பூர்வீக இனக்குழுக்கள் தினம்
மெரினா ராஜ். வத்திக்கான்
இயற்கையை நேசித்து அன்புசெய்து மதித்து தலைமுறை தலைமுறையாக மகிழ்ந்து வருவது பூர்வீகக்குடிஇனம் என திருந்தந்தை இந்நாட்களில் வலியுறுத்தி வருகின்றார். அதிலும் குறிப்பாக பூர்வீக இன மக்களின் குழந்தைகளுக்கு கிறிஸ்தவ நிர்வாகங்களின் கீழ் செய்யப்பட்ட குற்றங்களுக்காக கனடா சென்று மன்னிப்பும் தெரிவித்தார். இத்தகைய சூழலில் ஆகஸ்ட் 9ஆம் தேதி உலக பூர்வீக இனக்குழு நாளினை சிறப்பித்து மகிழும் வேளையில் பூர்வீக இனக்குழுக்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் இன்றைய வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சியில் தெரிந்து கொள்வோம்.
காடு,மலைகள் சூழ்ந்த இந்த பூமியை தனது வீடாகவும் காட்டைப் பதப்படுத்தி விவசாய பூமியாகவும் மாற்றினான் மனிதன். காலப்போக்கில் காடு, மலையை விட்டு விலகி வந்து தனக்கான வாழும் பகுதியை உருவாக்கிக் கொண்ட மனிதன் அதனை நகரம் என்றழைத்தான். அங்கு வாழ்பவன் அறிவு உடையவன், படித்தவன், நாகரிகம் தெரிந்தவன் என்றும், நகரத்திற்கு வராது காட்டில் மட்டுமே வாழ்பவன் பழங்குடி, ஆதிவாசி என்றும் அடையாளப்படுத்தப்பட்டான்.
1982-ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை ஆகஸ்ட் 9-ம் தேதியை பழங்குடிகள் இன நாளாக கடைபிடித்து வருகின்றது. பழங்குடிகள், அவர்களின் உரிமைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த நாள் உலக பூர்வீக இனக்குழுக்கள் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொழிகள் என்பது கருத்துப் பரிமாற்றக் கருவியாகவும், அன்றாட மனித வாழ்வில் முக்கிய அங்கமாகவும், அந்த மொழி பேசும் மனிதர்களின் கலாச்சாரத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. மொழிகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருப்பினும் பல்வேறு காரணங்களால் அவை வேகமாக அழிந்து வருகின்றன. இதில் பழங்குடியின மக்களின் மொழிகளே வேகமாக அழிகின்றன. பெரும்பாலும் பழங்குடியின மக்கள் பேசும் மொழிக்கு எழுத்து வடிவம் இல்லாதிருப்பதால் அம்மொழிகள் அழியும் நிலையிலுள்ளன. 2 வாரத்திற்கு ஒரு பழங்குடியின மொழி அழிவதால் அவர்களது கலாச்சாரமும், பாரம்பரியமும் மறையும் நிலையில் உள்ளன.
உலகில் 37கோடி பூர்வீக குடியின மக்கள் 90 நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இது உலக மக்கள்தொகையில் 5 விழுக்காடிற்கும் குறைவு எனினும் வறுமையின் பிடியில் வாழும் மக்களில் 15விழுக்காடு மக்கள் பழங்குடிகளாக உள்ளனர். இவர்கள் சுமார் 5ஆயிரத்திற்கு அதிகமான கலாச்சாரங்களையும் 7ஆயிரத்திற்கு மேற்பட்ட மொழிகளையும் பேசுகின்றனர். உலகில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான பழங்குடிகள் இந்தியாவிலேயே வாழ்கின்றனர். தமிழகத்தில் 36 பட்டியல் பழங்குடியின வகுப்பை சார்ந்த சுமார் 7 ½ இலட்சம் (ஏழரை) அதாவது 1.1 விழுக்காடு பேர் வாழ்கின்றனர். பழங்குடியின மக்கள் தலைமுறை தலைமுறையாய் தங்களின் கலாச்சாரங்களையும், வாழ்வியலையும் இயற்கை சூழலுடன் இணைத்து வாழ்கின்றனர்.
