தேடுதல்

 SAVE THE CHILDREN - Fame: colpite nel mondo 276 milioni di persone, numero raddoppiato negli ultimi 2 anni SAVE THE CHILDREN - Fame: colpite nel mondo 276 milioni di persone, numero raddoppiato negli ultimi 2 anni  

மகிழ்வான எதிர்காலத்தை குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுப்போம்

போர் வறட்சி பசி நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 19 நாடுகளுக்கு 2 கோடியே 85 இலட்சம் டாலர் ஒதுக்கப்பட்டு உணவு சுகாதாரம் போன்ற அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடந்த 10 ஆண்டுகளில் உலகம் மிக மோசமான உணவுப்பற்றாக்குறையை சந்தித்து வருகின்றது எனவும், வறட்சி, போர், பெருந்தொற்று, காலநிலை மாற்றம், நோய் போன்றவற்றால்  எண்ணற்ற குடும்பங்கள் பாதிக்கப்பட்டு அவர்களின் குழந்தைகள் கடுமையான துன்பங்களைச் சந்திக்கின்றனர் என்றும், Save the Children என்ற நிறுவனத்தின் மனிதாபிமானப் பணிகளுக்கான இயக்குனர்  கேப்ரியெல்லா வாய்ஜ்மென்  கூறியுள்ளார்.

  ஒவ்வொரு நாளும் உணவின்றி பட்டினியாக இருப்பவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 50 இலட்சம் என்றிருந்த நிலை  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இருமடங்காகி 27 கோடியே 60 இலட்சத்தை நெருங்கி இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும், எத்தியோப்பியா, ஏமன், தென் சூடான், ஆப்கானிஸ்தான், சொமாலியா போன்ற நாடுகளில் மட்டுமே ஏறக்குறைய 7,50,000 மக்கள் அனுதினமும் பசியோடும் பட்டினியோடும் இருப்பதாக வருத்தத்துடன் கூறிய வாய்ஜ்மென்,  உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கால்நடைகளுக்குரிய அசுத்தமான நீர், அழுகிய இறைச்சி, போன்றவற்றை உண்பதும், உணவிற்காக விலங்குகளுடன் சண்டை போடும் அவல நிலையும் உருவாகியுள்ளதாகவும், இதனால் வயிற்றுப் போக்கு போன்ற கடுமையான உடல் நோய்களால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் உக்ரைன் போரின் விளைவான, உலகளவில் உணவுமுறை சீர்குலைப்பு, கோதுமை சூரியகாந்தி எண்ணெய் போன்ற பொருட்களின் விலை உயர்வு ஆகியவை, ஆப்கானிஸ்தான் முதல் ஏமன், மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் சஹேல் பகுதி வரை கடுமையான உணவு பற்றாக்குறையையும், ஊட்டச்சத்து குறைபாட்டையும், உயிருக்கு ஊறு விளைவிக்கும் நோய்களையும் ஏற்படுத்தி இருப்பதாக கவலையை வெளியிட்டார் வாய்ஜ்மென்.

ஆப்பிரிக்காவில் கால நிலை மாற்றத்தின் காரணமாக நான்கு பருவ மழைகள் இல்லாமல் இருப்பதால் வறட்சி அதிகமாகி, 1 கோடியே 84 இலட்சம் மக்களிடத்தில் கடுமையான உணவு நெருக்கடியையும் உணவுப் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.

 பசியாலும் பட்டினியாலும் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான, மகிழ்வான உலகத்தை, துன்பம் பசி இல்லாத வளமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பது, Save the Children என்ற  தங்களது அமைப்பின் நோக்கம் என்றும், இதனை நனவாக்க உலக நாடுகளின் ஓன்றிணைந்த பதில் உதவும் என்றும், நன்கொடையாளர்களும் தன்னார்வளர்களும் துரிதமாக செயல்பட துவங்க வேண்டும்  என்றும் கூறினார்  Save the Children அமைப்பின் கேப்ரியெல்லா வாய்ஜ்மென்.

 பசி தாகத்தினால் ஏற்படக்கூடிய நோய்கள் பெரும்பாலும் குழந்தைகளை அதிகமாக பாதிக்கின்றன எனவும், 2011ஆம் ஆண்டு சோமாலியா வறட்சியில் பலியான  2,60,000 பேரில் பாதி பேர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்  எனவும், இதே பட்டினி என்னும் உயிர்க்கொல்லி நிலை எதிர்காலத்தில் தொடராமல் இருக்க, போர் வறட்சி பசி நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட எத்தியோப்பியா, ஏமன், தென் சூடான், ஆப்கானிஸ்தான், சொமாலியா போன்ற 19 நாடுகளுக்கு 2 கோடியே 85 இலட்சம் டாலர் பணம்  உலகளவில் ஒதுக்கப்பட்டு, உணவு சுகாதாரம் போன்ற அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட உள்ளன என அறிவித்துள்ளது Save the Children அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2022, 13:55