இனியது இயற்கை - நிலம் தோன்றிய வரலாறு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் வானொலி
நிலம் என்பது, நிரந்தரமாக நீரில் மூழ்கியிராத புவியின் திண்ம மேற்பரப்பு ஆகும். நில உலகிற்கு ‘ஞாலம்’ என்பது ஒரு பெயர். விண்வெளியில் தொங்கிக்கொண்டிருக்கிற நில உருண்டை என்பது, அதன் பொருள். ஒன்பது கோள்களுள் ஒன்று ஞாலம். ஞாயிற்றில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தின் விளைவால் ஏறக்குறைய 500 கோடி ஆண்டுகளுக்கு முன் வெடித்துச சிதறி வானவெளியில் ஒரு தனிக்கோளமாக மிதந்து சொல்லொணா வேகத்துடன் ஒரு தீப்பிழம்பாகவே சுழன்று தொங்கிக் கொண்டிருந்தது. காலம் செல்லச் செல்ல மிகப் பல்வேறு இயற்கை மாறுபாடுகள் கொண்ட இவ்வுலகம் தோன்றியது. தொடக்கத்தில் வாயுப்பிழம்பாக இருந்த உலகம் குளிர்ந்து திண்ணிய பாறைப் பொருள்களால் ஆன மேலோட்டினைக்கொண்ட கோளமாக மாறிவிட்டது. இருப்பினும், உள்ளேயே அடங்கியிருந்த தீப்பிழம்பின் உருக்கு வெப்பநிலை கற்குழம்பாக மாறி எரிமலைகளின் வாயிலாக வெளியே வழிந்தோடி நிலத்தின் மேற்புறத்தில் புடைத்தெழும் மலைகளாகப் படிந்தன. இந்த தணல் பிழம்பு குளிர்ந்து இறுகிப் பாறைப் படலமாகும்போது நீராவிப்படலம் தோன்றி உலகைச் சூழ்ந்து நின்றது. தணல் படலம், பாறைப் படலமாக மாறியவுடன் நீராவிப் படலம் குளிர்ந்து, இடைவிடா மழையாகப் பொழிந்த நீர் பெருக்கெடுத்து ஓடிப் பள்ளங்களில் தங்கியது. இவ்வாறு தங்கிய அகன்ற ஆழமான பள்ளங்களே கடல்கள், பெருக்கெடுத்து ஓடிய வழிகளே ஆறுகள் என்று கூறுகின்றனர்.
சூரியனிலிருந்து ஏதோ காரணத்தால் இற்றுப்போய் வீழ்ந்து சுற்றிக்கொண்டிருந்த ஒரு பெரும் துண்டம், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர் மிக உயர்ந்த மலைப் பகுதிகளைத் தோற்றுவித்தும், பின்னர் நீர்ப் பகுதியும் நிலப் பகுதியும் அமையப்பெற்று இன்றைய நிலவுலகின் தன்மையினை நாம் பெற்றிருக்க வேண்டும்.
நிலத்தை மனிதனால் உற்பத்திச் செய்யமுடியாது. ஆனால் அந்த நிலத்தில் உற்பத்திச் செய்யலாம். நிலம் என்பது இடம்பெயரும் தன்மை அற்றது. இந்த நிலத்தைத்தான் பண்டைய தமிழர், குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் எனப் பிரித்து நிலத்திணைகளாகக் கண்டனர். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனவும், காடும், காடு சார்ந்த நிலமும் முல்லை எனவும், இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனவும், வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும், கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் பாலை என்று ஒரு நிலம் இல்லை. கோடை வெப்பத்தால் திரிந்து காணப்பட்ட நிலையில் அவற்றைப் பாலை என்றனர். இது வெறுமனே இயல்பியல் அடிப்படையிலான பகுப்புக்களாக இல்லாது, மக்கள் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருந்தன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்