தேடுதல்

நெல்சன் மண்டேலா. நெல்சன் மண்டேலா. 

வாரம் ஓர் அலசல் தென்னாப்ரிக்க (கருப்பு) காந்தி நெல்சன் மண்டேலா

என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள். - நெல்சன் மண்டேலா

மெரினா ராஜ்-  வத்திக்கான்

துணிவு என்பது அச்சமற்று இருப்பது அல்ல, அதை வெற்றி கொள்வது, அச்சம் இல்லாதவர், துணிவான மனிதர் அல்ல, அதை வென்றவரே துணிவான மனிதர் என்பதனை தன்னுடைய சொல்லில் மட்டுமல்லாது செயலிலும் செய்து காட்டிய நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela) அவர்களின் பிறந்த நாள் உலக நெல்சன் மண்டேலா தினமாக கொண்டாடப்படுகின்றது.

எனது வெற்றிகள் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள் எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதை வைத்து மதிப்பிடுங்கள் என்னும் புகழ்வாய்ந்த வரிகளுக்கு சொந்தமான நெல்சன் மண்டேலா 1918 ஜூலை 18 தென்னாப்ரிக்காவில் உள்ள டிசேக்கி கிராமத்தில் பிறந்தவர். உலகமெல்லாம் சுதந்திரக் காற்றை மகிழ்வாக சுவாசித்துக் கொண்டிருக்க, சொந்த நாட்டிலேயே அடிமைகளாய் துவண்டு, இன ஒதுக்கல் மூலம் வேறுபாட்டை கண்டு கொண்டிருந்த தென்னாப்ரிக்க மக்களின் அடிமை நிலையை மாற்றியவர் மண்டேலா.

வெள்ளையர் கருப்பினத்தவர் வெவ்வேறு பகுதிகளில் வாழ்வதும் உணவு, உடை, வாழும் இடம் என அனைத்திலும் ஏற்றத்தாழ்வுகளோடு நடத்தப்படுவதையும் கண்ணெதிரேக் கண்ட மண்டேலா, அவர்களின் வாழ்விற்கு ஒளி கொடுக்க எண்ணினார். வெள்ளையர் அரசுக்கு எதிராய் போராடி குரல் கொடுக்க, உலகமே அவருக்கு ஆதரவாக ஒன்றிணைந்து குரல் கொடுத்தது. இதனால் கோபமுற்ற வெள்ளையர்கள் அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்தபோதும், சிறைக்கூடத்தையும் எழுச்சிக் கூடாரமாக மாற்றியவர் மண்டேலா. அங்கிருந்த கைதிகளை ஒன்றிணைத்து அவர்களுக்கென்று குழு அமைத்து அவர்களிடத்தில்  சுதந்திரப்பற்றை வளர்த்தார்.

 உங்கள் குறிக்கோளை அடைவதில் விடாப் பிடியாய் இருங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று  இன்றைய இளைஞர்களுக்கு கூறும் செய்தியை அன்றே தன் வாழ்வில் கடைபிடித்தவர். தன் இன மக்களின் விடுதலை ஒன்றே தனது குறிக்கோளாகக் கொண்ட மண்டேலா  தனிச்சிறையில் அடைக்கப்பட்டு துன்புற்றபோதும், தன் குறிக்கோளில் உறுதியாக இருந்தார்.  தங்கள் குடும்பத்தாரையோ வெளிநபர்களையோ பார்க்க அனுமதிக்கப்படாத நிலையில், 1969 ஆம் ஆண்டு ஜூலை 13 அன்று தன்னுடைய மூத்த மகன் வாகன விபத்தில் இறந்த செய்தியைக் கேட்டு துடித்தார். ஆங்கிலேய அரசிடம் மன்னிப்புக் கேட்டால் விடுதலை என்றிருந்த நிலையில் தான் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்து தன் மகனின் இறுதிச்சடங்கையும் தவிர்த்தார்.

தன் நாட்டின் மக்களுக்காக, 1964 ஆம் ஆண்டு  முதல் 1991 ஆம் ஆண்டு வரை 27 ஆண்டுகள்  சிறைத்தண்டனை அனுபவித்த மண்டேலா அவர்கள் 1994 ஆம் ஆண்டு, கருப்பினத்தவர்களும் அனுமதிக்கப்பட்ட  மக்களாட்சி முறைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசுத்தலைவரானார். எண்ணற்ற நற்செயல்களையும்  திட்டங்களையும் நிறைவேற்றி, இதுவரை இருளில் இருந்த தென்னாப்ரிக்க மக்களின் வாழ்விற்கு ஒளியேற்றினார். 

