தேடுதல்

இந்தியாவில் விவசாயம் இந்தியாவில் விவசாயம் 

இனியது இயற்கை – சேர நாட்டு வளம்

நாட்டில் எவ்வளவு வளம் இருந்தாலும் அதை அந்நாட்டில் வாழும் உயிரினங்கள் பெற்று இன்பமாக வாழ வழி வகை செய்வது அரசனின் திறம் ஆகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

  • கொழுமீன் குறைய ஒதுங்கி, வள்இதழ்க்
  • கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை
  • பைங்கறி நிவந்த பலவின் நீழல்,
  • மஞ்சள் மெல்இலை மயிர்ப்புறம் தைவர,
  • விளையா இளங்கள் நாற, மெல்குபு பெயரா,
  • குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும்
  • குடபுலம்....................... (சிறுபாணாற்றுப்படை 41-46)

சேர நாடு வளம் நிறைந்து விளங்கியது. இந்நாட்டில் எங்கும் மீன்கள் கொழுத்து விளையாடின. வளவிய இதழை உடைய செங்கழுநீர் மலரை எருமை மாடுகள் மேய்ந்தன. வயிறு நிறைய மேய்ந்த அம்மாடுகள் மிளகுக்கொடி படர்ந்த பலா மர நிழலில் படுத்துத் தூங்கின. அம்மாடுகளின் முதுகை மஞ்சள் செடிகள் தடவிக் கொடுத்தன. காட்டு மல்லிகைச் செடியாகிய படுக்கையின்மேல் அம்மாடுகள் கவலையில்லாது ஆழ்ந்து உறங்கின என்று புலவர் காட்சிப்படுத்துகிறார்.

சேரர்களின் ஆட்சியில் மனிதர்களே அன்றி விலங்குகள்கூட எவ்விதத் துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வதாக சிறுபாணாற்றுப்படையின் இப்பாடல் கூறுகிறது.

சேர நாடு நீர் வளமும் நில வளமும் நிரம்பியது என்பதை மேற்கண்ட பாடல் வெளிப்படுத்துகிறது. கொழுத்த மீன்கள் விளையாடுவது நீர் வளத்தைச் சுட்டுகிறது. சேர நாட்டுச் செல்வங்களுள் தலைசிறந்தது மிளகு. மிளகுக்கொடி, பலாமரம், காட்டு மல்லிகை, மஞ்சள் என்பன நில வளத்தைக் காட்டுகின்றன.

நாட்டில் எவ்வளவு வளம் இருந்தாலும் அதை அந்நாட்டில் வாழும் உயிரினங்கள் பெற்று இன்பமாக வாழ வழி வகை செய்வது அரசனின் திறம் ஆகும். அறநெறி தவறாமலும் வீர உணர்வுடனும் ஓர் அரசர் ஆட்சி செய்தால் அந்நாட்டில் உள்ள உயிரினங்கள் துன்பம் இல்லாமல் இன்பத்துடன் வாழும். இதன் குறியீடுதான் சேர நாட்டின் எருமை துயில் கொண்ட செய்தி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2022, 14:01