நகரத்தில் வாழ்ந்த மனிதர்கள் அப்படியே வாழாமல் மீண்டும் காடுகளை நோக்கிச் செல்ல தொடங்கி காட்டை பணம் ஈட்டும் இடமாகப் பார்த்து இயற்கையின் விலைமதிப்பில்லா கொடைகள் பலவற்றுக்கு விலையை நிர்ணயித்துக் கொண்டார்கள். பசுமை போர்த்திய இடங்களும், அங்கு வாழும் விலங்குகளும் அவர்களின் கண்களுக்கு வியாபாரப் பொருட்களாகத் தெரியத் தொடங்கின. மனிதர்கள் சுவாசித்து ஆரோக்கியமாக வாழ நுரையீரல் எவ்வளவு முக்கியமோ அதுபோல காடுகள் உலகின் சுவாசத்திற்கு உதவும் நுரையீரல்கள். இதனை முற்றிலும் மறந்து மேலும் மேலும் சுரண்டிக் கொண்டு இருப்பது மிகவும் வேதனை அளிக்கும் செயல்.
பழங்குடி இன மக்களின் வாழ்வியல்
பழங்குடி இன மக்கள் இயற்கையோடு இயைந்த மிகச் சிறந்த வாழ்க்கைமுறையைக் கொண்டு ஆரோக்கியமாகத் திகழ்பவர்கள். அகம்பாவம் இல்லாதவர்கள், சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரில் தங்களை முடக்கி கொள்ளாதவர்கள். தனக்கான போலி மதிப்பீடுகளை உருவாக்கத் தெரியாத இத்தகைய பழங்குடி சமூகத்தைப் பார்த்துத் தான் சிலர் காட்டுமிராண்டி என்று சொல்கின்றனர். மாடு வளர்ப்பு ஆடு வளர்ப்பு சோளம்,ராகி,கம்பு பயிரிடுதல் போன்றவற்றை தங்களின் தொழிலாக கொண்டு வாழ்கின்றனர். தங்களின் உணவுத் தேவைக்குப் போக மீதியைக் கால்நடைகளுக்கு போட்டு அதனையும் வளர்த்து வருகின்றார்கள். திருட்டு என்பதே இல்லை திருட்டு, வரதட்சனை,அதீக பொருளீட்டுதல் இல்லாத இனம் இவர்கள் இனமேயாகும். விலங்குகள், பறவைகளுக்கு வாழ்க்கை எப்படி உள்ளதோ அதே போன்றே பழங்குடிகளும் சுதந்திரமான ஒரு வாழ்வை அமைத்துக் கொள்கிறார்கள்.
எளிமையான வாழ்க்கை முறை.
உணவுப் பொருட்களை விட இன்று மிகப் பெரிய விற்பனை பொருள் மருந்துகளும் மருத்துவமும் ஆகும். நகர மனிதர்கள் 50வயதிற்குப் பின்பு மருத்துவமனைக்குச் செல்வதே முக்கிய வேலையாக கொண்டிருக்கும் வேளையில் பழங்குடிகளின் மருத்துவம் மிக எளிமையானது. 90விழுக்காடு அவர்களே காட்டில் இருக்கும் மூலிகைகளைக் கொண்டு மருத்துவம் பார்த்துக் கொள்கிறார்கள். எலும்பு முறிவு ஏற்பட்டால் மட்டுமே பெரும்பாலும் மருத்துவர்களைத் தேடி சமவெளிக்கு வருகிறார்கள்.
