வாரம் ஓர் அலசல்: கடவுளைக் காட்டும் சிறார்
மேரி தெரேசா: வத்திக்கான்
2009ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் நாள் மாலையில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J அப்துல் கலாம் அவர்களும், அவரது உற்ற நண்பரான இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் Shailesh Mehta அவர்களும், பரோடா நகரின் உணவகம் ஒன்றில் உணவுக்காக காத்திருந்தனர். அந்நேரத்தில் மேக்தா அவர்கள், தன்னோடு பகிர்ந்துகொண்ட நிகழ்வு ஒன்றை கலாம் அவர்கள், ஒரு மேடையில் கூறியுள்ளார். தினமும் குறைந்தது பத்து இதய அறுவை சிகிச்சைகளைச் செய்யும் டாக்டர் மேக்தா அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் அல்ல, ஆனால் இந்நிகழ்வு பற்றிக் கூறியபோது ஆனந்தக் கண்ணீரோடு விவரித்தார், இவரது பகிர்வு எனது மனதை ஆழமாகத் தொட்டது, உங்களையும் அவ்வாறே செய்யும் என கலாம் அவர்கள் அது பற்றி விவரிக்கத் தொடங்கியுள்ளார்.
இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மேக்தா
அந்த டிசம்பர் 21ம் தேதி, ஒரு தம்பதியர், எனது உதவி மருத்துவர்கள் கொடுத்த பரிசோதனை அறிக்கையை என்னிடம் காட்டினர். அதைப் பார்த்த நான் அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால் அந்த தம்பதியரின் ஆறு வயது மகளின் இதயம் முழுவதிலும் அடைப்பு இருந்தது. கடைசி கட்டமாக இருக்கிறதே என்று உணர்ந்த நான், சிறுமிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும். அவ்வாறு செய்தாலும், அவள் உயிர் பிழைப்பதற்கு முப்பது விழுக்காடுதான் உறுதிதர முடியும். அதேநேரம் அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும், சிறுமி மூன்று மாதங்களுக்குமேல் உயிரோடு இருக்கமாட்டாள், நிலைமை அவ்வளவு மோசமாக உள்ளது, நான் இப்போது என்ன செய்ய என அவளது பெற்றோரிடம் கேட்டேன். நான் கூறியதைக் கேட்டதும் கதறி அழுத பெற்றோர், ஐயா, முப்பது விழுக்காடு எங்களுக்கு உதவட்டும் என கடவுளைப் பிரார்த்திக்கிறோம், கடவுள் எங்களுக்கு ஆசிரளிப்பார், தயவுசெய்து உடனே அறுவை சிகிச்சை செய்யுங்கள் என்றனர்.
உடனடியாக அறுவை சிகிச்சைக்குரிய தேதி குறிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு ஆறு நாள்கள் இருந்தபோது சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அச்சிகிச்சைக்குரிய முன்தயாரிப்புகள் அனைத்தும் நடந்தன. அச்சிறுமியின் தாய் அவளோடு தங்கியிருந்தார். இதுதான் எனக்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு நாள் மாலையும் அந்த தாய் மகளின் நெற்றியில் கைவைத்து, மகளே, கடவுள் உனக்கு உதவுவார், அவர் உன்னை ஆசிர்வதிப்பார், அவர் உன் இதயத்தில் இருக்கிறார் என்று சொல்லி அவளோடு சேர்ந்து செபித்தார். சிறுமியும் தாய் கூறியதை