வாரம் ஓர் அலசல் - அனைத்துலக தொண்டு தினம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
உனக்கு பெருமையும் உற்சாகமும் வேண்டுமா பிற மனிதர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு தொண்டு செய் அவை இரண்டும் உன்னைத்தேடி வரும் என்பார் தந்தை பெரியார். இத்தகைய தொண்டின் மேன்மையை உணர்த்த, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, பாதுகாக்க ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி அனைத்துலக தொண்டு தினமாக கொண்டாடப்படுகின்றது. தொண்டு, சேவை, அல்லது பணி என்பது சிறியதாக அல்லது பெரியதாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. செய்வதற்கு நல்ல மனமிருந்தால் போதுமானது.
தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு பணி செய்வதை முழு மூச்சாகக் கொண்டு செயல்பட்ட அன்னை தெரேசாவை போற்றும் விதமாக அவர் இறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதியை அனைத்துலக தொண்டு தினமாக ஐக்கிய நாடுகள் அவையானது கொண்டாட அறிவித்தது. சமூகத்தில் பாதிக்கப்பட்ட, அடிப்படை வசதிகளற்ற, யாருமற்ற அனாதைகளை கடவுளின் குழந்தைகளாகக் கருதி பணியாற்றி ஏழைகளின் ஏழையாக வாழ்ந்தவரின் வாழ்க்கை வரலாற்றையும் பணியின் சிறப்பையும் இன்று நாம் காணலாம்.
வாழ்க்கை வரலாறு
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள் என்ற புகழ்வாய்ந்த பொன்மொழிகளுக்கு சொந்தக்காரரான அன்னை தெரசா அவர்கள் 1910ம் ஆம் ஆண்டு தென் கிழக்கு நாடான அல்பேனியாவில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிறந்தார். தந்தை நிக்கல் மற்றும் தாய் டிரானா போஜாக்சியு இவர்களின் மூன்றாவது மகளாகப் பிறந்த இவர் ஆக்னஸ் கொன்சா போஜாக்சியு (Anjezë Gonxhe Bojaxhiu) என்னும் இயற்பெயரைப் பெற்றார். இவர் தன்னுடைய எட்டாவது வயதில் தந்தையை இழந்து தாயினால் எல்லாவிதமான பண்பு நலன்களும் கற்பிக்கப்பட்டு வளர்ந்தார். இளம்வயதிலேயே படிப்பில் அதிக விருப்பம், நற்குணம், திறமைகள் கொண்ட இவர் தனது பன்னிரண்டாம் வயதிலேயே கிறிஸ்தவ மறைப்பணியாளார்களாலும் அவர்களது பணிகளாலும் கவரப்பட்டு துறவு வாழ்வு வாழ முடிவெடுத்தார்.
தன்னுடைய பதினெட்டாம் வயதில் லொரெட்டோ சபையில் தன்னை ஒரு பணியாராக இணைத்துக் கொள்ள “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்ற திருச்சொற்களை நினைவுபடுத்தி தன் தாயினால் வழியனுப்பி வைக்கப்பட்டார். 1931 மே 24 அன்று முதல் வார்த்தைப்பாட்டை அளித்த இவர் லிசியே நகர் புனித தெரேசாவின் பெயரை தனது பெயராகத் தேர்ந்து கொண்டார். கிழக்குக் கொல்கத்தா லொரேட்டோ துறவற இல்லத்தின் பள்ளியில் கற்பித்துக் கொண்டிருந்த அன்னை 1937, மே 14 ஆம் தேதி தன்னுடைய நித்திய வார்த்தைப்பாட்டையும் அளித்தார். பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிப்பதை விரும்பினாலும் கொல்கத்தா நகரைச் சுற்றியிருந்த வறுமை இந்து-முஸ்லீம் வன்முறையினால் ஏற்பட்ட வன்முறைச் சூழல் போன்றவை அன்னையின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. செப்டம்பர் 10,1946 ஆம் ஆண்டு கொல்கத்தாவிலிருந்து டார்ஜிலிங்கிற்கு தன்னுடைய ஆண்டு தியானத்திற்காக பயணம் செய்ய இருந்த இவர் தாகமாயிருக்கிறேன் என்ற கொல்கத்தா நகர் ஏழை முதியோரின் குரலினால் தூண்டப்பட்டு அழைத்தலுக்குள் அழைத்தலாய் ஆன்மீக பலம் பெற்றார்.
