வாரம் ஓர் அலசல்: கடவுளின் கனவைப் புறக்கணியாதீர்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
பக்தர் ஒருவர், தன் குருவிடம் சென்று, ஐயனே, ஞானம் பெறுவதற்குமுன் தாங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்று கேட்டார். காட்டில் விறகு வெட்டும் வேலை செய்துகொண்டிருந்தேன் என்று பதில் சொன்னார் குரு. இப்போது ஞானம் பெற்ற பிறகு என்ன செய்து வருகிறீர்கள் குருவே என்று பக்தர் கேட்டார். மகனே, இப்போதும் காட்டில் விறகு வெட்டும் வேலைதான் என்று குரு சொன்னதும், வியப்படைந்த பக்தர், ஞானத்திற்கும் முன்பும், பின்பும் அதே வேலையா, அது எப்படி, எந்த வேறுபாடும் இல்லையா என்று கேட்டார். அதற்கு குரு இவ்வாறு பதில் சொன்னார். நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஞானம் அடைவதற்கு முன்பு, காட்டிற்குச் செல்லும்போதும், விறகு வெட்டும்போதும் எந்தவித ஈடுபாடும் இல்லாமல் செல்வேன், ஆனால் இப்போதோ, பூத்திருக்கும் ஒரு மலரைப் பார்க்கும்போது அந்தக் கடவுளே எனக்காக வந்து பூத்ததுபோல் தோன்றும். அருவிகளின் ஒலி சங்கீதமாகக் கேட்கிறது. பறவைகளின் ஒலிகள் இனிய பாடல்களாக இதயத்திற்கு இதமளிக்கின்றன. வெளித்தோற்றத்தில் நான் அதே வேலைகளைச் செய்துவந்தாலும், இப்போதைய எனது உலகம் பழைய உலகம் அல்ல, நான் பழைய ஆளும் அல்ல.
ஜூன் 05, உலக சுற்றுச்சூழல் நாள்
இயற்கை கடவுள் வரைந்த வனப்புமிக்க ஓவியம். அது அவரது முதல் படைப்பு. இயற்கைதான் கடவுள் என்று நம் முன்னோர் கூறினர். இந்த இயற்கையின் அதிசயங்களை ஆய்வுசெய்ய, அவற்றை இரசிக்க, இப்பூமிக்கு மேலும், கீழும் மனிதர் சென்று, அவைபற்றிய புதிய புதிய கண்டுபிடிப்புக்களை வெளியிடுகின்றனர். ஆயினும், மனிதருக்கு இயற்கையின் ஞானத்தைக் கணிப்பது இன்றுவரை கடினமாகவே இருக்கிறது. ஏனெனில் எல்லாக் கண்டுபிடிப்புக்களையும் தாண்டிய அழகும் மர்மமும் நிறைந்த வளங்கள் இயற்கையில் புதைந்துள்ளன. பறவையினங்களும் விலங்கினங்களும் வனங்களை உருவாக்கிச் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வருகின்றன. அத்தகைய இயற்கையின் மகத்துவத்தை உணராமல், ஆடம்பரம் எனும் பெயரில், மனிதர் அதனைப் புண்படுத்தி வருவதோடு, .பல்லுயிர்கள் அழிவதற்கும் காரணமாகி வருகின்றனர். இந்த நிலையிலும் சுற்றுச்சூழலையும், பல்லுயிர்களையும் பாதுகாப்பதற்கு உலகில் பலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை நம்மால் மறுக்க முடியாது.
“பசுமை நொபெல்” விருது
Niwat Roykaew என்பவர், தாய்லாந்து நாட்டின் Thi நகரில் பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். “Kru Thi” என பாசத்தோடு அழைக்கப்படுகின்ற இவர், தென் கிழக்கு ஆசியாவின் முக்கிய நீர்வள ஆதாரமாக அமைந்துள்ள Mekong ஆறு, பெருமளவான வளர்ச்சித்திட்டங்களால் அச்சுறுத்தப்பட்டதிலிருந்து அதனைக் காப்பாற்றி இருக்கிறார். இருபது ஆண்டுகளாக இவர் மேற்கொண்ட போராட்டத்தினால், சீனாவின் ஒரு திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவின் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், இந்த ஆற்றில், தாய்லாந்துக்கும் லாவோசுக்கும் இடையே 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு வர்த்தக மற்றும், சுற்றுலாவுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும். இந்த ஆற்றில் கூடுதலாக பல்வேறு திட்டங்கள் நடைபெற்றிருந்தால், பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த ஆறு, நூறு விழுக்காடு சேதமடைந்திருக்கும் என்று Niwat Roykaew அவர்கள் கூறியிருக்கிறார். சுற்றுச்சூழல், சமூக மற்றும், கலாச்சாரப் பாதுகாப்புக்கு இவர் மேற்கொண்டுள்ள அர்ப்பணத்தைப் பாராட்டி, கடந்த வாரத்தில் சான் பிரான்செஸ்கோ நகரில், “பசுமை நொபெல்” எனப்படும் 2022ம் ஆண்டின் Goldman சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. இவரோடு சேர்ந்து இன்னும் சில நாடுகளின் சூழலியல் ஆர்வலர்களும் இவ்விருதைப் பெற்றனர். ஜூன் 05, இஞ்ஞாயிறன்று உலக சுற்றுச்சூழல் நாள் சிறப்பிக்கப்பட்டது. மனிதரின் பேராசைகளால் இடம்பெற்றுவரும் போர்கள், சுற்றுச்சூழலை மட்டுமன்றி, தன் சகமனிதரையே அழித்து வருகின்றன.
