இனியது இயற்கை - மருந்துவாழ் மலை (மருத்துவா மலை)
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மருந்துவாழ் மலை இந்தியாவில் முக்கியமான மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்முனையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. மருத்துவ மூலிகைகள் நிறைந்துள்ளதால் மருத்துவாமலை என அழைக்கப்படுகிறது. இதன் உயர்ந்த முகடு 1800 அடி உயரமுள்ள மலையாகும். இது நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொற்றையடி கிராமத்திற்கு வடகிழக்கு திசையில் அமைந்துள்ளது.
இராமாயணத்தில் இராவணனுடனான போரில் இலட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்துச் சென்றதாக உள்ளது. பெயர்த்துச் சென்றது இந்த மலைதான் என்று வாய்மொழி கதைகளில் கூறப்படுகிறது. வடக்கில் இருந்து பெயர்த்து வந்தபோது தமிழ்நாட்டில் சிதறி விழுந்த பல்வேறு துண்டுகளில் இம்மலை ஒன்று என்ற கருத்தும் உள்ளது. இம்மலையின் உயர்ந்த முகட்டில் பாறை வெடிப்புக்குள் பிள்ளைத்தடம் எனும் குகை உள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலையின் தென்கோடி முனையான இதனருகில் அய்யா நாராயணசாமி ஏற்படுத்திய வைகுண்டபதி அமைந்துள்ளது. இம்மலையில் அய்யா வைகுண்டர் தங்கியிருந்து தவம் செய்தார். இம்மலை குறித்தும் அவர் பாடியுள்ளார். எனவே அய்யாவழி சமயத்தில் இம்மலை புனிதமானதாய் மதிக்கப்படுகிறது. சுவாமித்தோப்பில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும் நாகர்கோவிலிலிருந்து 11 கி.மீ தொலைவிலும் உள்ளது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை பண்டிகையன்று இம்மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
இந்த ஊரில் ஸ்ரீ நாராயணகுரு போதித்த சாதி, சமய வேறுபாடற்ற சமுதாயத்தை அமைக்கும் பணியில் உருவாக்கப்பட்ட சதயபூஜா சங்கத்தின் நிர்வாகத்தில் 1992ஆம் ஆண்டில் “ஸ்ரீ நாராயணகுரு தர்ம மடம்” எனும் பெயரில் மடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்