இனியது இயற்கை – காடழிப்பால் காணாமல்போகும் விவசாயம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதன் காரணமாகத்தான் உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குற்றச்சாட்டு தற்போது வலுப்பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவில் காடுகள் சூறையாடப்படுகின்றன என்ற அதிர்ச்சிதரும் உண்மைகளும் வெளியாகி வருகின்றன. "என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில். ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில், ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில். உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்" என்ற கவிஞர் மருதகாசியாரின் பாடல் வரிகள் பொய்த்துப்போகும் அளவிற்கு, காடழிப்பால் நிகழ்ந்துள்ள பருவநிலை மாற்றம் விவசாயத்தை மறுபுறம் சீரழிந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் காடுகள், வன உயிரினங்கள், கடற்கரைகள், ஆகியவை மிகப்பெரிய சூழலியல் பாதிப்புக்குள்ளாகியுள்ளன என்பது நமக்கு வேதனை அளிக்கிறது.
மக்களின் அனுமதியின்றி, பல்வேறு பெருநிறுவனங்களுக்குக் காடுகள் தாராளமாகத் தாரை வார்க்கப்படுகின்றன. ஒருபுறம் காலநிலை மாற்றத்தாலும், மறுபுறம் பல்வேறு பெருநிறுவனங்களாலும் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில், வன பாதுகாப்புச் சட்டத்தின் (FCA) கீழ் ஒப்புதல் பெறப்பட்டு, பல்வேறு பெருநிறுவனங்களால் ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2018-19-ஆம் ஆண்டில் மட்டும் 30,36,642 இலட்சம் மரங்கள் பல்வேறு காரணங்களுக்காக கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில், மனிதர்களின் ஊடுருவலுக்காகவும் காட்டு நிலங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2017-ஆம் ஆண்டில் 278 சதுர கிலோமீட்டர் அளவிற்கும், 2019-ஆம் ஆண்டு ஜூலை வரையில் 92 சதுர கிலோமீட்டர் அளவிற்கும் நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் புலப்படுத்துகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்