இனியது இயற்கை: வள்ளுவமும் நிலமும்
தமிழரின் கலாச்சாரம் முழு வளர்ச்சியடைந்திருந்த சங்க காலத்தில், நாடானது நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு அந்நிலத்தின் வழியே மக்களும் தங்களது வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர்
மேரி தெரேசா: வத்திக்கான்
- “நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
- குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்” என்று வள்ளுவப் பெருந்தகை குறள் 959ல் பதிவுசெய்திருக்கிறார். நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும், அதுபோல குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும் என்று பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள், இக்குறளுக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார். தமிழரின் கலாச்சாரம் முழு வளர்ச்சியடைந்திருந்த சங்க காலத்தில், நாடானது நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு அந்நிலத்தின் வழியே மக்களும் தங்களது வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர். குறிப்பாக, காடும் காடு சார்ந்த இடத்தை முல்லை என்றும், மலையும், மலை சார்ந்த இடத்தை குறிஞ்சி என்றும், வயலும் வயல் சார்ந்த இடத்தை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த பகுதியை நெய்தல் என்றும் பிரித்து அந்நிலத்தை ஒட்டியே வாழ்ந்து வந்தனர். இவ்வாறு நிலத்தை ஒட்டிவாழ்ந்த சங்க கால மக்கள், மொழிக்கு மட்டும் இலக்கணம் வகுத்துக் கொள்ளாமல், அவர்களுடைய வாழ்க்கை முறைக்கும் இலக்கணம் வகுத்துக்கொண்டு வாழ்ந்த பெருமைக்குரியவர் ஆவர். பழங்காலத் தமிழர் அரிசிச் சோற்றையே தங்களின் சிறப்பு உணவாகக் கொண்டனர்.
- இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
- அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு (சிறுபாணாற்றுப்படை193-194)
ஆனால் இக்காலத்தில் நெல் விளையும் நிலங்கள் விலை நிலங்களாக மாறி வருவது கவலைக்குரியதே.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
04 August 2022, 15:14