்பாற்ற முடியும். ஒவ்வொரு ஆண்டும், ஒரு உடற்பரிசோதனையை முன்பதிவு செய்து பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அகமதாபாத், அமிர்தசரஸ், அவுரங்காபாத், பெங்களூர், பிலாய், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், டெல்லி-என்சிஆர், எர்ணாகுளம், குவஹாத்தி, ஹைதராபாத், லக்னோ, லூதியானா, இந்தூர், ஜெய்ப்பூர், ஜலந்தர், ஆகிய நகரங்களில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் உள்ளன. கண்ணூர், கொச்சி, கொல்கத்தா, கோலாப்பூர், கொல்லம், கோட்டயம், மதுரை, மொஹாலி, மும்பை, நாக்பூர், பாலக்காடு, பதான்கோட், பாட்னா, பாண்டிச்சேரி, புனே, சாங்லி, சூரத், திருநெல்வேலி, திருச்சி மற்றும் வேலூரில் புற்று நோயை முன்கூட்டியேக் கண்டறியும் பரிசோதனை மையங்கள் உள்ளன.

புற்றுநோய் பற்றிய  உண்மைகள்

இந்தியாவில் ஏற்படும் புற்று நோய்கள் 40 விழுக்காடு புகையிலை தொடர்புடையதாகவும். 20 விழுக்காடு தொற்று தொடர்புடையதாகவும், 10 விழுக்காடு பிற காரணிகளாலும் ஏற்படுகின்றது. இந்தியாவில் 8 நிமிடங்களுக்கு ஒரு பெண் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயினாலும் புதிதாக கண்டறியப்பட்ட  மார்பகப் புற்றுநோயினாலும் இறக்கின்றனர். இந்தியாவில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு புற்றுநோய்கள், விழிப்புணர்வு இல்லாமை, கல்வியறிவின்மை, பயம் மற்றும் தடைகள் போன்ற காரணங்களால் தாமதமான நிலைகளில் கண்டறியப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2018 ஆம் ஆண்டில், புற்றுநோயானது உலகில் சுமார் 96 இலட்சம் மக்கள் உயிர்களைக் கொன்றது இதில் இந்தியாவின் பங்கு ஏறக்குறைய 8.17 விழுக்காடாகும். புற்றுநோய் பற்றிய லான்செட் அறிக்கையின்படி, இதய நோய்க்கு அடுத்தபடியாக புற்றுநோய் இரண்டாவது பெரிய  நோயாகவும், புகையிலையின் பயன்பாட்டினால் 14 வகையான புற்றுநோய்கள் உருவாவதாகவும் தெரிவிக்கின்றது.

வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் புற்றுநோய் பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளது, இருப்பினும் எண்ணற்ற காரணங்களுக்காக தாமதமாக கண்டறிவதால் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. உயிர்களைக் காப்பாற்ற இந்த கொடிய நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் பரப்புவதும் முக்கியம். புற்றுநோயைப் பொறுத்தவரை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதன் வழியாக முற்றிலுமாக குணப்படுத்த முடியும். இதற்கு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

பாரம்பரிய உணவுப்பழக்கத்தை மறந்து கண்டதை கண்ட நேரத்தில் உண்டு, நேரங்கெட்ட நேரத்தில் உறங்கி உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை நாம் மாற்றி வைத்து விட்டதால் புற்றுநோயின் பாதிப்புகள் அதிகமாகின்றன. இதனைத்தடுக்க, சரியான உணவுப் பழக்கத்தையும் வாழ்க்கை முறையையும் கடைபிடிக்க வேண்டும். மோசமான உணவுப் பழக்கம் நிச்சயமாகப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். சரியான அளவில் கனிகளையும் காய்கறிகளையும் உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம். உடற்பயிற்சி மூச்சுப் பயிற்சி செய்து நோயில்லா வாழ்வு வாழ்வோம். பிறரையும் வாழத்தூண்டுவோம். விழிப்புணர்வு பெறுவோம். விழிப்புணர்வு அளிப்போம். அனைவருக்கும் இனிய தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் நல்வாழ்த்துக்கள்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2022, 13:16