இனியது இயற்கை – மனிதரின் அரணாக மாங்குரோவ் காடுகள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மாங்குரோவ் காடுகள் கடலோரத்தின் வளமாகவும், அரிய வகை உயிரினங்களின் வாழ்விடமாகவும், கடலோரத்தைப் பாதுகாக்கும் அரணாகவும் திகழ்கின்றன. மாங்குரோவ் காடுகள், கடல் அலைகளைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றன. சுனாமி பேரழிவின்போது, மாங்குரோவ் காடுகள் செழித்து வளர்ந்திருந்த இடங்களில் அதன் பாதிப்பு மிகவும் குறைவாக உணரப்பட்டது. இதன் பிறகுதான் மாங்குரோவ் காடுகளின் முக்கியத்துவம் உலகிற்குத் தெரியவந்தது. சுனாமியின் பேரழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, கடலோரங்களில் சவுக்கு மரங்களையும், முகத்துவாரப் பகுதிகளில் மாங்குரோவ் காடுகளையும் வளர்க்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது. இதன் விளைவாக. தேங்காய்த்திட்டு, அரியாங்குப்பம் ஆகிய கடலோர கழிவுமுகப் பகுதிகளில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட சதுப்பு நிலத் தாவரங்கள் நடப்பட்டன. இவைகள் இப்போது செழித்து வளர்ந்து, பேரழிவுகளிலிருந்து காக்கும் தடுப்பு அரண்களாக மாறியுள்ளன.
இங்கு 24 வகையான மீன் வகைகள், 29 வகையான புல்வகைகள், பல வகையான நண்டினங்கள், இனப்பெருக்கத்திற்காக வந்து போகும் 14 வகையான பறவைகள், ஆமை, பாம்பு, பட்டாம்பூச்சிகள் என ஏராளமான பல்லுயிர்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இப்போது, இந்தச் சதுப்பு நிலக்காடுகள் மனிதரின் பேராசையினால் அழிக்கப்பட்டு வருவது பெரும் வேதனையளிக்கிறது. இக்கொடிய நிலை, நம் தலைமேல் நாமே மண்ணை வாரிக் கொட்டிக் கொள்வதற்குச் சமம் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்