தேடுதல்

தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல் மலை தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல் மலை  

இனியது இயற்கை : இயற்கை விவசாயம் மறையாத வத்தல் மலை.

மண்ணின் உயிர்த் தன்மையை காப்பாற்றும் நோக்கத்தில், இயற்கை விவசாயத்தினை கைவிடாமல் பாதுகாத்து வருகின்றனர் வத்தல் மலை மக்கள்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல் மலை கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 3000 அடி உயரத்திலும் தர்மபுரி நகரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. சாலை வசதியே இல்லாத இந்த மலையில் 2013 ஆம் ஆண்டு தான் பூமரத்தூர் அடிவாரத்தில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவுக்கு 15 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை அமைக்கப்பட்டது. இன்றைய நவீன வசதிகள் ஏதும் இல்லாதிருந்தாலும், இயற்கை விவசாயத்தை மட்டும் இன்றளவும் இம்மலையில் வசிக்கும் மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

கால்நடைகளின் கழிவுகளை மட்டுமே உரமாக்கி, ஏரால் உழுது, கைகளால் கதிர் அறுத்து, எருதுகளால் தாம்பு ஓட்டி, முறத்தால் தூற்றும் பாரம்பரிய விவசாய முறையை வத்தல் மலை மக்கள் இன்றும் உயிர்ப்போடு செய்துகொண்டிருக்கின்றனர். இன்றைய நவீன இரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் மண்ணின் உயிர்த் தன்மையை அழித்து விடும் என்ற பய உணர்வினாலேயே இம்மலை மக்கள் இயற்கை விவசாயத்தினை கைவிடாமல் பாதுகாத்து வருகின்றனர்.

80 விழுக்காடு நிலங்கள் வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் திணை, ராகி, நெல் போன்றவைகள் அதிகமாக விளையவைக்கப்படுகின்றன. ராகியுடன் ஊடுபயிராக கடுகு விதைப்பதை நீண்ட காலமாக செய்து வரும் இவர்கள் மரப்பயிர்களான காபி மிளகு பலா போன்றவற்றோடு காய்கறிகளையும் பயிரிட்டு வருகின்றனர். வத்தல் மலையில் ஆண்டின் பெரும்பகுதி நாட்கள் குளிர்ந்த காலநிலையாக காணப்படும் இது காபி சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது என்று கருதிய தர்மபுரி மாவட்ட நிர்வாகம் காபி சாகுபடியில் ஈடுபட அறிவுறுத்தியது. இதன்படி இன்று 250 ஏக்கர் பரப்பளவில் காபி பயிரிடப்பட்டு ஊடுபயிராக ஆரஞ்சு, மிளகு, சில்வர் ஓக் போன்றவைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2022, 09:54