இனியது இயற்கை: மண்வளம்
மேரி தெரேசா: வத்திக்கான்
மண் என்பது, கனிம மற்றும், கரிமக்கூழ்மங்கள், இறந்த மற்றும், உயிருள்ள தாவரங்கள், விலங்குகள், நீர், வாயுக்கள் ஆகியவை கொண்ட ஒரு கனிமப்பொருள். தாவரங்கள் வளரத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் தாதுக்களையும் உள்ளடக்கியது மண். நிலத்தின் மேல் பகுதியிலுள்ள இம்மண்தான் தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ளது. மண்வளம் குறைந்தால் அனைத்துமே அழிந்துவிடும். ஓர் அங்குலம் மண் உருவாக ஏறத்தாழ 500 முதல் 600 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்று காடுகள் அழிக்கப்படுவதால் மண் அரிப்பு ஏற்பட்டு விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது. சத்துள்ள மண், மழை நீரால், கனமழை காரணமாக ஏற்படும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிடுவதால், நிலம், மண் வளம் குறைந்து உற்பத்திக்குப் பயனற்றதாய் மாறிவிடுகிறது. ஒரு கிராம் செழுமையான மண்ணிலே 250 கோடி நுண்கிருமிகளும், நான்கு இலட்சம் பூஞ்சைகளும், முப்பதாயிரம் ஒரு செல் விலங்குகளும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் அதற்கேயுரிய இயற்கைச் செயல்பாடுகள் இருக்கின்றன. இவை ஒன்றோடு மற்றொன்று இணைந்து செயல்பட்டு, செழுமையான மண் கிடைக்க உதவுகின்றன. நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம், இரும்பு, மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், குளோரின், மாலிப்டினம் போன்றவைகள், மண்ணிலிருந்து தாவரத்திற்குச் சத்துக்களாகக் கிடைக்கின்றன, மற்றும், மண், வேளாண் உற்பத்திக்கு அடித்தளமாக அமைகிறது. (நன்றி: இணையதளங்கள்)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்