நம்பினாள், தாயோடு சேர்ந்து செபித்தாள். அறுவை சிகிச்சை நாளும் வந்தது. சிறுமி அறுவை சிகிச்சை அறைக்குக் கொண்டுசெல்லப்பட்டாள். எனது உதவி மருத்துவர்கள் அனைவரும் உடன் இருந்தனர். எல்லாம் தயாராக இருந்தன. கடைசியாக நான், சிகிச்சைக்குரிய உடையோடு உள்ளே நுழைந்தேன். சிறுமியைத் தட்டிக்கொடுத்து, குழந்தாய், கவலைப்படாதே, நீ முழு குணமடைவாய் என்று சொன்னேன். அப்போது அந்தச் சிறுமி, டாக்டர், நான் கவலைப்படவில்லை, இதயத்தைத் திறந்து அறுவை சிகிச்சை நடக்கும் என எல்லாரும் சொல்கின்றனர், நீங்கள் எனது இதயத்தை முழுவதுமாகத் திறப்பீர்களா? என்று கேட்டாள். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் நான், குழந்தாய், பயப்படாதே, உனக்கு வலிக்காது, நான் மருந்துகள் கொடுப்பேன் என்றேன். அப்போதும் அச்சிறுமி, இல்லை டாக்டர் நான் கவலைப்படவில்லை, ஆனால் எனக்கு ஒரு கேள்வி உள்ளது. நீங்கள் எனது இதயத்தை முழுமையாகத் திறப்பீர்களா?, ஏனென்றால் எனது இதயத்தில் கடவுள் குடியிருக்கிறார் என்று என் தாய் சொன்னார். எனவே என் இதயத்தை நீங்கள் திறக்கும்போது கடவுள் அங்கே இருக்கிறாரா? என்பதை தயவுசெய்து பாருங்கள், கடவுள் அங்கே இருந்தால், நான் குணமானபின் அவர் எப்படி இருந்தார் எனச் சொல்லுங்கள் என்றாள். பதில் சொல்லத் தெரியாமல் சரி சரி என்று சொல்லிவிட்டு சிகிச்சையைத் தொடங்கினேன். இதயத்தைத் திறந்து 45 நிமிடங்கள் ஆகியும் அதிலிருந்து ஒரு சொட்டு இரத்தம்கூட வெளிவரவில்லை, நாடித்துடிப்பும், இரத்த அழுத்தமும் மெது மெதுவாக குறையத் தொடங்கின, அவ்வளவுதான், சிறுமி பிழைக்கமாட்டாள், எனவே இணைப்புக் கருவிகளைத் துண்டித்துவிடுங்கள் என உடன் இருந்தவர்களிடம் கூறினேன். அந்நேரத்தில் அச்சிறுமி கூறியது என் நினைவுக்கு வந்தது.
கடவுளைக் காட்டிய சிறுமி
இவ்வாறு என்னிடம் கூறிய டாக்டர் மேக்தா, கலங்கிய கண்ணீருடன் தொடர்ந்து விவரித்தார் என்றார் அப்துல் கலாம். நண்பரே, நான் கடந்த 40 அல்லது 45 ஆண்டுகளாக இந்த மருத்துவத்தைச் செய்துகொண்டிருக்கிறேன், எனது கரங்கள் இரத்தத்தால் முழுவதும் நனைந்திருக்கும், ஆனால் அந்நேரத்தில் அச்சிறுமி கூறியது என் நினைவுக்கு வந்ததும், நான் எனது இரு கரங்களையும் குவித்து, கடவுளே, எனது அறிவு, திறமைகள் அனைத்தும் இப்போது பூஜ்யமாகி விட்டன, இச்சிறுமியை என்னால் காப்பாற்ற முடியவில்லை, அச்சிறுமியின் இதயத்தில் நீர் இருக்கிறீர் என அச்சிறுமியும் அவளது தாயும் நம்புகின்றனர், நீர் அவளது இதயத்தில் இருந்தால் அச்சிறுமியைக் காப்பாற்றும் என்று செபித்தேன். பின்னர் செவிலியரிடம் எனது மூக்குக் கண்ணாடியை கழற்றுங்கள், என்னால் ஒன்றும் பார்க்க முடியவில்லை என்றேன். கண்ணாடியைக் கழற்றி கண்ணீரைத் துடைத்தேன், அந்நேரத்தில் என் அருகிலிருந்த