தேடுதல்

இந்திய சுதந்திர தினம் இந்திய சுதந்திர தினம் 

ஆகஸ்ட் 15, இந்தியாவின் விடுதலைத் திருநாள்

இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்கத் தொடங்கிவிட்டனர் என்று உணர்ந்த ஆங்கிலேய அரசு, சுதந்திரம் வழங்குவது குறித்து சிந்திக்கத் தொடங்கியது.

மெரினா ராஜ்: வத்திக்கான்

ஆகஸ்ட் 15, 2022 இத்திங்களன்று இந்தியா தனது 76வது சுதந்திர நாளைக் கொண்டாடி மகிழ்கின்றது. முக்கால் நூற்றாண்டைக் கடந்து முழுமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்தியாவின் பெருமையைப் போற்றும் அதேவேளையில் நாம் சுதந்திரக் காற்றை சுகமாய் சுவாசிக்கக் காரணமான, சுதந்திரத்திற்காகப் போராடிய அத்தனை தியாகிகளையும் நினைத்து போற்றவேண்டியதும் நமது கடமையாகும். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிரித்தானிய ஆட்சியாளர்களிடமிருந்து நம் முன்னோர்கள் செய்த தியாகங்களின் பலனால் இந்தியாவிற்கு கிடைத்த இந்த விடுதலை நிச்சயம் நாம் கொண்டாடப்பட வேண்டியதே.

முப்பக்கமும் நீரால் சூழப்பட்டுள்ளதால் தீபகற்பம் எனவும் அழைக்கப்படும் இந்தியா, மேற்கே பாகிஸ்தான், கிழக்கே வங்காளதேசம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டபின்னர்,  அதிகமான நிலப்பரப்பைக் கொண்ட ஒரே நாடாக இருக்கின்றது. இந்நாடு, மன்னராட்சி காலத்தில் சீரும் சிறப்புமாக, செல்வச்செழிப்பும் பசுமை வளமுமாக, உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. சேர சோழ பாண்டியர்கள், இஸ்லாமியர்கள், தில்லி சுல்தான்கள், விஜய, முகலாய, மராட்டிய துர்ரானிய, சீக்கியப் பேரரசுகள் என, பல பேரரசுகளால் ஆட்சி செய்யப்பட்டு நாட்டின் எல்லைகளையும் செல்வங்களையும் விரிவுபடுத்தி வளர்ந்துவந்தது.

விஜய நகரப் பேரரசு காலத்தில், இந்தியாவிற்கு கடல் வழியாக வந்த வாஸ்கோடகாமா, நாட்டில் உணவிற்கு சுவை சேர்க்கும் கறி மசாலா பொருட்கள் அதிகமாக விளைவதை ஐரோப்பியர்களுக்கு எடுத்துரைத்தார். இதனால் ஐரோப்பியர்கள் வர்த்தக நோக்குடன் இந்தியாவிற்குள் கோழிக்கோடு துறைமுகம் வழியாக, 1498ஆம் ஆண்டு நுழையத் தொடங்கி, கோவா டையு, டாமன் மும்பை போன்ற இடங்களில் தங்களது வர்த்தக முகாம்களைத் தொடங்கினர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் நாட்டில் நுழைந்து, சூரத்தின் வடக்கு கரையோரத்தில் வர்த்தக முகாம்களைத் தொடங்க, அவர்களைப் பின்தொடர்ந்து பிரெஞ்சுக்காரர்களும் 1619ஆம் ஆண்டில் இந்தியாவில் நுழைந்தனர்.

வர்த்தகம் செய்வதற்காக இந்தியாவுக்குள் வந்த ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி, மெல்ல மெல்ல ஆட்சி நிர்வாகத்தில் தலையிட்டு, தன் வியாபார வெற்றிக்காக மன்னர்களுக்கு ஆலோசனை சொல்லி, பின்னர் ஆட்சியின் முடிவுகளை எல்லாம், தானே  எடுக்கத் தொடங்கியது. பல அந்நியர்களும் இந்தியாவிற்குள் நுழைந்ததால் குழப்பங்களும் சண்டைகளும் ஏற்பட, ஐரோப்பியர்கள் இந்திய நாட்டை ஆளத்தொடங்கினர். அவர்களிடமிருந்து சூழ்ச்சியாக ஆட்சியைப் பறித்த ஆங்கிலேயர்கள், இந்தியா கைப்பற்றிய அத்தனை நாடுகளையும் ஒரே நூற்றாண்டில் தன் வசமாக்கிக் கொண்டனர். 1757ஆம் ஆண்டில் இந்தியாவிற்குள் பிரித்தானியர்கள் வர்த்தகம் செய்ய நுழைந்து பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனத்தை உருவாக்கியதால், இந்தியா முழுவதும் ஆங்கிலேய ஆட்சியின்கீழ் வந்தது.

