இனியது இயற்கை: உலகின் மிகப்பெரிய ஏரி, காஸ்பியன்
மேரி தெரேசா: வத்திக்கான்
ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் அமைந்துள்ள காஸ்பியன் ஏரி, (Caspian Sea), உலகின் மிகப் பெரிய ஏரியாகும். இது உப்பு நீரைக் கொண்டிருப்பதாலும், பரந்துவிரிந்து எல்லையற்றுக் காட்சியளிப்பதாலும், பழங்காலத்தில் இவ்வேரிக்கு அருகில் வாழ்ந்த மக்கள், இதனை ஒரு பெருங்கடலாகவே கருதினார்கள். கடல் மட்டத்திற்கு ஏறத்தாழ 27 மீட்டர் கீழே உள்ள இந்த ஏரி, 372,000 சதுர கி.மீ பரப்பளவையும், 78,200 கன கி.மீ கொள்ளளவையும், உலகில் 40-44 விழுக்காட்டு ஏரிகளின் நீர்ப் பரப்பையும் கொண்டிருக்கிறது. இதன் எல்லைகளாக, இரஷ்யா, ஈரான், துர்க்மெனிஸ்தான், அசர்பைஜான், கசக்ஸ்தான் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்த ஏரியில் ஏறத்தாழ 120 ஆறுகள் பாய்ந்தாலும், இதன் வட பகுதியில் நுழைகின்ற ஐரோப்பாவின் மிக நீளமான வோல்கா ஆறே மிகப் பெரியதாகும். இரண்டாவது செழிப்பான ஊறல் ஆறும், இதில் பாய்கின்றது. இந்த ஏரி, மூன்று கோடி ஆண்டுகளுக்குமுன் தோன்றியது எனவும், முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்டதாக, 55 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் மாறியது எனவும் அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்த ஏரியின் அதிகபட்ச ஆழம் 1,025 மீட்டராகும். இந்த ஏரியில் உள்ள நீரானது, 1.2 விழுக்காடு உப்புத்தன்மையைக் கொண்டுள்ளது. இது ஆழ்கடல்களின் உவர்ப்பில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு ஆகும். இவ்வேரியில் வாழும் ஸ்ரர்ஜியோன் எனும் மீனின் சினையே, கவியார் என்ற பிரபல உணவு வகையாக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மேலும் இவ்வகை மீன்கள் அதிகளவு பிடிக்கப்பட்டுள்ளதால், அவ்வினம் அரிதாகி வருகிறது. எனவே அறிவியலாளர்கள், அதிகளவு மீன்பிடிப்பைத் தடுத்து அம்மீனினத்தை பழைய எண்ணிக்கைக்குக் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர். காஸ்பியன் ஏரியின் வட பகுதியில் பல சிறிய தீவுகள் காணப்படுகின்றன. இத்தீவுகளின் நிலப்பரப்பு ஏறத்தாழ 770 சதுர கிலோ மீட்டர் ஆகும். இந்தத் தீவுகள் ஆழமான பகுதிகளில் இல்லை. இதில் ஒகுர்ஜா அடா என்பதே பெரிய தீவு ஆகும் (நன்றி: விக்கிப்பீடியா)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்