மருத்துவர், என் தோளைத் தட்டி டாக்டர், சிறுமியின் இதயத்திலிருந்து இரத்தம் வருகின்றது என்றார். எல்லாரும் மகிழ்ச்சியால் கைகளைத் தட்டினர். மீண்டும் கருவிகள் இணைக்கப்பட்டன. நான்கரை மணி நேரம் சிகிச்சை வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. சிறுமியின் இதயத்தின் அடைப்புகள் அனைத்தையும் நீக்கிவிட்டேன். அச்சிறுமி இன்னும் குறைந்தது அறுபது ஆண்டுகளுக்கு உயிர் வாழ்வாள். இவ்வாறு விவரித்த டாக்டர் மேக்தா, என்னிடம், நான் புதுமைகளை நம்புகிறவன் அல்ல, ஆனால் புதுமை நடந்தது. இப்போது எனக்கு ஒரு கவலை, அச்சிறுமி சுகமடைந்து என்னைப் பார்க்கும்போது, இதயத்தில் கடவுளைப் பார்த்தீர்களா? அவர் எப்படி இருந்தார் டாக்டர்? எனக் கேட்பாள், என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை என்று கூறினார். அதற்கு நான், கடவுளைப் பார்க்க முயற்சி செய்யாதே, அவரைப் பார்க்க முடியாது, அவரை அனுபவத்தாலேதான் உணர முடியும் என்று சொல்லச் சொன்னேன் என்றார் அப்துல் கலாம். நாம் அனைவருமே அச்சிறுமி போல கடவுளை அனுபவிக்கிறோம். அவரைப் பார்க்க முடியாது. இந்த நிகழ்வு எனது மனதை மிக ஆழமாகத் தொட்டது, டாக்டர் மேக்தாவின் வாழ்வை மாற்றியது. அவர் கடவுளின் படத்தை அறுவை சிகிச்சை அறையில் மாட்டியுள்ளார். இதற்குமுன் தன் அறிவு மற்றும், திறமைகளின்மீது நம்பிக்கை வைத்திருந்தார், இந்நிகழ்வுக்குப்பின், ஒவ்வோர் அறுவை சிகிச்சை செய்வதற்குமுன்பும், அவர் அப்படத்தின்முன் நின்று, கடவுளே நான் சிறியவன், எனது அறிவு, திறமைகள் அனைத்தையும் வைத்து முயற்சிக்கிறேன், ஆயினும் நீர் என்னை ஆசிர்வதியும் என செபித்துவிட்டு சிகிச்சையைத் தொடங்குகிறார் என்று கூறிய அப்துல் கலாம் அவர்கள், தனது 69வது வயதில் பண்பட்ட ஒரு மனிதராக மாறியுள்ளேன். இந்தச் சிறுமியே என்னை அவ்வாறு மாற்றியுள்ளாள் என டாக்டர் மேக்தா, தன்னிடம் கூறியதாகவும், இவர் அகமதபாத், பரோடா, ராஜ்கோட் ஆகிய நகரங்களில் மருத்துவமனைகளை நடத்துகிறார், நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் இவருக்குக்கீழ் பணியாற்றுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
L'Aquila நகரில் திருத்தந்தை
ஆகஸ்ட் 28, இஞ்ஞாயிறன்று மத்திய இத்தாலியிலுள்ள L'Aquila நகரில் சிறப்பிக்கப்பட்ட 'செலஸ்டின் மன்னிப்பு' என்ற நிறைபேறுபலன்கள் வழங்கும் நிகழ்வுக்காக அந்நகருக்குச் சென்று அந்நகரின் Collemaggio அன்னை மரியா பசிலிக்கா வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றி, அப்பசிலிக்காவின் புனிதக் கதவையும் திறந்து வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 1294ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி, இந்த பசிலிக்காவில் திருத்தந்தையாக முடிசூட்டப்பட்ட புனித