வாரம் ஓர் அலசல் - உலக மாணவர்கள் நாள்
மெரினா ராஜ்- வத்திக்கான்
நாட்டின் எதிர்காலச் செல்வங்களாக, நாளைய தலைவர்களாக, வருங்காலத்தை வளமாக அமைக்க உதவுபவர்கள் மாணவர்கள். இத்தகைய வலிமைமிகுந்த மாணவர்கள் நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது. கனவு காணுங்கள் என்று கூறியவரும், தூங்கும் போது வருவதல்ல, உங்களை தூங்க விடாமல் செய்வதே கனவு என்றவருமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளையே உலக மாணவர்கள் நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி மகிழ்கின்றோம். இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரான அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் என்னும் இயற்பெயர் கொண்ட ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள், அக்டோபர் 15 ஆம் நாள், 1931 ஆம் ஆண்டு இந்தியாவின் பாம்பன் தீவில் உள்ள ராமேஸ்வரம் என்னும் இடத்தில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். உள்ளுரில் தனது பள்ளிப்படிப்பை முடித்த அவர், திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்று, சென்னை தொழில் நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலில் பட்டப்படிப்பையும் முடித்தார். அதன் பின் விண்வெளி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என்னும் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் நிறுவனத்தில் சேர்ந்து விஞ்ஞானியாக பணியாற்றினார். 1990 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் மிகவும் பிரபலமான அணு விஞ்ஞானியாக திகழ்ந்து விளங்கியவர்களில் இவர் முக்கியமானவர்.
2002 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி, இந்தியாவின் 11 வது குடியரசுத்தலைவராக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கலாம் அவர்கள், தன்னுடைய ஐந்தாண்டு குடியரத்தலைவர் பதவிக் காலத்தில், மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டு அனைவராலும் "மக்கள் ஜனாதிபதி" என்று அன்புடன் அழைக்கப்பட்டார். குடியரசுத்தலைவர் பதவிக்குப் பின் பல உயர் நிறுவனங்களில் சொற்பொழிவாளராக பங்கேற்றதுடன், ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பேராசிரியராகவும் (Indian Institute of Management Shillong) பணியாற்றினார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் கெளரவ உறுப்பினராகவும், இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் அதிபராகவும் விளங்கிய கலாம் அவர்கள் 40 பல்கலைக்கழகங்களில் இருந்து ஏழு கௌரவ முனைவர் பட்டங்களைப் பெற்று திறமையுடன் விளங்கினார். 2015 ஆம் ஆண்டு ஜூலை 27, ஆம் நாள் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் சொற்பொழிவு ஆற்றும் போது மாரடைப்பு ஏற்பட்டு பெத்தானி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்டு காலமானார்.
திருமணம் செய்யாமல் தன்வாழ் நாள் முழுவதையும் கல்விக்காகவும் கல்விப் பணிக்காகவும் தன்னை அர்ப்பணித்த கலாம் அவர்கள் எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும் தன்னை ஓர் ஆசிரியராகவேக் காட்டவே விழைந்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்த கலாம் அவர்களின் வாழ்க்கையிலிருந்து ஏராளமான நற்செயல்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றே அவரது பிறந்த நாள் உலக மாணவர்கள் நாளாக கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் ஆன கலாம், தனது வாழ்நாளில் பல சாதனைகளை படைத்தவர், நமது கடந்த காலம் எதிர்காலத்தை வரையறுக்காது என்பதற்கு அவர் வாழும் அடையாளமாக இருந்தார். அவருடைய வாழ்க்கையிலிருந்து முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொண்டு மாணவர்கள் ஒவ்வொருவரும் சிறக்க, இந்நாளில் வலியுறுத்தப்படுகின்றனர். கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பது, அவர் எழுதிய புத்தகங்களை வாசிப்பது, பிறரை வாசிக்க உற்சாகமூட்டுவது, அவரது ஆழமான கருத்துக்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வது, சமூக ஊடகங்களில் உலக மாணவர் தினம் குறித்த விழிப்புணர்வை #worldstudentsday என்று பதிவிடுவது போன்றவற்றின் வழியாக இந்நாளை பலரும் சிறப்பிக்கின்றனர்.