உக்ரைனில் போர் நிறுத்தப்பட திருத்தந்தை
உக்ரைனில் போர் தொடங்கப்பட்டு, ஜூன் 3ம் தேதியோடு நூறு நாள்கள் நிறைவடைந்தும், அந்நாட்டில் போர் தொடர்கின்றது. இப்போரினால் ஏறத்தாழ எழுபது இலட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா. நிறுவனம் கூறியுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூன் 05, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆற்றிய அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின், இப்போரைக் குறிப்பிட்டு, மனித சமுதாயத்தை அழிவுக்கு இட்டுச்செல்லாதீர்கள் என்று, உலகத் தலைவர்களிடம் கெஞ்சிக் கேட்பதாக, ஒரு தடவைக்குமேல் கூறினார். இயேசு உயிர்த்த ஐம்பது நாள்களுக்குப்பின்னர், திருத்தூதர்கள் மீது தூய ஆவியார் இறங்கிவந்த நிகழ்வு, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்டதைக் குறிப்பிட்டு, அந்நாளில் பல்வேறு மொழிகளைப் பேசிய மக்கள் சந்தித்தனர், மற்றும், அவர்கள் ஒருவர் ஒருவரைப் புரிந்துகொண்டனர், ஆனால் இன்று இரஷ்யா உக்ரைனில் ஆக்ரமிப்பைத் தொடங்கி நூறு நாள்கள் ஆகியும், ஒரு புதிய போரின் அச்சமூட்டும் கனவு, மீண்டும் மனித சமுதாயத்தின் மீது அழிவைக் கொணர்ந்துள்ளது என்று திருத்தந்தை கூறினார். போரிடும் மக்கள், மற்றும், ஒருவர் ஒருவரைக் கொலை செய்பவர்கள், ஒருவர் ஒருவருக்கு நெருக்கமாக வாழவேண்டும் என்ற கடவுளின் கனவைப் புறக்கணிப்பதாக உள்ளது. போரின் பேரச்சத்தினால் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயர்கின்றனர். அழிவு மற்றும், மரணத்தின் சீற்றம், வன்செயல்களாகவும், போர்களாகவும் எகிறிக்கொண்டு, அனைவருக்கும் அழிவைக்கொணர்வதற்கு எரிபொருளாக உள்ளன. நாடுகளின் தலைவர்களே, மனித சமுதாயத்தை அழிவுக்குள் இட்டுச்செல்லாதீர்கள், போர் நிறுத்தம் இடம்பெறவும், ஒரு நிலையான நீடித்த தீர்வு காணப்படவும் உண்மையான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படவேண்டும் என்று உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் நாம் பார்க்கின்ற துன்புறும் மக்களின் அபயக்குரல் கேட்கப்படட்டும், மனித வாழ்வு மதிக்கப்படட்டும், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் நகரங்களும் கிராமங்களும் படுபயங்கரமாக அழிக்கப்படும் செயல்கள் நிறுத்தப்படட்டும். உக்ரைனில் அமைதி நிலவ நன்மனம்கொண்ட அனைவரும் அமைதிக்காகத் தங்களை அர்ப்பணிக்குமாறு சோர்வின்றி இறைவனை தொடர்ந்து மன்றாடுங்கள். இவ்வாறு மனித சமுதாயம் அழிவினின்று காப்பாற்றப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல ஆண்டுகளாக போர் இடம்பெற்றுவந்த ஏமன் நாட்டில் அரசுக்கும், Houthi புரட்சியாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற இரண்டு மாத இடைக்காலப் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருப்பதற்கும் தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.