திருத்தந்தை 5ம் செல்ஸ்டின், அவர் தலைமைப்பணியேற்றவுடனேயே, இப்பசிலிக்காவின் புனிதக் கதவு வழியாகச் செல்பவர்களுக்கு நிறைபேறு பலன்கள் உண்டு என்ற அறிக்கையையும் வெளியிட்டார். அதுவே செலஸ்டின் மன்னிப்பு என்ற பெயரில், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 28, 29 ஆகிய தேதிகளில் அந்நகரில் சிறப்பிக்கப்படுகின்றது. அத்திருப்பலியில் ஆற்றிய மறையுரையில், கடவுளை நம்புகிறவர்கள் அனைவருக்கும் அவர் அனைத்தையும் நடத்தி முடிக்கிறவர் என்ற அவரது வல்லமையை எடுத்துரைத்தார். 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அந்நகர் மக்கள் கடவுள் நம்பிக்கையோடு மீள்கட்டமைப்பில் வாழ்ந்துவருவதை திருத்தந்தை ஊக்கப்படுத்தினார். ஐந்து மாதங்களே திருத்தந்தையாக இருந்து தனது இயலாமையை உணர்ந்து தாழ்ச்சியோடு அத்தலைமைப் பணியைத் துறந்தவர், திருத்தந்தை புனித 5ம் செலஸ்டின் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்பங்கள் மத்தியில், கடவுளால் எல்லாம் கைகூடும் என்ற நம்பிக்கையில் தாழ்ச்சியோடு அவரிடம் செல்பவர்களுக்கு அவர் உதவுவார், நம்புகிறவர்களுக்கு எல்லாம் நிறைவேறும் என்று கூறியுள்ளார். மனிதரின் செயல்களால் அல்லது, யுக்திகளால் அல்ல, மாறாக தாழ்மையுடையோரின் பலம் ஆண்டவரே என்றும் திருத்தந்தை ஆறுதலாகக் கூறியுள்ளார்.
அணுப் பரிசோதனைகளுக்கு எதிரான உலக நாள்
ஆகஸ்ட் 29, இத்திங்களன்று அணுப் பரிசோதனைகளுக்கு எதிரான உலக நாள். 2010ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படும் இந்த உலக நாள், உலகில் இடம்பெறும் அணு ஆயுதப் பரிசோதனைகள் நிறுத்தப்படவும், அமைதி மற்றும், பாதுகாப்பை ஊக்குவிக்கவும் அழைப்பு விடுக்கிறது. ஆகஸ்ட் 30, இச்செவ்வாய், கட்டாயப் புலம்பெயர்வுகளுக்குப் பலியாகுவோரை நினைவுகூரும் உலக நாள். மக்களின் இப்புலம்பெயர்வுகளுக்குப் போர்கள், அடக்குமுறைகள், வறுமை போன்ற காரணங்கள் உள்ளன. கடவுளை நம்புகிறவர்களுக்கு எல்லாம் கைகூடும் என்ற உறுதியில், உலகில் போர்கள் ஒழிந்து அமைதியிலும் பாதுகாப்பிலும் மக்கள் வாழவேண்டுமென பிரார்த்தனை செய்வோம். மேலும், ஆகஸ்ட் 26, கடந்த வெள்ளியன்று புனித அன்னை தெரேசாவின் (ஆக.26,1910-செப்.05,1997) பிறந்த நாளையும் சிறப்பித்தோம். போர்கள் சூழ்ந்துள்ள இன்றைய உலகில் அன்பும், அமைதியும், ஒப்புரவும் நிலவ அவ்வன்னையின் பரிந்துரையையும் வேண்டுவோம்.
அன்பர்களே, கடவுள் நம் வாழ்வில் முதன்மை பெறவில்லையெனில், நீரிலிருந்து அகற்றப்படும் மீன்போல் ஆகிவிடுவோம். எனவே, கடவுளே, தினமும், எல்லா நேரமும், நான் மூச்சுவிடும் ஒவ்வொரு நொடியும், நீர் எனக்குத் தேவை. ஏனெனில் நான் தன்னிலே சக்தியற்றவன் என்று அவரது உதவிக்காக மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்