1914ஆம் ஆண்டு தொடங்கிய முதல் உலகப் போரினால் அதிகமாகப் பாதிப்படைந்த இந்தியாவிற்கு, 1915ஆம் ஆண்டு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வந்தார். அதற்குப்பின்பு. ஆங்கிலேயர்களை எதிர்த்து சத்தியாகிரக இயக்கத்தை ஆரம்பித்து, ஆறு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இரண்டாண்டுகளிலேயே விடுதலையும் செய்யப்பட்டார். அவர் காலத்தில்தான் பக்த்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி தூக்கிலிடப்பட்டனர்.  நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களும் அவரவர் பகுதிகளில் கடுமையான போராட்டங்கள் செய்யத் தொடங்கியது ஆங்கிலேயர்கள் மனதில் சலனத்தை ஏற்படுத்தியது. இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்கத் தொடங்கிவிட்டனர் என்று உணர்ந்த ஆங்கிலேய அரசு, சுதந்திரம் வழங்குவது குறித்து சிந்திக்கத் தொடங்கியது. தொடர் போராட்டங்கள், துப்பாக்கிச்சூடு, உயிரிழப்புகள், சிறைவாசம் என இந்தியா அடுத்த 100 ஆண்டுகள் மிகவும் துன்பத்திற்குள்ளானது. அதேவேளையில் இரண்டாம் உலகப் போரில் பெரும் செல்வத்தை இழந்து இங்கிலாந்து நாடே களையிழந்துக் காணப்பட்டது. எனவே அப்போதைய இங்கிலாந்து அரசவைக் கூட்டத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கி விடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

இதற்காக, இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கான தனிநாடு கோரிக்கையும் வலுத்துவந்த அந்த நேரத்தில் இந்த பிரச்சனையை சரி செய்து இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் பொறுப்பு மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கு இருந்தது. இதற்காக பலகட்டப் பேச்சுவார்த்தைகள், சண்டை சச்சரவுகள் மற்றும் மனக்கசப்புகள் ஆகியவற்றைத் தாண்டி இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் பிரிக்கப்பட்டு சுதந்திரம் வழங்கப்பட்டது. இதன் விளைவாக, ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 14ஆம் தேதி பாகிஸ்தானும், ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவும் தங்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றன. இந்தியாவின் தனிப்பெரும் பெருமைகளான வேற்றுமையில் ஒற்றுமை, மதச்சார்பின்மை, கலாச்சாரம் ஆகியவற்றைக் குலைக்காதவண்ணம் நடந்துகொள்வோம் என்று நாம் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொள்ளும் வேளையில் நம் பெருமைக்கு பெருமை சேர்க்கும், தேசியக்கொடி, நாட்டுப் பண் போன்றவற்றின் வரலாற்றையும் அறிந்து கொள்வோம்.

நாட்டுப்பண்

​​வங்கக் கவிஞர் ரபிந்தரநாத் தாகூர் அவர்கள், 1911ஆம் ஆண்டு எழுதிய "பாரதோ பாக்யோ பிதாதா" என்ற பாடல்தான் பின்னாளில் ஜன கன மன பாடலாக மாறியது. இந்தியா குடியரசாக மாறிய ஆண்டான 1950ஆம் ஆண்டு சனவரி 24ம் தேதி இப்பாடலை நாட்டுப் பண்ணாக இந்தியா அங்கீகரித்தது. 1911ஆம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது இப்பாடல் தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி என்பவரால் முதன் முதலாகப் பாடப்பட்டது. சனவரி 24, 1950ஆம் ஆண்டு தான் "சன கன மண' இந்தியாவின் தேசிய கீதமாகவும், "வந்தேமாதரம்' நாட்டுப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் அவர்களால் அறிவிக்கப்பட்டது. தேசிய கீதத்தை ஒரு நிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது. தேசிய கீதம் பாடும்போது ஆடாமல் அசையாமல் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும். இந்தியாவில் நடைபெறும் எல்லா அரசு நிகழ்ச்சிகளின் இறுதியிலும் இப்பாடல் பாடப்பெற்று அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்துவது வழக்கமாக உள்ளது.

