தேடுதல்

காற்று மாசுகேட்டின் பாதிப்பு காற்று மாசுகேட்டின் பாதிப்பு  

காற்று மாசுகேடு கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கின்றது

உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ 99 விழுக்காட்டினர் மாசடைந்த காற்றை சுவாசிக்கின்றனர். காற்று மாசுகேடால், ஒவ்வோர் ஆண்டும் 70 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

நம்மை எப்போதும் உயிரோடு வைத்திருக்கும் காற்று, நம்மை நோயாளிகளாகவும் ஆக்கிக்கொண்டிருக்கிறது என்று, நீல வானிற்கான தூய்மையான காற்று உலக நாளுக்கென்று ஐ.நா. நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் எச்சரிக்கை விடுத்துள்ளன.

செப்டம்பர் 7, இப்புதனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக தூய்மையான காற்று நாளுக்கு வெளியிட்டுள்ள செய்தியில், காற்று மாசுகேடு கோடிக்கணக்கான மக்களின் உரிமைகளைப் புறக்கணிக்கின்றது என்று,  ஐ.நா. தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

சுத்தமான, நலமான மற்றும், நீடித்த நிலையான சூழலியலைக் கொண்டிருப்பதற்கு உரிமை உள்ளது என்பது, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், காற்று மாசுகேடால் ஏழைகளே அதிகம் துன்புறுகின்றனர் என்று கூறியுள்ளார்.

காற்று மாசடைவதைக் குறைப்பதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்துள்ள கூட்டேரஸ் அவர்கள், புதைபடிவ எரிமங்களைத் தவிர்த்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளைப் பயன்படுத்துவது அதிகரிக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், மூன்றாவது உலக தூய்மையான காற்று நாள் செப்டம்பர் 7, இப்புதனன்று கடைப்பிடிக்கப்பட்டது. நாம் சுவாசிக்கும் காற்று,  தூய்மையான காற்று உலக நாள் ஆகிய ஹாஷ்டாக்குகளுடன் UNEP அமைப்பு செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதியை நீல வானிற்கான தூய்மையான காற்று உலக நாளாக அறிவித்திருந்தது. இந்த உலக நாள் 2020ஆம் ஆண்டில் முதன் முறையாக கடைப்பிடிக்கப்பட்டது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 September 2022, 15:36