பூர்வீககுடியின மக்கள் வாழ்விடத்தில் தான் உலகின் 80விழுக்காடு உயிர்சூழல் பன்மயம் கொண்டதாக உள்ளது. எனவே சூழலியலை பாதுகாக்க பூர்வகுடிகளை பாதுகாப்பது நம் எல்லோரின் கடைமையாகும். எதிர்காலத்தில் ஏற்படும் பெரும்தொற்று குறித்தும் நமக்கு சொல்லிக்கொடுக்கும் அறிவுடையவர்கள் பழங்குடி மக்களே. ஏனெனில் பழங்குடியினர் சூழலுக்கு ஏற்ப தங்களை பாரம்பரிய முறையில் தங்களை தகவமைத்துக் கொள்கின்றனர். இன்று பழங்குடிகளுக்கான சிக்கல்கள் அது நம் எல்லோருக்குமான சிக்கல்கள் இயற்கை வளங்களுக்கான சிக்கல் என புரிதல் வேண்டும். பூர்வீக குடிகள் இன்று பல்வேறு சவால்களை சந்தித்து கொண்டு சொல்லொண்ணாத் துயரத்தில் உள்ளனர். இந்த பெரும்தோற்று காலம் எல்லோருக்கும் பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக சரியான மருத்துவ வசதிகள், அத்தியாவசிய சேவைகள், சுகாதாரம், சுத்தமான குடிநீர், சோப்பு, நோய்தொற்று நீக்கிகள் போன்றவை அனைவருக்கும் எட்டாக கனியாக உள்ளது.
உணவில் வந்த மாற்றங்கள்…
ஆனாலும் பழங்குடிகளின் சிறப்பான பாரம்பரிய வாழ்க்கைமுறைதான் அவர்கள் நோயை எதிர்க்கும் திறன் பெற்றிருப்பதற்கான அடையாளம். இப்பொழுது அதற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது அவர்கள், உணவுப் பாதுகாப்பு மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ராகி, கம்பு, கேழ்வரகு, சோளம் போன்றவற்றைப் பயிரிட்டு அதையே தங்களின் உணவாக உண்டு வந்த மக்கள், நகர மக்களைப் போல அரிசி உணவு உண்ணத்தொடங்கியதால் ஊட்டச்சத்துக் குறைபாடினால் பாதிக்கப்படுகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்கள் பின்பற்றி வந்த உணவு கலாச்சாரமே அவர்களை இது நாள் வரை ஆரோக்கியமாக வைத்திருந்தது.ஆனால்,அந்த உணவு பண்பாடு உருக்குலைய ஆரம்பித்ததின் விளைவாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.
அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் தனித்துவமான கலாச்சாரங் களையும் வாழ்க்கை முறையையும் பராமரிக்கச் சிறப்பு நடவடிக்கைகள் தேவை. தமிழகத்தில் வசிக்கும் காடர், முதுவர், இருளர், ஊராளி, சோளகர், அடியன், தொதவர், கோத்தர், பணியர், காட்டு நாயக்கர், குறும்பர், இருளர் உள்ளிட்ட பழங்குடியினர் தங்கள் பூர்வீக பழங்குடியின மொழிகளைப் பேசுகின்றனர். அரசும், பல்கலைக்கழகங்களும், தன்னார்வ நிறுவனங்களும், இதில் ஒருசில பழங்குடியின மக்கள் பேசும் தனித்த மொழிகள் குறித்து சில ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. ஆனாலும், இம்மொழிகளுக்கு எழுத்து வடிவம் அளிக்கும் பணி இன்னும் முழுமையடையவில்லை.
பூர்வீக இனக்குழுக்கள் தினமானது பழங்குடி மக்களின் வாழ்வியல், கலை, கலாச்சாரம், மொழி, மற்றும் உரிமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவதை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றது. உலகெங்கிலும் பழங்குடியினர் நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள் இது தொடர்பான கண்காட்சிகள், கருத்தரங்கு, கலை நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
பூர்வீக இனக்குழுக்களின் வளர்சசிக்காக திருஅவையும் பல்வேறு முயற்சிகளையும் செயல் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது. பூர்வீக இனக்குழுக்கள் தங்களது வாழ்வாலும் இயற்கையோடு இணைந்தசெயல்பாடுகளால் நமக்கு பல செய்திகளை கொடுக்கின்றனர். இவர்களின் மாண்பையும் மனிதத்தையும் மதித்து இப்பூமியில் இவர்கள் இனம் நிலைத்து வாழ உடன்பிறந்த உணர்வுடன் ஒரு வரை ஒருவர் அன்பு செய்து வாழ்வோம். அனைவருக்கும் இனிய பூர்வீக இனக்குழுக்கள் தின நல்வாழ்த்துகள்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்