அணு ஆயுதமற்ற உலகு இயலக்கூடியதே: ஐ.நா. பொதுச் செயலர்
மேரி தெரேசா: வத்திக்கான்
அணு ஆயுதப் போருக்கு வழியமைக்கும்வண்ணம், நாடுகள் அணு ஆயுதங்களைச் சேமித்து வைத்திருப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது என்று, ஆகஸ்ட் 06, இச்சனிக்கிழமையன்று ஹிரோஷிமா நகரிலிருந்து கூறியுள்ளார், ஐ.நா.வின் தலைமை பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் உலகில் முதன் முதலாக அணுகுண்டு போடப்பட்டதன் 77வது ஆண்டின் நினைவு, அந்நகரின் அமைதி நினைவுப் பூங்காவில் இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டவேளை அதில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், உலக அளவில் அணு ஆயுதக் களைவு இடம்பெறவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அணு ஆயுதங்கள், எதற்கும் உதவாதவை, மற்றும், முட்டாள்தனமானவை என்று குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், 1945ஆம் ஆண்டில் ஹிரோஷிமா நகருக்கு மேலே சூழ்ந்திருந்த கரும்புகைமண்டலத்திலிருந்து நாம் இதுவரை கற்றுக்கொண்டுள்ளது என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இன்று உலகில் ஒரு புதிய ஆயுதப் போட்டி வேகமெடுத்துள்ளது என்றும், உலகத் தலைவர்கள், கோடிக்கணக்கான டாலர் பெறுமான அணு ஆயுதச் சேமிப்பை அதிகரித்து வருகின்றனர் என்றும், இன்று உலகில் ஏறத்தாழ 13 ஆயிரம் அணு ஆயுதங்கள் சேமிப்பில் உள்ளன என்றும், கூட்டேரஸ் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கு முதல் கொரியத் தீபகற்பம் வரையிலும், இரஷ்யா உக்ரைனை ஆக்ரமித்திருப்பதிலும் அணு ஆயுத அச்சுறுத்தல் நிலவி வருகின்றது மற்றும், மனித சமுதாயம், துப்பாக்கி குவியல்களோடு விளையாடி வருகிறது என்றும் உரைத்துள்ள கூட்டேரஸ் அவர்கள், தற்போது நடைபெற்றுவரும், உலக அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் குறித்த பரிசீலனை கருத்தரங்கு, நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், இளம் அமைதி ஆர்வலர்கள், ஜப்பான் பிரதமர் மற்றும், உள்ளூர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். (UN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்