தேடுதல்

கர்நாடக கூர்க் மலைகள் கர்நாடக கூர்க் மலைகள்  

இனியது இயற்கை : கர்நாடக கூர்க் மலைகள்

இராமரும் இலட்சுமணனும் சீதையை தேடி காட்டுக்குள் சென்றதாகவும் அப்போது இராமர் தாகம் எடுக்கிறதென்று கூற, இலட்சுமணனின் அம்பு பிரம்மகிரி மலையை உடைத்து உருவாக்கியதே இலட்சுமண தீர்த்த ஆறு எனச் சொல்லப்படுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

 கர்நாடகத்திலுள்ள கூர்க், அதன் உயரமான மலைத்தொடர்களுக்கு மட்டுமல்ல, அதன் பல்வேறு வகையான காபிக் கொட்டைகளுக்கும், பல்வேறு சுவைகள் கொண்ட வீட்டில் தயாரிக்கப்பட்ட திராட்சை இரசத்திற்கும், பல்வேறு வகையான மசாலாப் பொருட்களுக்கும் பிரபலமானது.  அப்பே நீர்வீழ்ச்சி, மடிகேரி கோட்டை, பாரபோல் ஆறு, ஓம்காரேஸ்வரா கோயில், இருப்பு நீர்வீழ்ச்சி, இராஜாவின் இருக்கை, நாகர்ஹோலே தேசிய பூங்கா, தலைக்காவேரி மற்றும் தடியாண்டமோல் சிகரம் ஆகியவையும் கூர்க்கோடு தொடர்புடையவை.

 மடிகேரி நகரத்திலிருந்து 7 முதல் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அப்பே நீர்வீழ்ச்சி கூர்க் பகுதியில் அதிகம் விரும்பி இரசிக்கப்படுகிற ஒரு நீர்வீழ்ச்சியாகும். அப்பே அல்லது அப்பி என்றால் கொடவா மொழியில் அருவி என்பது பொருளாகும். மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி பல சிற்றாறுகள் ஒன்றுசேர்ந்து உருவாகி உயரமான பாறைகள் மீது வழிந்து சிதறி நீர்ச்சிதறலுடன் அதிக வேகத்தில் அடியிலுள்ள அமைதியான தடாகத்தில் விழுகிறது. நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் வசதியாக பார்க்கும் விதத்தில் தொங்கு பாலம் ஒன்றும், அதற்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மறுபுறத்தில் அமைந்துள்ள காளி மாதா கோயிலும் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாகும்.

பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயத்தின் அருகில் உள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் கூர்க் பிரதேசத்தின் தென் பகுதியில் இருப்பு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. காவிரியின் துணை ஆறான இலட்சுமண தீர்த்த ஆறு இதிலிருந்து உருவாவதால் இதற்கு இலட்சுமண தீர்த்த நீர்வீழ்ச்சி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இது கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்துக்கு வெகு அருகில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற இராமேஸ்வரர் கோயில் இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ளது. புராணக் கதைகளின்படி இராமரும் இலட்சுமணனும் சீதையைத் தேடி இந்த காட்டுக்குள் சென்றதாகவும் அப்போது இராமர் தாகம் எடுக்கிறதென்று கூறவே இலட்சுமணன் தன் அம்பை பிரம்மகிரி மலையை நோக்கி எய்தபோது இந்த இலட்சுமண தீர்த்தம் நீர்வீழ்ச்சியாய் ஊற்றி இராமரின் தாகத்தை தீர்த்ததாகச் சொல்லப்படுகிறது. நீர்வீழ்ச்சியை ஒட்டியவாறே மலையின்மீது ஏறுவதற்கு வசதியாக ஒரு பாலமும் படிகளும் உள்ளதால், மேலிருந்து விழும் நீரை மிக அருகில் பார்க்க முடிவதோடு அங்குள்ள எழில் வாய்ந்த மரங்களையும் இயற்கை சூழலையும் மிக வசதியாக பார்த்து இரசிக்க முடியும்.

இங்குள்ள தலைக்காவேரி இந்துக்களின் முக்கியமான புனித சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. பிரம்மகிரி மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 1276 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த தலம், காவேரி ஆறு உற்பத்தி ஆகும் இடமாக கருதப்படுகிறது. காவேரி பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில், தற்சமயம் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்திற்கான நீரைக்கொண்டு வரும் சிறு பொய்கையாக காவேரி  பிறக்கின்றது. பின்னர் அது தரைக்கடியில் கீழிறங்கி வெகு தூரத்திற்கப்பால் காவேரி எனும் ஆறாக வெளிப்படுகிறது. இந்த குளத்தையொட்டி அகஸ்தீஸ்வர முனிவருக்கான கோயில் ஒன்றும் உள்ளது. புராணக்கதைகளின்படி அகஸ்திய முனிவர் தன் கமண்டலத்தில் இந்த காவேரியை அடக்கி வைத்திருந்ததாகவும், விநாயக கடவுள் காக்கை உருவம் கொண்டு, அகஸ்திய முனிவர் தவத்தில் மூழ்கி இருந்த சமயம், அந்த கமண்டலத்தை சாய்த்து காவேரியை மலையிலிருந்து பெருக்கெடுத்து ஓட வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2022, 11:27