தேடுதல்

வண்டல் மண் வண்டல் மண் 

இனியது இயற்கை: வண்டல் மண்

பல ஆண்டுகளாக துார்வாராமல் குளங்களில், தேங்கியிருக்கும் வண்டல் மண்ணில், பயிர்களின் வளர்ச்சிக்கு முக்கிய தேவையான கனிமசத்துகள் அதிகளவில் காணப்படுகின்றன - வேளாண்துறை

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்தியாவிலுள்ள மண் வகைகளை, வண்டல மண், காிசல் மண், செம்மண், துருக்கல் மண் என்று நான்கு பெரும் பிாிவுகளாகப் பிாிக்கலாம். இவற்றைத் தவிர காடுகளிலுள்ள மண், பாலைவன மண், உப்பு, காரமண், சதுப்புநில மண் ஆகியன குறிப்பிடத்தக்க முக்கியமான மண் வகைகளாகும். வண்டல் மண், வட இந்தியச் சமவெளிகளிலும், காிசல் மண், செம்மண், துருக்கல் மண் ஆகியன தீபகற்ப இந்தியாவிலும் காணப்படுகின்றன. தீபகற்ப இந்தியாவிலுள்ள மண், அவை அமைந்துள்ள இடங்களிலேயே தோன்றியுள்ளன. வட இந்தியச் சமவெளிகளில் காணப்படும் மண் பெரும்பாலும் கடத்தப்பட்ட மண்ணாகும்.

வண்டல் மண்

இந்தியாவின் மண் வகைகளில், வண்டல் மண் (Alluvial soil), பெரும்பாலும் வட இந்தியாவில் காணப்படுகின்றது. இம்மண், மலையில் இருந்து ஓடிவரும் ஆறு, மக்கின செடி, கொடி, தழைகளையும் பல தாதுப்பொருள்களையும் அடித்தவாறு வரும்போது இவை ஒன்றிணைந்து உருவாகிறது. எனவே இவை வேளாண்மைக்கு மிகவும் ஏற்றதாகவும் தழைச்சத்து, நார்ச்சத்து, கனிமங்கள் உடையதாகவும் உள்ளது. இம்மண், களிமண் கலப்புமிக்க மண்ணாக இருப்பதால் நிலத்தை உழுவது எளிதாக உள்ளது. இம்மண்ணை விளைநிலங்களுக்கு பயன்படுத்தினால், மண் வளம் அதிகரித்து, பயிர் செழிக்கும். மேலும், குளங்களில் இருந்து பெறப்படும் வண்டல் மண்ணை, விளைநிலங்களில் கொட்டி, பயன்படுத்தினால் மண் வளம் அதிகரிக்கும். பல ஆண்டுகளாக துார்வாராமல் குளங்களில், தேங்கியிருக்கும் வண்டல் மண்ணில், பயிர்களின் வளர்ச்சிக்கு முக்கிய தேவையான கனிமசத்துகள் அதிகளவில் காணப்படுகின்றன. இவ்வகை மண்ணை, விவசாய நிலங்களில் பயன்படுத்தினால் குறைந்தபட்சம் ஓர் ஆண்டுக்கு வேறு எந்த உரமும் வைக்கவேண்டிய அவசியம் இருக்காது. இலவசமாக கிடைக்கும் இயற்கை உரமான, வண்டல் மண்ணை எடுத்து மண் வளத்தை மீட்க விவசாயிகள் முன்வரவேண்டும். இந்த மண் காணப்படும் பகுதிகளில் நீர் வசதி இருந்தால், தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். இம்மண்ணில், நெல், கோதுமை, கரும்பு, எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர்கள் வளரும். இம்மண்ணில், பொட்டாசியம் பாஸ்போரிக் அமிலம் சுண்ணாம்பு மற்றும், கார்பன் கலவைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. நைட்ரஜன் குறைவாக உள்ளது.

இம்மண் பெரும்பாலும், வட இந்தியாவில், கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்குகள், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களின் சமவெளிப் பகுதிகளில், 15 இலட்சம் ச.கி.மீ. பரப்பில் காணப்படுகிறது. புவி அமைப்பியலின்படி வண்டல் மண்ணை இரு பிாிவுகளாகப் பிாிக்கலாம். வெள்ளச் சமவெளி, டெல்டா, தாழ் நிலங்கள் ஆகிய பகுதிகளில் காணப்படும் புதிய வண்டல் மண்ணை "காதர்" என்று கூறுவர். வெள்ளநீர் அடைய முடியாத உயர்நிலப் பகுதிகளில் பழைய வண்டல் மண் காணப்படுகிறது. இதனை "பாங்கர்" என்று கூறுவர். பாங்கர் மண்ணின் கீழ் அடுக்குகளில் சுண்ணாம்புத் துகள்கள் காணப்படுகின்றது. பாங்கர் மண்ணைவிட காதா மண்ணில் மணல் கலந்து அதிகமாக உள்ளது. (நன்றி: விக்கிப்பீடியா)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 June 2022, 14:38