தேடுதல்

காய்கறி விற்பனை காய்கறி விற்பனை  (ANSA)

இனியது இயற்கை - பாரம்பரிய வழிகாட்டல்கள்

‘சோளம் விதைக்கையில… சொல்லிப்புட்டு விதை’னு தெம்மாங்குப் பாட்டுகூட உண்டு. ஏன், சோளம் விதைக்கும்போது மட்டும் சொல்லிப்புட்டு விதைக்கச் சொல்கிறார்கள்?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் 

முன்பெல்லாம், வீட்டுத்தேவைக்கு, அரிசி வேண்டுமென்றால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, நெல்லை அரைத்து, அரிசியாக்கிவிடுவோம். ஆனால், இப்போதெல்லாம் ஓர் ஆண்டிற்குத் தேவையான அரிசியைத் தயார் பண்ணி வைக்கிறோம். மூன்று மாதங்களில், அரிசியாக்கி சாப்பிட்டா, சாப்பாடு சுவையாவும், மணமாவும் இருக்கும். நாள் கூடக்கூட அரிசியுடைய வாசனை மறைந்துவிடும். இதுகூட பரவாயில்லை, கடையில் இருந்து அரிசியை வாங்கிவிட்டு, வீட்டுக்குப்போய், காற்றோட்டம் இல்லாமல் அடைத்து வைக்கும்போது, வண்டு பிடித்து, மொத்த அரிசியும் வீணாய்ப் போய்விடுகிறது.

‘சோளம் விதைக்கையில… சொல்லிப்புட்டு விதை’னு தெம்மாங்குப் பாட்டுகூட உண்டு. அதென்ன, சோளம் விதைக்கும்போது மட்டும் சொல்லிப்புட்டு விதைக்கச் சொல்கிறார்கள் என்று தோன்றலாம். இளஞ்சோளப் பயிர்களில் நச்சுத்தன்மை இருக்கும். அதை, ஊரில் இருக்கின்ற ஆடு மாடுகள் கடித்தால் சொக்கிப்போய் சுருண்டு விழுந்துவிடும். கொஞ்சம் கவனிக்காமல் விட்டால், அந்த வாயில்லாத ஜீவன்களின் உயிரைக் காப்பாற்றுவது மிகவும் சிரமம். அதனால்தான், சோளம் விதைச்சா, ஊரு முழுக்கச் சொல்லி வைக்கச் சொன்னார்கள்.

விதைப்பு, நடவு என விவசாய வேலை எது தொடங்கினாலும், அதை வடக்குப் பக்கமா சனி (ஈசான்ய) மூலையில் இருந்துதான் தொடங்குவார்கள். அதுவும், தேங்காய், பழம் வைத்து சாமி கும்பிட்டுவிட்டுத்தான், வேலையை ஆரம்பிப்பது வழக்கம். இதுக்குக் காரணம் என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு, வடகிழக்குப் பருவ மழைதான் ஆதாரம். அதனால், அந்த மழை வருகிற திசையை வணங்குகிற விதமாகத்தான், சனி மூலையில் இருந்து வேலையைத் தொடங்குகிறார்கள்

வீட்டுத் தோட்டத்தில் நத்தைகள் நடமாடுவதைக் கண்டால் சிலருக்கு அலர்ஜியா இருக்கும். அதுவும் பெண்கள், நத்தையைப் பார்த்தால், செடிகள் பக்கமே போக மாட்டார்கள். நத்தை நடமாட்டத்தைத் தடுக்க, முட்டையுடைய ஓடுகளை செடிகளுக்குப் போட்டால், நத்தைகள் அந்தப் பக்கம் வராது. முட்டை ஓடும் மக்கி, உரமாகி, செடிகளும் செழிப்பாக இருக்கும். (pannaiyar.com)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2022, 14:22