தேடுதல்

மேற்குத் தொடர்ச்சி மலையில் தேயிலைத் தோட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் தேயிலைத் தோட்டம்   (AFP or licensors)

இனியது இயற்கை : தமிழக மலைகள்

மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகிய இரு மலைகளும் அமையப் பெற்ற ஒரே இந்திய மாநிலம் தமிழ்நாடு ஆகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உலகின் 24 விழுக்காட்டு நிலப்பகுதி மலைகளாக உள்ளது, 10 விழுக்காட்டு மக்கள் மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். இப்பூமியில் உள்ள பெரும்பாலான ஆறுகள் மலைப் பகுதிகளிலேயே உருவாகின்றன.

உலக அளவில் ஆசியாவில் 64%, ஐரோப்பாவில் 25%, தென் அமெரிக்காவில் 22%, ஆஸ்திரேலியாவில் 17%, ஆப்ரிக்காவில் 3% மலைகளாகும்.

சங்ககால தமிழகத்தில் நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அதனை ஐந்தாகப் பிரித்தனர். இவற்றில் குறிஞ்சி நிலம் என்பது மலையையும் மலை சார்ந்த இடங்களையும் கொண்டது. தமிழக மலைகளை, மேற்குத் தொடர்ச்சி மலைகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகிய இரு மலைகளும் அமையப் பெற்ற ஒரே இந்திய மாநிலம் தமிழ்நாடு ஆகும். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை பரந்து விரிந்துள்ளது மேற்குத்தொடர்ச்சி மலை. மேற்குக் கடற்கரைக்கு அதாவது, அரபிக் கடலுக்கு இணையாகச் செல்லும் இதன் சராசரி உயரம் 1800 மீட்டர் முதல் 2400 மீட்டர் ஆகும். கிழக்குத் தொடர்ச்சி மலையோ, சற்று மாறுபட்ட அமைப்புடன் அதாவது தொடர்ச்சியற்ற மலைகளாகக் காணப்படுகிறது. இதன் உயரம் சராசரியாக 1000 மீ முதல் 1500 மீ வரை உள்ளன. கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் மேற்குத் தொடர்ச்சி மலைகளும், நீலகிரியின் தொட்டபெட்டா என்ற இடத்தில் ஒன்றாக இணைகின்றன.

தமிழ்நாட்டின் உயரமான சிகரங்கள் என்று பார்த்தோமானால், மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள தொட்டபெட்டா (2620 மீ), முக்கூர்த்தி (2540 மீ) ஆகியவைகளைக் குறிப்பிடலாம். கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை சேர்வராயன் மலை(1500-1600 மீட்டர்) ஆகும். (நன்றி-thamizhdna.org)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2022, 14:15