கொல்கத்தா நகரின் வறுமை, அங்கு வாழ்ந்த மக்களின் அடிப்படை வாழ்க்கை முறை போன்றவை துறவற இல்லத்தின் சொகுசு கட்டிடத்தில் இவரை இருக்க விடவில்லை. தனது வாழ்வும் பணியும் துன்புறும் இத்தகைய மக்களுக்கே என்று எண்ணியவர் லொரேட்டொ சபையில் இருந்து விலகி மக்கள் பணி செய்ய 1948 ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஏழை மக்கள் வாழும் சேரிப்பகுதிகளுக்குள் செல்ல ஆரம்பித்தார். கையில் 5 ரூபாய் பணமும் நீல நிறக் கோடிட்ட வெள்ளை நிற சாதாரண புடவையில் சென்ற அவரை மக்கள் உடனடியாக ஏற்கவில்லை. சேரிகளில் வாழும் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க தொடங்கிய அவரின் தன்னலமற்ற செயலைக் கண்டு நாளடைவில் மக்கள் மதித்துப் போற்றத் தொடங்கினர். உறவுகளில் சிறந்த உறவாம் தாயின் அன்பை அவரிடத்தில் கண்டு அன்னை என்றே அழைக்கலாயினர்.
அன்னையின் தொடக்க காலம் மிகவும் துன்பம் நிறைந்ததாகவும், ஏழைகளுக்கு உணவு அளிக்க முடியாமல் பலரிடம் கையேந்தி உதவிகள் கேட்கும் நிலை கொண்டதாகவும் இருந்தது. சேரியில் வாழும் மக்களின் குழந்தைகளுக்கு முதலில் கல்விப்பணியைத் தொடங்கிய அன்னை அதன்பின் ஆதரவற்றோர், நோயாளிகளுக்கும் பணிசெய்யத் தொடங்கினார். இவரின் மாணவர்கள் சிலர் இவரது செயலால் ஈர்க்கப்பட்டு துறவறம் புகுந்தனர். வீதிகள் மற்றும் தெருவோரங்களில் நோயினாலும் வறுமையினாலும் துன்புற்று, வாழ்வின் இறுதி நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு அடைக்கலமும் ஆறுதலும் கொடுத்து, அவர்கள் இறைவனில் இன்பமாக இளைப்பாறுதல் அடைய வழிவகுத்தார். ஏழை எளிய மக்களுக்கு தொண்டாற்றுவதே தங்களது மகத்தான பணி என்னும் விருதுவாக்கைக் கொண்டு பிறரன்பின் பணியாளர்கள் சபையை உருவாக்கினார். இவர்களது தன்னலமற்ற பணியாலும் மனதாலும் உலகின் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் ஈர்க்கப்ப்பட்டு பணி செய்யவும் பண உதவிகளைச் செய்யவும் முன்வந்தனர். தனி ஒரு நபரால் தொடங்கப்ப்பட்டு 10 நபர்களைக் கொண்டு வளர்ந்த இச்சபை இன்று 5000க்கும் மேற்பட்ட பிறரன்பின் பணியாளர்கள் சபை அருள்சகோதரிகளைக் கொண்டு இயங்கி வருகின்றது.
