இனியது இயற்கை: மனிதரை வதைக்கும் பூச்சி மருந்துகள்
மேரி தெரேசா: வத்திக்கான்
இந்தியாவில் பயிர்செய்யப்படும் நிலப்பரப்பில், ஐந்து விழுக்காடு இடத்தில் பருத்தி பயிர்செய்யப்படுகின்றது. ஆனால் நாட்டில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் 52.55 விழுக்காடு, பருத்திப் பயிருக்கு மட்டும் தெளிக்கப்படுகிறது. 24 விழுக்காடு நிலப்பரப்பில் பயிர்செய்யப்படும் நெல்பயிரில் 18 விழுக்காடு மருந்துகள் இடப்படுகின்றன. மூன்று விழுக்காடு நிலப்பரப்பில் பயிர்செய்யப்படும் காய்கறிகளில் 14 விழுக்காடு மருந்துகள் போடப்படுகின்றன. கரும்புப் பயிரில் இரண்டு விழுக்காடு மருந்துகளும், ஆறு விழுக்காடு நிலப்பரப்பில் பயிரிடப்படுகின்ற இதரப் பயிர்களில் இரண்டு விழுக்காடு மருந்துகளும் தெளிக்கப்படுகின்றன. எனவே பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி நம் விவசாயத்தைப் பெருக்கலாம் என நமக்கு நாமே நம்பி, நம் உணவில் நஞ்சை சேர்த்துக்கொள்கிறோம். பூச்சிக்கொல்லி மருந்துகளில் பாரகுவாட் என்னும் மருந்து மிக மோசமான வேதியப் பொருள் என உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது. இம்மருந்தின் நாற்பது விழுக்காடு கலவையில் 14 மில்லி எடுத்தால், அது மனிதரின் கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளைச் சிதைத்துவிடுகின்றது. ஒரு தேக்கரண்டி கலவை ஒருவரைக் கொல்லவல்லது. இதைத் தொட்டாலோ, நுகர்ந்தாலோ, அது வயிற்றுவலி, வாந்தி, வயிற்றோட்டம், மற்றும் உடல் வலியினை உண்டாக்கும். இவ்வாறு பூச்சிக்கொல்லிகள் குறித்த மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கைவிடுத்துள்ளன. எனவே இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவோம், உடல்நலம் காப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்