தேடுதல்

மேற்குத் தொடர்ச்சி மலை மேற்குத் தொடர்ச்சி மலை 

இனியது இயற்கை - மேற்குத் தொடர்ச்சி மலை

மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், தமிழகம், கேரளம் வழியாகச் செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலை கன்னியாகுமரியில் தனது பயணத்தை முடிக்கின்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய நாட்டின் மேற்குப் புறத்தில் அரபிக் கடலுக்கு இணையாகவும் அமைந்துள்ள ஓர் அழகிய மலைத்தொடராகும். இது மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே ஆரம்பிக்கின்றது. பின்பு மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களின் வழியாகச் செல்லும் இந்த மலைத்தொடர்  கன்னியாகுமரியில் தனது பயணத்தை முடிக்கின்றது. இதன் நீளம் ஏறக்குறைய 1,600 கி.மீ. இதன் சராசரி உயரம் 900 மீ. இந்த மொத்த மலைத்தொடர்களின்  பரப்பளவு ஏறக்குறைய 1,60,000 சதுர கி.மீ. ஆகும்.

இதன் மிக  உயரமான சிகரம் ஆனைமுடி (2,695 மீ). இது கேரளாவில் அமைந்துள்ளது. இதுவே தென் இந்தியாவின் மிக உயரமான சிகரம் ஆகும். நீலகிரி மலை, ஆனை மலை, பழனி மலை, கொடைக்கானல் மலை, குற்றால மலை, மகேந்திரகிரி மலை, அகத்தியர் மலை (பொதிகை மலை), ஏலக்காய் மலை ஆகியவை மேற்கு மலைத்தொடரில் நமக்குத் தெரிந்த பெயர்கள்.

உலகில் பல்லுயிர் வளம் மிக்க 8 இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்று. இங்கு ஏறக்குறைய, 139 வகை பாலூட்டிகளும், 5000 வகை பூக்கும் தாவரங்களும், 508 வகை பறவைகளும், நிலத்திலும் நீரிலும் வாழ்கின்ற 176 வகை உயிரினங்களும் உள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2022, 15:01