தேசியக் கொடி

இந்தியாவின் முதல் தேசியக் கொடி 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி கொல்கத்தாவில் பாரீஸி பாகன் ஸ்கோயர் என்ற இடத்தில் சிவப்பு மஞ்சள், பச்சை என மூன்று வண்ணங்கள்கொண்ட கொடியாக ஏற்றப்பட்டது. தற்போது உள்ள, இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை, நடுவே அசோக சக்கரத்துடன்கூடிய தேசியக் கொடி 1947ஆம் ஆண்டு ஜூலை 22ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டு, இறுதியாக அதே ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஏற்றப்பட்டது.

​​வந்தே மாதரம்

வந்தே மாதரம் நமது தேசிய பாடல். இந்த பாடலை பக்கீம் சந்தர சேட்டர்ஜி 1880ஆம் ஆண்டு ஆனந்தமத் என்ற அவரது புத்தகத்தில் எழுதினார். 1896ம் ஆண்டு இதை முதன் முதலில் ரபிந்திநாத் தாகூர் பாடினார். தேசிய கீதம் அங்கீகரிக்கப்பட்ட அதே 1950 ஆண்டு ஜனவரி 24ல், இது தேசியப் பாடலாக அங்கீகரிக்கப்பட்டது.

வரைபடம்

இந்தியா சுதந்திரம் பெறும்போதே இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது. அதன்பின் இந்தியாவின் எல்லைகளைக் கொண்ட வரைபடம், ஆகஸ்ட் 3ம் தேதியே தயாராகி ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிடப்பட்டு, இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடமாக அறிவிக்கப்பட்டது.

இதே நாளில் சுதந்திர தினம் கொண்டாடும் பிற நாடுகள்

​இந்தியா தனது சுதந்திர நாளைக் கொண்டாடும் அதேவேளையில் வட கொரியா மற்றும் தென் கொரியா போன்ற இரு நாடுகளும் ஆகஸ்ட் 15 அன்று தங்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றன. 1945ஆம் ஆண்டு, அமெரிக்கா மற்றும் சோவியத் படைகள் இணைந்து கொரியா மீதான 35 ஆண்டு கால ஜப்பானிய ஆக்ரமிப்பை முடிவுக்குக் கொண்டு வந்து சுதந்திர நாடாக அறிவித்தன. இரண்டாம் உலகப் போர் 1945ஆம் ஆண்டு இந்நாளில் முடிந்த பிறகு, 1948இல், சோவியத் ஆதரவுப் பகுதி, வட கொரியா என்றும்,  அமெரிக்காவின் ஆதரவுப் பகுதி தென் கொரியா எனவும் பிரிக்கப்பட்டது. தென் கொரியா அதிகாரப்பூர்வமாக கொரியக் குடியரசு என்று அழைக்கப்படுகிறது.

உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான லீச்சென்ஸ்டைன் (Liechtenstein) 1866ஆம் ஆண்டில் ஜெர்மன் ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, லீச்சென்ஸ்டைன் அதிபரின் அரசு, ஆகஸ்ட் 15ம் தேதியை நாட்டின் தேசிய தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தில்முன் நாகரிகத்தின் பண்டைய நிலமான பஹ்ரைன், பிரித்தானிய ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடி 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்றது.

தியாகிகளும் தலைவர்களும் தங்களது உயிரைப் பணயம் வைத்து மீட்டுத் தந்த சுதந்திரத்தின் மாண்பை உணர்ந்து, அதனைப் போற்றி வாழ்வோம். சுதந்திரம் என்பது விரும்பியதை எல்லாம் செய்வது அல்ல, நல்லதை செய்வது மட்டுமே சுதந்திரம் என்ற உண்மையை உணர்வோம். இன்றைய நமது சுதந்திரக் காற்றுக்காக, பல தியாகிகளின் சுவாசங்கள் விதையாய், உரமாய் நீராய் தெளிக்கப்பட்டிருக்கின்றன என்பதை உணர்ந்து சுதந்திரத்தின் மேன்மையை நம் நற்செயல்களால் வெளிப்படுத்தி வளமாக வாழ்வோம். வந்தாரை வாழவைக்கும் நம் நாடு, இங்கு வாழ்வோரையும் வளமுடன் வாழவைக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவோம். அனைவருக்கும் இனிய 76ஆவது சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்.     

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2022, 13:44