A.P.J. அப்துல் கலாம் அவர்களின் மேற்கோள்கள்:
கலாம் அவர்கள் தான் நிகழ்த்திய சொற்பொழிவுகளிலும் கருத்தரங்குகளிலும் கல்வி ஒன்றையே மாணவர்களுக்கு அதிகமாக வலியுறுத்தினார். "உங்கள் முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்க வேண்டாம், ஏனென்றால் இரண்டாவது வெற்றியில் நீங்கள் தோல்வியுற்றால், உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்ல அதிக உதடுகள் காத்திருக்கின்றன."
"உங்கள் கனவுகள் நனவாக அது நடந்தேறியது போன்ற கனவு ஒன்றை நீங்கள் காண வேண்டும்".
"வெற்றி பெற உறுதியுடன் இருங்கள் வெற்றி என்பது ஒரு சிறப்பான, தொடர்ச்சியான செயல்முறை, அது ஒரு விபத்து அல்ல".
"உங்கள் பழக்கங்களை மாற்றாமல் உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மாற்ற முடியாது. பழக்கவழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தை மாற்றும்." என்பன போன்றவை கலாம் அவர்கள் அதிகமாக வலியுறுத்தும் கருத்துக்களாகும்.
பள்ளி நாட்களில் கலாம் ஒரு சராசரி மாணவராகவே கருதப்பட்டாலும் இந்தியாவின் மிகவும் பிரபலமான அணு விஞ்ஞானியாகத் திகழ்ந்தவர். நமது பிறப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும் கடந்த காலத்தை வென்று எதிர்கால வாழ்வில் சிறந்து விளங்க முடியும் என்பதை தன் வாழ்வால் உண்மையாக்கிக் காட்டியவர். மக்களின் ஜனாதிபதி என்று அழைக்கப்பட்ட கலாம் அவர்கள், தன்னுடைய பதவிக் காலத்தில், மக்களின் இதயங்களைத் தன் நற்செயல்களால் தொட்டவர். ஊழல் மற்றும் சுயநல மனதோடு செயல்படும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் கலாம் அவர்கள் வித்தியாசமான பாதையை வகுத்து, நாட்டை நல்லமுறையில் வழி நடத்தி வரலாற்றை மாற்றியவர். விஞ்ஞானியாக பணியாற்றிய காலத்தில், "இந்தியாவின் ஏவுகணை நாயகன்" என்று அழைக்கப்பட்ட அவர், பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குதல் மற்றும் வாகன தொழில்நுட்பத்தை ஏவுதல் ஆகியவற்றில் பணியாற்றியதோடு மட்டுமல்லாமல், 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற பொக்ரான்-II அணுகுண்டு சோதனைகளிலும் பெரும் பங்கு வகித்தார்.
தன் வாழ்நாளின் பெரும்பங்கை மாணவர்கள் நலனுக்காக பயன்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் அவர்கள் தன் வாழ்நாள் முழுக்க மாணவர்கள் மத்தியில் சிறந்த முன்னுதாரணமாக விளங்கியவர். இவரது பிறந்த நாள் ஐநா சபையால் 2010 ஆம் ஆண்டு அங்கிகரிக்கப்பட்டு உலக மாணவர்கள் நாளாக அறிவிக்கப்பட்டது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, கல்வியின் மீது அளவற்ற ஆர்வம் கொண்டு, விளங்கிய கலாம் இந்திய விண்வெளித் துறையான ISRO.வில் மிகச்சிறப்பாக பணியாற்றியவர். இந்திய விண்வெளித் துறையின் மைல் கல்லாக, அனைத்து அக்னி ஏவுகணைகளுக்கும் முன்னோடியாக விளங்கிய அக்னி-1 திட்டத்திற்கு காரணமாக அமைந்தவரும், இவரே. இந்தத் திட்டத்தில் இவரது செயல்பாடு இந்தியா முழுக்க அனைவராலும் பாராட்டப்பட்டது. விண்வெளி துறை ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கலாம் இன்று வரையிலும் இந்தியாவின் மிக முக்கியமான, மறக்கமுடியாத குடியரசுத் தலைவர்களின் வரிசையில் இடம்பெற்று சிறந்து விளங்குகின்றார். அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட மே 26 ஆம் நாளையே சுவிட்சர்லாந்து நாடு அறிவியல் நாளாகக் கொண்டாடி மகிழ்கின்றது . கலாம் அவர்கள் இந்திய மக்களால் மட்டுமின்றி உலக நாட்டினர் அனைவராலும் விரும்பப்பட்ட மனிதர் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணமாகும்.