நாடும் மக்களும் இனமும் நல்வாழ்வு பெறவேண்டும் என்பதை மட்டுமே தன் குறிக்கோளாகக் கொண்ட மண்டேலா, தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஆண்டுகளில் தானாகவே பதவி விலகினார். அடுத்த தலைமுறைக்கு வழிவிடும் நோக்கில் தன்  அதிகாரத்தைத் துறந்த அவர், தென்னாப்ரிக்க மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைத்தார்.  

பாரத ரத்னா விருது, நேரு சமாதான விருது, சமாதானத்துக்கான நோபல் பரிசு, மகாத்மா காந்தி சர்வதேச விருது என பல விருதுகளையும் வாங்கிய பெருமை இவரையே சேரும். குறிப்பாக இந்தியர் அல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா கொடுக்கப்பட்டது என்றால் அது இவர் ஒருவருக்கே. மத நல்லிணக்கம், ஆண் பெண் சம உரிமைக்கு பாடுபடுதல், மனித உரிமை மேம்பாடு, தன்னலமற்ற சேவை போன்றவற்றிற்காக உழைத்த மண்டேலா அவர்களின் பணியைப் பாராட்டி ஐக்கிய நாடுகளின் அவை அவரது பிறந்த நாளான, ஜூலை 18 ஆம் தேதியை, அனைத்துலக நெல்சன் மண்டேலா தினமாக கொண்டாட 2010ம் ஆண்டு அறிவித்தது.

தன்னுடைய வாழ்வாலும் சொல்லாலும் தன்  இன மக்களுக்கு முன் மாதிரிகையாக திகழ்ந்த மண்டேலாவிடம் ஏராளமான நற்குணங்களும் மதிப்பீடுகளும் நிறைந்து காணப்பட்டன. அனைவரும் சமமாகவே இவ்வுலகில் படைக்கப்பட்டிருக்கிறோம், அடிமைத்தனம் நிறவெறி வறுமை போன்றவற்றை உருவாக்கிய  மனிதர்களாலே இது அழிக்கப்படவும் , வெல்லப்படவும் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார் மண்டேலா. உலகை மாற்றும் ஆயுதம் கல்வி என்பதை உணர்ந்த அவர் தன் இன மக்களின் கல்வி அறிவிற்காக பல திட்டங்களை உருவாக்கினார். 

முழு ஈடுபாடு, மற்றும் ஆர்வத்துடன் செய்யும் செயல்களில் கட்டாயம் நிறை வெற்றி பெற முடியும்  என்று கூறும் மண்டேலா உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி மன அமைதிக்கு வழிவகுக்கும்  உடற்பயிற்சியை அனுதினமும் செய்ய வலியுறுத்தியுள்ளார். கடந்த கால செயல்களை குறை கூறுவதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை அதனை அப்படியே ஏற்று அதிலிருந்து கிடைக்கும் அனுபவப்பாடங்கள் மூலம் எதிர்கால வாழ்வை அமைத்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை என்பது அவர் நமக்கு விட்டுச் சென்ற பாடமாகும்.

சாதாரண மக்களாலேயே இந்த உலகமும் அதன் வரலாறும் படைக்கப்படுவதால்  மக்களை மாண்போடு வாழச் செய்வோம்  என்பதை தன் வாழ்வால் சுட்டிக் காட்டி,சமத்துவம், கல்வியறிவு, விடாப்பிடியான குறிக்கோள் கொண்டு வாழ்ந்து சிறந்தவர் மண்டேலா. பின்னால் இருந்து கூட்டத்தை வழிநடத்துங்கள், முன்னால் போகின்றவர் தன்னால் தான் முன்னேறி செல்கின்றோம் என்பதை நம்ப வையுங்கள் என்று கூறியவர் சொன்னபடியே பின்னால் இருந்து, முன்னால் இருப்பவர்களை வழிநடத்தியவர் தனது 95 வது வயதில், டிசம்பர் 5 2013 அன்று மறைந்தார்..

ஒருவர் தோல்வியே அடையாததால் உலகப் புகழ் பெறுவதில்லை மாறாக ஒவ்வொரு தோல்வியிலும் துவளாது மீண்டும் மீண்டும் எழுவதால் தான் புகழ் பெறுகின்றார்கள் என்ற மண்டேலாவின் வார்த்தையை நினைவில் நிறுத்தி செய்யும் செயல்களை துணிவோடு செய்வோம். பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் நேரத்தையும் ஆற்றலையும் கொடுப்பதை விட  சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது என்று கூறிய மண்டேலாவைப் போல ஒருவர் மற்றவருக்கு தன்னலம் கருதாது உதவி செய்து வாழ்வோம். அனைவருக்கும் அனைத்துலக நெல்சன் மண்டேலா தின நல்வாழ்த்துக்கள்    

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2022, 15:05