இனியது இயற்கை - அண்மை 'ஹின்னம்னோர்' புயல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக உலகில் 85 புயல் காற்றின் பாதிப்புகள் இடம்பெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்ற நிலையில், இவ்வாண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி தென் கொரியாவில் இடம்பெற்ற ஹின்னம்னோர் புயல் பற்றிக் காண்போம். மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவான சக்தி வாய்ந்த இந்தப் புயல், ஜப்பான், சீனாவின் கிழக்குப் பகுதி, மற்றும் தென் கொரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டதால் பெருமெண்ணிக்கையில் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ஹின்னம்னோர் என்று பெயரிடப்பட்ட அந்தப் புயல் தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் ஜெஜூ தீவு கடற்பரப்பை அடைந்து, துறைமுக நகரான பூசனுக்கு வடமேற்கில் கரையைக் கடந்தது. ஏறக்குறைய 144 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதால், மின் கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் கடுமையாகச் சேதமடைந்தன. கனமழை, வெள்ளம், சூறாவளிக் காற்று ஆகியவை காரணமாக தென்கொரியாவின் தெற்குப் பகுதி, கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், புயலால் அவசரநிலை அறிவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்தன.
புயல், மழை, வெள்ளம் ஆகியவற்றால் மூன்று பேர் உயிரிழந்தனர், 8 பேர் காணாமல்போயுள்ளனர். புயல், மழை காரணமாக 600க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன, 250க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டன. தென் கொரியாவில் கரை கடந்த ஹின்னம்னோர் புயல், அண்டை நாடான ஜப்பானின் தென்மேற்கு நகரமான ஃபிகுவாகாவையும் தாக்கியது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்