1950 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்சபையானது பசியால் வாடுபவர்களுக்கு மட்டுமல்லாமல் வீடின்றித் தவிக்கும் மாற்றுத்திறனாளிகள், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என அனைவருக்கும் ஆதரவளித்தது. தீண்டாமையும், தொழுநோயும் மக்களை வாட்டிவதைத்தபோது பிறர் பார்க்க அருவருப்பு கொள்ளும் தொழுநோயாளர்களைத் தொட்டுத் தூக்கிப் பணிவிடைபுரிந்தார் அன்னை தெரேசா. சிறைக்கைதிகள், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என அவரது பணிகளின் எல்லை விரிவடைந்து கொண்டே சென்றது. அதன் பலனாக சிறந்த தொண்டிற்கான விருதாக பாரத ரத்னா, பத்மஸ்ரீ, நோபல் பரிசுகளைப் பெற்றார். செபிக்கும் உதடுகளை விட செய்யும் கரங்களே மேலானவை என்ற போதிலும், பணி செய்வதற்கான ஆற்றலை அன்றாட செபத்தின் வழியாக, நற்கருணைப் பிரசன்னத்தின் வழியாகப் பெற்ற அன்னை, செபிக்காமல் தனது சபைசகோதரிகள் செய்யும் பணி சமூகப்பணியாகும் அது இறைப்பணியாகாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பணி செய்து பல்லாயிரக்கணக்கான மக்களை தன் அன்பினால் ஈர்த்த அன்னை தெரேசா, வயது மற்றும் உடல் நிலைகுறைபாடு காரணமாக தனது 87வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். 1997 செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி இந்தியா ஆசிரியர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்த நேரத்தில் அன்பின் பாடத்தை இவ்வுலக மாணவர்களாகிய நமக்கு தன் வாழ்க்கை அனுபவத்தின் வழியாக கற்பித்து மறைந்தார். 2003 ஆம் ஆண்டு புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டு, 2016 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். தான் வாழ்ந்த போதும் மறைந்த போதும் மூன்று சேலை, ஒரு சிலுவை, ஒரு ஜெபமாலை மட்டுமே வைத்திருந்த அன்னை, அன்பை மட்டும் அமுத சுரபியாக அள்ளி அள்ளி வழங்கி இருக்கிறார். அன்னை தெரசாவின் நினைவு நாளான இன்று, நாம் உடலை வருத்தி ஏழைகளுக்கு பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நமக்கு வேண்டியவர்களிடம் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் நம் வாழ்வு வளமாகும். அனைத்துலக தொண்டு தினத்தை நினைவு கூறும் இந்நாளில் புனித அன்னை தெரசாவைப் பற்றியும் அவரது பணி வாழ்வைப் பற்றியும் அறிந்த நாம் அவரைப்போல வாழ முயல்வோம்.
நாம் வாழுகின்ற சமூகத்தின் மீதான பொறுப்பை அதிகரிக்க, மேம்படுத்த தொண்டு நிறுவனங்கள் இன்றைய நாளில் பல்வேறு சமூக விழிப்புணர்வு நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள், உணவு உடை வழங்கும் நிகழ்வுகள் போன்றவற்றை ஏற்பாடு செய்கின்றன. நம்முடைய பணம், உணவு, உடை, பணி, நேரம் போன்றவற்றைப் பிறரோடு பகிரும் ஒரு சிறிய முயற்சியின் வழியாக நாட்டின் மிக மோசமான பிரச்சனைகளான பசி, வறுமை, பற்றாக்குறை, போன்றவற்றைத் தீர்த்து, துன்புறும் ஏழை மக்களுக்கு வாழ்வு மற்றும் ஆரோக்கியமான சுற்றுசூழல் போன்றவற்றைக் கொடுக்க முயற்சி செய்வோம். இதன் வழியாக பசி, நோய், வறுமை போன்றவற்றை எதிர்த்துப் போராடும் மக்களை, குறிப்பாக குழந்தைகளை பாதுகாக்க நாம் உதவ முயற்சிப்போம். தொண்டு செய்வதற்கும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கும், நம்முடைய பணத்தை மட்டுமல்ல நேரத்தைப் பகிர்வதன் வழியாக தொண்டாற்றி மகிழ்வோம். பிறரன்புப் பணிகள் செய்து, படைத்த இறைவனைப் போற்றிப் புகழ்வோம். அனைவருக்கும் புனித அன்னை தெரேசா நினைவு நாளில் அனைத்துலக தொண்டு தின நல்வாழ்த்துக்கள். பிறரன்புப் பணியினை கற்பிப்பதன் வழியாக செய்து கொண்டிருக்கின்ற ஆசிரியப் பெருமக்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். (இணையதள உதவி).
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்