அரசி 2ம் எலிசபெத், பணிக்காலத்தில் பெரும் மாற்றத்தைக் கொணர்ந்தவர்
மேரி தெரேசா: வத்திக்கான்
பிரித்தானியாவின் தலைவராக நீண்ட காலம் ஆட்சிசெய்துவந்த அரசி 2ம் எலிசபெத் அவர்களின் இம்மண்ணுலக மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள, ஐ.நா. வின் தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், இனிமையான பண்பு, மாண்புநிறை வாழ்வு மற்றும் பணி அர்ப்பணம் ஆகியவற்றுக்காக அரசி 2ம் எலிசபெத் அவர்கள் உலகெங்கும் வியந்து போற்றப்படுகிறார் என்று கூறியுள்ளார்.
அரசி 2ம் எலிசபெத் அவர்கள், தன் பணிக்காலத்தில், ஆப்ரிக்கா, மற்றும், ஆசியாவில் பிரித்தானியாவின் காலனி ஆதிக்கத்தை அகற்றியது, காமன்வெல்த் அமைப்பின் பரிணாமம் உட்பட, பல ஆண்டுகள் பெரும் மாற்றத்தைக் கொணர்ந்தவர் என்று பாராட்டியுள்ளார், கூட்டேரஸ்.
ஐ.நா.வின் நல்ல நண்பர்
அரசி 2ம் எலிசபெத் அவர்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நல்ல நண்பர், மற்றும், இவர் இந்நிறுவனத்தின் நியுயார்க் தலைமையகத்தை இருமுறை பார்வையிட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், பிறரன்பு, மற்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான பல பணிகளுக்கும் இவர் மிகவும் தன்னை அர்ப்பணித்திருந்தவர் என்று கூறியுள்ளார்.
கிளாஸ்கோவில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா.வின் COP26 உலக உச்சி மாநாட்டில், பிரதிநிதிகளின் உள்ளத்தைத் தொடும் வகையில் மிக அருமையாக உரையாற்றியவர் என, அரசி 2ம் எலிசபெத் அவர்களை நினைவுகூர்ந்துள்ள கூட்டேரஸ் அவர்கள், தன் மக்களுக்கு நீண்டகாலமாக, வாழ்வு முழுவதும், மனஉறுதியோடும், மிகுந்த அர்ப்பணத்தோடும் பணியாற்றிய அரசி அவர்களுக்கு எனது மரியாதையை செலுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
அரசியின் நீண்டகாலத் தலைமைத்துவம் மற்றும், அர்ப்பணத்தோடு அவர் ஆற்றிய பணிகளை இந்த உலகம் என்றென்றும் நினைவுகூரும் எனவும், பிரித்தானியா, வட அயர்லாந்து, காமன்வெல்த் நாடுகள் ஆகியவற்றின் அரசுகள், மற்றும் மக்களுக்கும், அரசியின் குடும்பத்தாருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும், தன் செய்தியில் கூறியுள்ளார் கூட்டேரஸ்.
பிரித்தானியா மற்றும், வட அயர்லாந்தின் அரசியாக, 70 ஆண்டுகள் மற்றும், 214 நாள்கள் பணியாற்றிய அரசி 2ம் எலிசபெத் அவர்கள், ஒரு நாட்டை நீண்டகாலம் ஆட்சிசெய்த ஒரு பெண் தலைவராகவும் உள்ளார். 1952ஆம் ஆண்டு மன்னர் 6ம் ஜார்ஜ் அவர்கள் உயிரிழந்தபின்னர், அப்போது 25 வயது நிரம்பியிருந்த அரசி 2ம் எலிசபெத் அவர்கள் பதவிக்கு வந்தவர். இவர் தனது 96வது வயதில், ஸ்காட்லாந்தில் பால்மோரல் மாளிகையில் செப்டம்பர் 8, இவ்வியாழனன்று இறைபதம் சேர்ந்தார்.
அரசி 2ம் எலிசபெத் அவர்களின் மறைவையொட்டி, பிரித்தானியாவில், பத்து நாள்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன (UN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்