இனியது இயற்கை : விக்டோரியா ஏரி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
விக்டோரியா ஏரி, அல்லது விக்டோரியா நியான்சா என்பது, ஆப்ரிக்காவில் உள்ள மாபெரும் ஏரிகளுள் ஒன்றாகும். கின்யருவாண்டா மொழியிலும், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பண்டு மொழிகளிலும் விக்டோரியா ஏரியானது விக்டோரியா நியான்சா என்று அழைக்கப்படுகிறது. ஜான் ஹன்னிங் ஸ்பீக் (John Hanning Speke) என்ற பிரித்தானிய ஆய்வாளர் இந்த ஏரியைக் கண்டறிந்து ஆவணப்படுத்திய பின்னர் பேரரசி விக்டோரியாவின் பெயரை இதற்கு வைத்தார். நைல் நதியின் ஆதாரத்தைக் கண்டுபிடிப்பதற்காக ரிச்சர்ட் பிரான்சிஸ் பர்ட்டனுடன் ஒரு பயணத்தில் 1858ம் ஆண்டில் ஸ்பீக் இதைச் செய்தார்.
விக்டோரியா ஏரியின் பரப்பளவு 68,800 சதுர கிலோமீட்டர் ஆகும். பரப்பளவின் அடிப்படையில் இதுவே இக்கண்டத்தின் மிகப்பெரிய ஏரியாகும். மேலும், உலகின் வெப்பமண்டலத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியும், வட அமெரிக்காவின் சுப்பீரியர் ஏரிக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரியுமாகும். நேரடியான மழை மற்றும் பல சிறு நீரோடைகளிலிருந்து விக்டோரியா ஏரி அதன் தண்ணீரைப் பெறுகிறது. சியோ, நோசியா, யலா, நிண்டோ, சோன்டு மிரியு, மோகுசி, மிக்ரி போன்ற ஏழு சிறு நதிகள் விக்டோரியா ஏரிக்கு நீரை வழங்குகின்றன. மிகப்பெரிய நதியான ககெரா ஆறு இந்த ஏரியின் மேற்குக் கரையில் வந்து கலக்கிறது. விக்டோரியா ஏரியின் வடக்குக் கரையில் உகாண்டாவின் யிஞ்ஞசாவுக்கு அருகில், நைல் ஆற்றில் இவ்வேரியின் தண்ணீர் வெளியேறுகிறது. நைல் நதி ஆல்பர்ட் ஏரியை அடையும் வரை விக்டோரியா நைல் என்றே அழைக்கப்படுகிறது.
விக்டோரியா ஏரியின் அதிகபட்ச ஆழம் 84 மீட்டராகவும், அதன் சராசரி ஆழம் 40 மீட்டர் ஆகவும் உள்ளன. 7142 கிலோமீட்டர் அளவுக்கு நீண்ட கரையைக் கொண்டுள்ள இவ்வேரி, இந்நீளத்தில் 3.7 சதவீதம் அளவுக்கு தீவுகளைக் கொண்டு, கென்யா, உகாண்டா, டான்சானியா ஆகிய மூன்று நாடுகளின் நடுவே அமைந்துள்ளது.
விக்டோரியா ஏரி தனது 80 விழுக்காட்டு நீருக்கு மழையையே நம்பியிருக்கிறது. ஓர் ஆண்டிற்கு சராசரியாக 2 முதல் 2.2 மீட்டர் அளவுக்கு ஏரி நீர் ஆவியாகிறது. விக்டோரியா ஏரியின் வடிநிலத்தில் பொதுவாக கிராமப்புற மக்கள் நிரம்பியுள்ளார்கள். குறிப்பாக ஏரியின் கரையோரங்களில் முக்கிய நகரங்கள் உள்ளன. இந்த நகரங்கள் நேரடியாக விக்டோரியா ஏரியில் அல்லது அதன் கிளை ஆறுகளில் கழிவுகளை நேரடியாகச் சேர்த்து அந்நீரை மாசுபடுத்துகின்றன. விக்டோரியா ஏரியும் அதன் சுற்றுப்புறங்களும் பல உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளன. குறிப்பாக நீர்யானை, நீர்நாய்கள், நைல் முதலைகள், பலவகையான ஆமைகள், நன்னீர் நண்டுகள் போன்றவை அதிக அளவில் விக்டோரியா ஏரியில் வாழ்கின்றன. விக்டோரியா ஏரியில் மட்டுமே காணப்படும் பலவகை மீன் இனங்கள் உள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்