இனியது இயற்கை - சுப்பீரியர் ஏரி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
சுப்பீரியர் ஏரி, வட அமெரிக்காவின் ஐந்து பேரேரிகளுள் மிகப் பெரியது. இதன் எல்லைகளாக வடக்கில் கனடாவின் ஒண்டாரியோவும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் மினசோட்டாவும் அமைந்திருக்க, தெற்கில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாநிலங்களான விஸ்கான்சினும், மிச்சிகனும் அமைந்துள்ளன. நீர்க் கொள்ளளவின் அடிப்படையில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய நன்னீர் ஏரி இதுவேயாகும். இவ்வேரி நெதர்லாந்து நாட்டின் பரப்பளவில் இரண்டு மடங்கு ஆகும். நீரின் அதிகபட்ச ஆழம் 406 மீ, ஏரிக்கரையின் நீளம் ஏறக்குறைய 4768 கி.மீ.
உலகின் ராட்சதக் கப்பல்களை, இந்த ஏரியில் காணலாம். நான்கு புறமும் நிலப்பரப்புகளால் சூழ்ந்திருக்கும் இவ்வேரிக்கு உலகின் எந்தப் பகுதி கப்பல்களும், வந்து செல்லலாம். சுப்பீரியர் ஏரியின் ஒரு முனை மிச்சிகன் ஏரியை மெல்லிதாகத் தொட்டுக் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவின் வடக்கு எல்லையில் கனடாவுடன் பங்கு கொண்டு இருக்கும் சுப்பீரியர் ஏரி, மிச்சிகன் ஏரி, ஹுரான் ஏரி, ஒண்டாரியோ ஏரி ஆகியவை கூட்டாக “கிரேட் லேக்ஸ் ஆப் நார்த் அமெரிக்கா” என்றழைக்கப்படுகின்றன. இந்த கிரேட் லேக்ஸ், செயிண்ட் லாரன்ஸ் ஆற்றின் மூலம் அட்லாண்டிக் பெருங்கடலுடன் இணைகிறது. இதன் மூலம், உலகின் எந்த மூலையிலிருந்தும், மினசோட்டாவிற்குக் கடல் வழிப் போக்குவரத்து சாத்தியம். கடலே இல்லாத ஊருக்குக் கப்பல் வருகிறது என்பதுதான் இங்கு ஆச்சர்யம்.
21 தீவுகள் கொண்ட அப்போஸ்சில் தீவுக்கூட்டம் சுப்பீரியர் ஏரியில் உள்ளது. அப்போஸ்சில் தீவுகளில் அமைந்திருக்கும் கடல் குகைகள் பிரபலமானவை. பனியில்லாக் காலங்களில் படகுப் பயணம் என்றால், பனிக்காலங்களில் இந்த ஏரியின் மேல் வாகனங்களில் செல்லலாம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்