தேடுதல்

எல்புருஸ் மலை எல்புருஸ் மலை 

இனியது இயற்கை: உலகின் 10வது உயரமான எல்புருஸ் மலை

எல்புருஸ் மலை, 25 இலட்சம் ஆண்டுகளுக்குமுன் உருவானதாகவும், இரஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் உள்ள மலைகளில் இம்மலைச் சிகரமே மிக உயரமானது எனவும் கூறப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

ஆசியாவில் எவரெஸ்ட் (Everest) ஐரோப்பாவில் எல்புருஸ் (Elbrus), வட அமெரிக்காவில் தெனாலி (Denali) தென் அமெரிக்காவில் அக்குன்காகுவா (Aconcagua) அண்டார்டிக்காவில் வின்சன் மாசிப் (Vinson Massif) ஆஸ்திரேலியாவில் கொசியுஸ்கோ (Kosciuszko), ஓசியானியாவில் கார்ஸ்டென்ஸ் (Mount Carstensz-Jaya Peak), ஆப்ரிக்காவில் கிளிமஞ்சாரோ (Kilimanjaro) ஆகியவை, உலகில் ஒவ்வொரு கண்டத்திலும் அமைந்திருக்கின்ற உயரமான மலைகள் என புவியியல் ஆய்வாளர்கள் குறித்திருக்கின்றனர்.

எல்புருஸ் மலை

எல்புருஸ், இரஷ்யாவிலும், ஐரோப்பாவிலும் அமைந்திருக்கின்ற மிக உயரமான மற்றும், மிகவும் சிறப்புமிக்க எரிமலையாகும். இம்மலை, Caucasus மலைத்தொடரின் வடமேற்கே, கருங்கடலுக்கு 100 கிலோ மீட்டர் தூரத்திலும், காஸ்பியன் கடலுக்கு 370 கிலோ மீட்டர் தூரத்திலும் கடல் மட்டத்திற்கு மேலே 5,642 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது உலகின் பத்தாவது உயரமான மலையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. எல்புருஸ் மலை, ஏறத்தாழ 25 இலட்சம் ஆண்டுகளுக்குமுன் உருவானதாகவும், இரஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் உள்ள மலைகளில் இம்மலைச் சிகரமே மிக உயரமானது எனவும் கூறப்படுகிறது. இரு உயரமான சிகரங்களைக் கொண்டுள்ள இம்மலையின் மேற்கிலுள்ள சிகரம் 5,642 மீட்டரையும், கிழக்கிலுள்ள சிகரம் 5,621 மீட்டரையும் கொண்டிருக்கின்றன. இவை இரண்டுமே எரிமலைக் குணங்களைக் கொண்டதாகும். ஆயினும் தற்போது இந்த எரிமலை, இயக்கமற்றதாக உள்ளது. இந்த எரிமலை,ஏறக்குறைய கி.பி. ஐம்பதாம் ஆண்டில், Holocene புவியியல் சகாப்தத்தில் கடைசியாக வெடித்ததாகச் சொல்லப்படுகிறது. இம்மலையில் ஏறக்குறைய 260 சதுர கிலோ மீட்டர்கள் அளவுக்குக் காணப்படுகின்ற எரிமலை கற்குழம்புகள், புகை வெளியாகும் துளைகள், வெந்நீரூற்றுகள் போன்றவை இதற்குச் சான்றாக உள்ளன.

எல்புருஸ் மலையின் 138 சதுர கிலோ மீட்டர் பகுதி, 22 பனிச்சிகரங்களால் மூடப்பட்டுள்ளன. இவை, Kuban ஆற்றின் நீர்வளத்திற்கு ஆதாரமாக உள்ளன. இம்மலை, Caucasus பகுதியில் மலையேறுபவர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் முக்கிய இடமாக உள்ளது. இம்மலை, ஒரு கோடி ஆண்டுகளுக்குமுன் உருவாகத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.  1829ஆண் ஆண்டு ஜூலை மாதம் 10ம் தேதி, Khillar Khachirov என்பவர், எல்புருஸ் மலையின் கிழக்கு சிகரத்திற்கு முதலில் ஏறினார். 1874ஆம் ஆண்டில், F. Crauford Grove என்ற பிரித்தானியரின் வழிகாட்டலில் Frederick Gardner, Horace Walker, சுவிஸ் வழிகாட்டி Peter Knubel ஆகியோர் மேற்கு சிகரத்திலும் ஏறியுள்ளனர். இந்நிகழ்வு,  இரஷ்யப் பேரரசின் அறிவியல் நோக்கத்திற்காக நடத்தப்பட்டது. (நன்றி: விக்கிப்பீடியா)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2022, 13:36