ஏமனில் இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிப்பு
நம்பிக்கையின் இந்த அடையாளம், இந்த நம் காலத்தில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்கியுள்ள இரத்தத்தைச் சிந்தும் ஆயுத மோதல்கள் மேலும் தொடராமல் நிறுத்தப்பட உதவும் என்றும் திருத்தந்தை தெரிவித்தார். 2014ம் ஆண்டில், ஈரான் ஆதரவுபெற்ற Houthi புரட்சியாளர்கள் ஆக்ரமித்திருந்த Sadah பகுதியிலிருந்து ஏமன் தலைநகர் Sanaaவைக் கைப்பற்றியதையடுத்து அரசு அந்நகரைவிட்டு வெளியேறவேண்டியதாகியது. இதனால் ஏமன் அரசை மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வைக்கும்வண்ணம் 2015ம் ஆண்டு துவக்கத்தில் சவுதி அரேபியா தலைமையில் அந்நாட்டில் போர் தொடங்கப்பட்டது. இப்போரில் 3,77,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஏமன் நாட்டில் இடம்பெற்ற போரினால், பசி, அழிவு, கல்வி வாய்ப்பு மறுப்பு என பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டுள்ள சிறாரை மறக்கவேண்டாம் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
நைஜீரியாவில் தாக்குதல்
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் தென்மேற்கு மாநிலமான Ondoவில், கத்தோலிக்கருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஜூன் 5, இஞ்ஞாயிறன்று Owo நகரின் புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்தில் கத்தோலிக்கர் பெந்தக்கோஸ்து பெருவிழாவைச் சிறப்பித்துக்கொண்டிருந்தபோது, மனிதர்கள் துப்பாக்கியுடன் நுழைந்து சரமாரிச் சுட்டத்தில் பல சிறார் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறை குறித்தும் திருத்தந்தை கவலை தெரிவித்தார். பிரேசில் நாட்டின் வடமேற்குப் பகுதியில் பெய்யும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவர்கள் மற்றும், ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது குறித்தும் திருத்தந்தை குறிப்பிட்டு அந்நாட்டினருடன் தன் ஒருமைப்பாட்டையும் தெரிவித்தார்.
ஜூன் 7, உலக உணவு பாதுகாப்பு நாள்
கொடூரமனம் மனம் படைத்த மனிதரால், சக மனிதர்களும் பல்லுயிர்களும் சூழலியலும் கடும் அழிவை எதிர்கொள்கின்றனர். ஜூன் 7, இச்செவ்வாய் உலக உணவு பாதுகாப்பு நாள். 2018ம் ஆண்டில் ஐ.நா. பொது அவையால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உலக உணவு நாள், உடல்நலத்திற்கு, பாதுகாப்பான உணவின் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஆனால் இன்று போர்களால் பாதுகாப்பற்ற உணவு நெருக்கடி அதிகமாகவே ஏற்பட்டுள்ளது. அதேநேரம், உலகளவில் மக்கள் தினமும் 40 விழுக்காட்டு உணவை வீணாக்குவதாக ஓர் அறிக்கை கூறுகிறது.
ஜூன் 8 உலக பெருங்கடல்கள் நாள்
ஜூன் 8 இப்புதன் உலக பெருங்கடல்கள் நாள். மனிதரின் வாழ்க்கையில் பெருங்கடல்கள் வகிக்கும் முக்கியத்துவத்தை இந்நாள் எடுத்துரைக்கின்றது. பூமியில் உள்ள மொத்த நீரில் 97 விழுக்காடு கடல் நீர்தான். மனிதர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடில் 30 விழுக்காட்டை கடல் எடுத்துக்கொண்டு, பூமி வெப்பமடைவதைக் குறைக்கிறது. கடல் மூலமாக 70 விழுக்காடு ஆக்சிஜன் கிடைக்கிறது. உலகில் 300 கோடிப் பேருக்கு கடல் உணவு மூலம் புரதச்சத்து கிடைக்கிறது. அதேநேரம் உலகில் ஆண்டுதோறும் 80 இலட்சம் மெட்ரிக் டன் நெகிழிக் கழிவுகள் கடலில் கலக்கின்றன.
மனிதரையும் சூழலியலையும் பாதுகாக்கவேண்டிய நம் கடைமையை உணர்வோம். நமக்கென கடவுள் வைத்திருக்கும் கனவை நனவாக்க முயற்சிப்போம். நல் எண்ணங்கள் பெரிய செயல்களுக்கு இட்டுச்செல்லும். பெரிய செயல்கள் வெற்றிக்கு இட்டுச்செல்லும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்