தேடுதல்

புனித பூமி புனித பூமி  

புனித பூமியில் அமைதி நிலவ ஐ.நா. விண்ணப்பம்

West Bank பகுதியில் இஸ்ராயேல் துருப்புக்களால் தாக்கப்பட்டு படுகாயமுற்ற 433 பாலஸ்தீனியர்களில் குறைந்தபட்சம் 45 பேர் சிறார்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

புனித பூமி பகுதியில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் முடிவுக்குவந்து, அங்கு அமைதி நிலவ வேண்டும் என ஐ.நா. நிறுவனம் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது.

அண்மைக்காலங்களில் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ராயேல் துருப்புகளுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரித்துவருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அமைப்பு, 27 செப்டம்பருக்கும் 10 அக்டோபருக்கும் இடைப்பட்ட கால அளவில் 5 குழந்தைகள் உட்பட 13 பாலஸ்தீனியர்களும் ஓர் இஸ்ராயேல் இராணுவவீரரும் கொல்லப்பட்டதையும் 433 பாலஸ்தீனியர்களும் 7 இஸ்ராயேலர்களும் காயமடைந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.

West Bank பகுதியில் குடியமர்த்தப்பட்ட இஸ்ராயேல் மக்கள், பாலஸ்தீனியர்கள், மற்றும் இஸ்ராயேல் படைகள் தொடர்புடைய இவ்வன்முறை உயிரிழப்புகளைப் பார்க்கும்போது, கடந்த 16 ஆண்டுகளில் குறுகிய காலக்கட்டத்தில் அதிக இழப்புகள் ஏற்பட்டது இப்போதுதான் எனவும் கூறப்பட்டுள்ளது.

Jenin மற்றும் Al Jalazun புலம்பெயர்ந்தோர் முகாம்களில் இஸ்ராயேல் துருப்புகள் நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஒரு சிறுவன் உட்பட 9 பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இது தவிர, பல்வேறு பகுதிகளில் பாலஸ்தீனியர்கள் இஸ்ராயேல் துருப்புகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

West Bank பகுதியில் இஸ்ராயேல் துருப்புக்களால் தாக்கப்பட்டு படுகாயமுற்ற 433 பாலஸ்தீனியர்களில் குறைந்தபட்சம் 45 பேர் சிறார்கள்.

குடியமர்த்தப்பட்ட இஸ்ராயேல் மக்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதல்களையொட்டி இஸ்ராயேல் துருப்புகளால் நடத்தப்பட்ட 145 தேடுதல் வேட்டைகளில் 13 குழந்தைகள்  உட்பட 127 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர கிழக்கு எருசலேம் பகுதியில் பாலஸ்தீனியர்களின் 24 கட்டிடங்களும் இடிக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 October 2022, 13:50