தேடுதல்

இமய மலைத்தொடர் இமய மலைத்தொடர் 

இனியது இயற்கை : இந்திய மலைத் தொடர்களின் சிறப்பு

மத்திய இந்தியாவில் அமைந்துள்ள மிகப் பழமையான விந்திய மலை, இந்தியாவை வடஇந்தியா, தென் இந்தியா என இரு பிரிவுகளாகப் பிரிக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மலைகளின் சிறப்புகளைப் பட்டியலிட்டுச் சொல்வது கடினம். எண்ணிலடங்கா சிறப்புகளையும், வளங்களையும் ஒவ்வொரு மலையும் பெற்றிருக்கும். இந்தியாவில் உள்ள சில மலைத் தொடர்கள் குறித்து இங்கு காண்போம்.

இமய மலைத்தொடர், உலகின் மிக அதிக‌ உயரமான சிகரத்தினைக் கொண்டுள்ளது. இது இந்தியாவிலேயே நீளமான மலையாகவும் உள்ளது. இமயமலை என்பதற்கு பனியின் உறைவிடம் என்பது பொருளாகும். ஏறக்குறைய 7200 மீட்டர் உயரமுடைய இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சிகரங்கள் காணப்படுகின்றன. எல்லைப் பகுதிகள் நங்கபர்வதம், நம்சாபர்வா ஆகியவை இமயமலையின் மேற்கு மற்றும் கிழக்குப் புள்ளிகளாக அமைந்துள்ளன. சிந்து, பிரம்மபுத்திரா, கங்கை போன்ற வற்றாத நதிகள் இம்மலையில் தான் உற்பத்தியாகின்றன.

பர்வன்சால் மலைத்தொடர், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, நாகலாந்து, மேகாலயா, மிசோரம் ஆகியவற்றுடன் பரந்து விரிந்து காணப்படுகிறது. இது இமயமலையைப் போலவே பல பனிச் சிகரங்களைக் கொண்டிருந்தாலும் இமயமலை அளவிற்கு உயரமானதல்ல. இம்மலைத்தொடரின் மிக உயரமான சிகரம் பவாங்பூய் ஆகும்.

காரகோரம் மற்றும் பிர்பாஞ்சல் மலைத்தொடர், இமயமலைக்கு வடமேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைந்து, இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளின் எல்லைப் பகுதிகளுடன் இணைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரானது காரகோரம் மலைத்தொடரின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. சியாச்சென் பனியாறும், ஃபியாஃபோ பனியாறும் இம்மலைத்தொடரில்தான் அமைந்துள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலை, தமிழகத்தில் மிகவும் பிரசித்தமான மலைத் தொடர். இது கன்னியாகுமரியில் இருந்த குஜராத்து வரையில் பரவியுள்ளது. குஜராத் மாநிலத்தில் தபதி நதியிலிருந்து தொடங்கும் இம்மலைத்தொடர், அரபிக்கடலுக்கு இணையாக மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களில் பரவியுள்ளது. கர்நாடகாவிற்கு உட்பட்ட பகுதியில் கூர்க், ஜோக் நீர்வீழ்ச்சி, தமிழகத்தில் ஊட்டி, பந்திப்பூர் சரணாலயம், வால்பாறை என பல சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது.

விந்திய மலை, இந்தியாவை வட இந்தியா, தென் இந்தியா என இரு பிரிவுகளாகப் பிரிக்கிறது. மத்திய இந்தியாவில் அமைந்துள்ள மிகப் பழமையான மலை விந்திய மலையாகும். விந்திய மலை, வாரணாசியிலிருந்து மத்தியப் பிரதேசம் வழியாக குஜராத் வரை கிழக்கு மேற்காக பரவியுள்ளது. விந்தியமலையின் உயரமான சிகரமாக கலுமார் பீக் அறியப்படுகிறது.

சாத்பூரா மலை, குஜராத்தின் அரபிக்கடலில் ஆரம்பித்து மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் வரை பரவியுள்ளது. நர்மதை மற்றும் தபதி நதிகள் இங்கு உண்டாகி மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கின்றன. அடர்ந்த காடுகளைக் கொண்ட சாத்பூரா மலை, புலிகள், காட்டெருதுகள், திருகுமான், கரடிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களுக்கு வசிப்பிடமாக உள்ளது. சாத்பூராமலையின் உயரமான சிகரமாக துப்கர் பீக் உள்ளது.

ஆரவல்லி மலைத்தொடர், உலக அளவிலேயே மிகவும் பழமையான மலை என்று பல வல்லுனர்களால் கண்டறியப்பட்டுள்ளது. ஏறக்குறைய 800 கிலோ மீட்டர் நீளமுள்ள இம்மலை, டெல்லி, ஹரியானா, இராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பரவியுள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மவுண்ட் அபு இராஜஸ்தான் மாநிலத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ளது.

கிழக்கு தொடர்ச்சி மலை, இந்தியாவின் கிழக்கு எல்லையான வங்காள விரிகுடாவிற்கு இணையாக கிழக்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. தொடர்ச்சியற்றதும், உயரம் குறைவானதுமான இம்மலைத்தொடர், மேற்குவங்காளம், ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் பரவியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஜிந்தகடா இம்மலையின் உயர்ந்த சிகரமாகும். தென்னிந்திய நதிகளான கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, காவிரி போன்றவை இம்மலையின் வழியே பாய்ந்து அருகே உள்ள நிலங்களை வளப்படுத்தி இந்திய வேளாண்மையைச் செழிக்கச் செய்கின்றன.

(நன்றி : nativeplanet.com)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 September 2022, 14:09