இனியது இயற்கை: குறிஞ்சி நிலம்
மேரி தெரேசா: வத்திக்கான்
சங்க இலக்கியங்கள், தமிழக மக்களின் வாழ்வியல், நாகரீகம், பண்பாடு முதலானவற்றை பிரதிபலிப்பதாக உள்ளன. இவற்றில் சங்கப் புலவர்கள் அகப் புற வாழ்வியலை திணைகளாக வகுத்துத் தந்துள்ளனர். தொல்காப்பியர் அகம் மற்றும் புறம் சார்ந்த செய்திகளை ஏழு – ஏழு திணைகளாக வகுத்திருந்தார். இன்று இருக்கும் இலக்கியங்கள் சற்று மாறுபாட்டுடன், அகத்தை ஐந்து திணைகளாகவும், புறத்தை பன்னிரண்டு திணைகளாகவும் வகுத்துள்ளன. அகம் சார்ந்த செய்திகளைக் கூறும் ஐந்து திணைகளுள் ஒன்று குறிஞ்சி. குறிஞ்சி நிலம் என்பது, பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். பழந்தமிழர், மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். குறிஞ்சி நிலமானது இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கில், அரபிக்கடலைச் சார்ந்து அமைந்திருக்கும் பகுதியாகும். இம்மலைப் பகுதியே இன்று ‘மேற்கு மலைத்தொடர்’ என்று அழைக்கப்படுகிறது. இம்மலை, மராட்டிய மாநிலத்தில் தபதி ஆற்றங்கரையில் தொடங்கி, குஜராத், கோவா, கர்நாடாக, கேரளா இறுதியாகத் தமிழகத்தின் கன்னியாகுமரியில் முடிவடைகிறது. ஏறத்தாழ 1,600 கி.மீ நீளமும் 900 முதல் 2,400 மீட்டர் வரையிலான உயரமும் கொண்ட இம்மலை, இமயமலைக்கும் மூத்த மலையாக விளங்குகிறது. இப்பெருமலையைத் தமிழர்கள் ‘மலையும் மலைசார்ந்த’ குறிஞ்சி நிலமாக வரையறை செய்திருக்கிறார்கள். தமிழ் நாட்டின் குறிஞ்சி நிலப் பகுதியாகத் திகழ்வது, மேற்குக் காற்றாடி மலைகள், கிழக்குக் காற்றாடி மலைகள், நீலகிரி, பழனி, ஆனைமலை போன்ற பகுதிகளாகும். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களை, “குறவர்” என்று அழைத்தனர். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன. குறிஞ்சி நில மக்களின் தலைவர்கள், வெற்பன், சிலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். குறிஞ்சி, காந்தள், வேங்கை என்பன இப்பகுதியில் வளரக்கூடிய செடிகளின் பெயர்களாகும். குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சிச் செடியில் (Strobilanths kunthiana) பூக்கும் குறிஞ்சி மலர்களின் நீல நிறத்தால், மேற்கு மலைத்தொடர்ச்சி மலைப் பகுதி “நீலகிரி” (நீலம் + கிரி) எனப் பெயர் பெற்றது. குறிஞ்சி நிலத்தின் தெய்வமாக சேயோன் வழிபடப்பட்டார். "சேயோன் மேய மைவரை உலகமும்" என, குறிஞ்சி நிலம் பற்றி தொல்காப்பியம் கூறுகிறது. இந்துமதக் கடவுள்களான முருகன், சிவன் ஆகிய இருவருமே, சேயோன் என்று அழைக்கப்பட்டனர். எனினும் முருகனே, குறிஞ்சி நிலத்தின் கடவுள் எனப் பலரால் கூறப்படுகின்றது. தெய்வ வழிபாட்டு நெறிகளாக, பலியிடுதல், வெறியாட்டல் போன்றன இம்மக்களிடையே இருந்து வந்துள்ளது என்பதைச் சங்க இலக்கியங்கள் வழியாக அறிய முடிகிறது. பண்டைய குறிஞ்சி நில மக்களின் முக்கிய தொழில், கிழங்கு அகழ்தல், தேன் எடுத்தல், தினைகாத்தல் மற்றும் வேட்டையாடல் என்பனவாகும். மலை, பாறை, நல்வரை, ஓங்கல், வெற்பு, நெடுவரை, சிலம்பு, அடுக்கம் என, குறிஞ்சி நிலம் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. அந்நிலத்தின் பெரும்பொழுது – கூதிர்காலம். சிறுபொழுது – யாமம். இந்நில மக்கள், யாழ் இசைக்கருவியை மீட்டுவதில் வல்லவர்கள் (நன்றி https://www.tamilwisdom.com/)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்