கலாம் பெற்ற விருதுகளும், எழுதிய புத்தகங்களும்
அக்னிச் சிறகுகள், எனது பயணம், இந்தியா 2020 ஆகியவை கலாம் தனது வாழ்நாளில் எழுதிய மிகமுக்கியமான பிரபலமான புத்தகங்களாகும். பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இவரது படைப்பும் வாழ்வும் பாடத்திட்டங்களாகவும் உள்ளன. பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா என இந்தியாவின் மிக உயரிய விருதுகளைப் பெற்ற சிறந்த தலைவராக திகழ்ந்தவர். சிறந்த மனித நேயரும் ஆசிாியருமான அப்துல் கலாம் அவா்களின் நினைவாக, உலக மாணவா்கள் நாளானது எல்லா பள்ளிகள் மற்றும் கல்லூாிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு பள்ளியும், கல்லூாியும் தங்களுக்கு விருப்பமான வகையில் வினாடி வினா, பேச்சுப் போட்டி, கதை, கவிதை, கட்டுரை, ரங்கோலி, நடனம், அறிவியல் ஆராய்ச்சிகள் போன்றவற்றின் வழியாகக் கொண்டாடி மகிழ்கின்றன. அப்துல் கலாம் பற்றிய, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் தலைப்புக்களில் நடத்தப்படும் இப்போட்டிகள் , கலாம் அவா்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவருடைய ஆக்கப்பூா்வமான பணிகளை மாணவா்கள் முன் காட்சிப்படுத்தி, எதிா் காலத்தில் சிறந்த தலைவா்களாக அவா்கள் வரவேண்டும் என்று உற்சாகப்படுத்தும் வகையில் நடத்தப்படுகின்றன. இதன் வழியாக இந்நாளில் கலாம் அவா்களுக்கு தங்களது நன்றிகளையும், அஞ்சலியையும் தொிவித்து மகிழ்கின்றனர்.
"அழிவை நீக்கக்கூடிய ஆயுதமாம் அறிவு நமக்குள் இருக்கும் உறுதியான கோட்டையாகும். அதை எவராலும் அழிக்க முடியாது."கனவு கண்டு அக்கனவை நனவாக்க வேண்டும் என்று உழைப்பவா்களுக்கு இப்பிரபஞ்சம் நல்லவற்றை மட்டுமே செய்யும்" "என்று வலியுறுத்திய அப்துல் கலாம் அவர்களின் வார்த்தைக்கிணங்க நம்முடைய எதிர்காலத்தை வளமாக மாற்றியமைக்க முயற்சிப்போம். நம் அனைவருக்கும் ஒரே மாதிாியான திறமைகள் இருப்பதில்லை. ஆனால் நம்மிடம் இருக்கும் திறமைகளை வளா்த்துக் கொள்வதற்கு சமமான வாய்ப்புக்கள் இங்கு உள்ளன என்பதை உணர்ந்து, கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்துபவர்களாக, வாய்ப்புக்களை உருவாக்குபவர்களாக வாழ்ந்து சிறப்போம். அனைவருக்கும் உலக மாணவர்கள் நாள் நல்வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்