தேடுதல்

அக்கோன்காகுவா மலை  அக்கோன்காகுவா மலை  

இனியது இயற்கை: மேற்குலகின் உயரமான அக்கோன்காகுவா மலை

அக்கோன்காகுவா மலை, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களில் அமைந்திருக்கின்ற மலைகளைவிட மிக உயரமானதாகும்

மேரி தெரேசா: வத்திக்கான்

அக்கோன்காகுவா (Aconcagua) மலை, தென் அமெரிக்காவின் அர்ஜென்டீனா நாட்டின் மேற்கே மென்டோன்சா மாநிலத்தில், சிலே நாட்டு எல்லையில் அமைந்துள்ளது. ஆன்டெஸ் மலைத்தொடரில் கடல்மட்டத்திலிருந்து 6,962 மீட்டர் உயரத்தில் உள்ள இம்மலை, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களில் அமைந்திருக்கின்ற மலைகளைவிட மிக உயரமானதாகும். இம்மலை, உலகிலுள்ள ஏழு முக்கிய மலைச் சிகரங்களில் ஒன்றாகும். இந்தியாவின் இமய மலைத்தொடரில் மட்டும்தான், அக்கோன்காகுவா மலைச் சிகரத்தைவிட மிக உயர்ந்த சிகரங்கள் உள்ளன. அக்கோன்காகுவா மலையில் நிறைய பனி ஆறுகள் உள்ளன. அவற்றில் Ventisquero Horcones  மிகப்பெரிய பனி ஆறு, ஏறத்தாழ 3,600 மீட்டர் உயரத்திலிருந்து பாய்கின்றது, மற்றும், பத்து கிலோ மீட்டர் நீளத்தையும் அது கொண்டிருக்கிறது. இம்மலையிலுள்ள பனி ஆறுகளில் போலந்து உறைபனி ஆறு மிகவும் புகழ் பெற்றது. இதில் 1934ஆம் ஆண்டில் போலந்து நாட்டினர் வழிகண்டுபிடித்து ஏறியதன் நினைவாக இப்பெயர் அந்த ஆறுக்கு சூட்டப்பட்டுள்ளது.

அக்கோன்காகுவா என்ற பெயரில் இம்மலை அழைக்கப்படுவதற்கு காரணங்கள் எவற்றையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை, ஆயினும், "அடுத்த பக்கத்திலிருந்து வருகின்ற" என்று பொருள்படும் அக்கோன்குவா ஆற்றைக் குறிக்கும் Mapudungun Aconca-Hue என்பதிலிருந்து இம்மலை இப்பெயரால் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இம்மலையில் ஏறுபவர்களில் ஏறத்தாழ 75 விழுக்காட்டினர் வெளிநாட்டவர் எனவும், 25 விழுக்காட்டினர் அர்ஜென்டீனா நாட்டவர் எனவும் ஒரு குறிப்பு கூறுகின்றது. வெளிநாட்டவரில், அமெரிக்க ஐக்கிய நாடு, ஜெர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இம்மலையில் அதிகம் ஏறுகின்றனர். 1883ஆம் ஆண்டில் ஜெர்மனியின் புவியியலாளரும், நாடுகாண் பயணியுமாகிய Paul Güssfeldt என்பவர் தலைமையில் ஐரோப்பியர்கள் இம்மலைச் சிகரத்தில் முதன் முதலில் ஏறுவதற்கு முயற்சி செய்தனர். ஆயினும், மலையேறுவதில் சிறந்தவரான Edward FitzGerald என்ற பிரித்தானியரின் வழிநடத்துதலில் 1897ஆம் ஆண்டில் ஐரோப்பியர்கள் முதன்முதலில் இம்மலை சிகரத்தை அடைந்தனர் என பதிவுசெய்யப்பட்டுள்ளது. (நன்றி: விக்கிப்பீடியா)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2022, 15:23