Plaza de Mayo அன்னையர் அமைப்பின் நிறுவனர் Hebe de Bonafini மரணம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
அர்ஜென்டீனா நாட்டில் நடைபெற்ற இராணுவ சர்வாதிகார ஆட்சியின்போது காணாமல்போனவர்களின் அன்னையர்க்காக, 1977ஆம் ஆண்டில் அமைப்பு ஒன்றை உருவாக்கி, அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாகப் போராடி வந்த மனித உரிமை ஆர்வலர் Hebe de Bonafini அவர்கள், தனது 93வது வயதில் நவம்பர் 20, இஞ்ஞாயிறன்று இறைபதம் சேர்ந்தார்.
அர்ஜென்டீனா நாட்டவரான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் பேராயராகப் பணியாற்றியபோது அவரைப் பல ஆண்டுகளாக குறைகூறிவந்த Hebe de Bonafini அவர்கள், 2016ஆம் ஆண்டில் வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில் திருத்தந்தையைச் சந்தித்தபின்னர், அவரிடம் மன்னிப்பு கேட்டு, சமாதானம் ஆனார்.
அச்சந்திப்புக்குப் பின்னர் திருத்தந்தையோடு கடிதங்கள் மற்றும், செய்திகள் வழியாகத் தொடர்பு வைத்திருந்தார், Hebe de Bonafini.
அர்ஜென்டீனாவில் 1975ஆம் ஆண்டிலிருந்து 1983ஆம் ஆண்டுவரை நடைபெற்ற உள்நாட்டுப் போரில், Hebe de Bonafini அவர்களின் காணாமல்போன இரு மகன்களும் கண்டுபிடிக்கப்படவே இல்லை, பின்னர் அவ்விருவரும் இறந்துவிட்டனர் என்று யூகிக்கப்பட்டது. இப்போரின்போது ஏறத்தாழ முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர், அல்லது கட்டாயமாக காணாமல்போயினர்.
இச்சர்வாதிகார ஆட்சிக்குப்பின்னர், அப்போரில் காணாமல்போனவர்கள் பற்றிய உண்மை வெளியிடப்படவேண்டும் மற்றும், நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக இவர் தொடர்ந்து போராடி வந்தார். இவர் மனித உரிமைகளுக்காக அயராது போராடினார் என்று கூறி, அவர் மரணமடைந்ததை முன்னிட்டு, அர்ஜென்டீனா அரசுத்தலைவர் Alberto Fernández அவர்கள், தேசிய அளவில் மூன்று நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுமாறு அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்