இனியது இயற்கை – விவசாய நிலங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
எந்தவொரு நாட்டுக்கும் விவசாயம் என்பது, மிகவும் முக்கியமான தொழில். ஒரு நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு முதுகெலும்பு விவசாயம் மட்டும்தான். அவ்வாறு உலகில் அதிகம் விவசாயம் செய்யும், உள்நாட்டு உற்பத்தியில் அதிகமான பங்களிப்பை அளிக்கும் முதல் மூன்று நாடுகள் என்றால் அவை, சீனா, இந்தியா, மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு. இதில் பிரேசில் நாடும் அவ்வப்போது இணைவதுண்டு.
சீனாவில் விவசாயம்
ஏறக்குறைய 136 கோடி மக்களையும், மொத்தம் 95 இலட்சம் ச.கி.மீ பரப்பளவையும் கொண்டுள்ள சீனாவில், அங்குள்ள நிலத்தில் 13 விழுக்காடு விவசாயத்து மிக உகந்தாக உள்ளது. இங்கு விளையும் பொருள்களில் 20 விழுக்காட்டு பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வருமானத்தில் 68 லட்சம் கோடி ரூபாய் விவசாயம் மூலமாகவே ஈட்டப்படுகின்றது. உலக நெல் உற்பத்தியில் சீனாவின் பங்கு 23 விழுக்காடாகும். உலகின் 22 விழுக்காட்டு மக்களுக்கு உணவளிப்பது சீன விவசாயமே.
இந்தியாவில் விவசாயம்
அதேவேளை, 32 இலட்சத்து 82 ஆயிரம் ச.கி.மீ பரப்பளவையும், ஏறக்குறைய 126 கோடி மக்களையும் கொண்டுள்ள இந்தியாவில் 58 விழுக்காட்டு மக்கள் விவசாய நடவடிக்கை தொடர்பான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இந்திய மக்களில் 70 விழுக்காட்டு கிராமப்புற மக்கள் விவசாயத்தையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 முதல் 18 விழுக்காடு வரை விவசாயத்தின் மூலமாகப் பூர்த்தி செய்யப்படுகிறது. 2013-14ம் ஆண்டில் 3.7 விழுக்காடு வளர்ச்சி கண்ட விவசாயம் 2016-17ம் ஆண்டு முதல் சற்று சரியத் தொடங்கியுள்ளது. இந்தியா உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்களில் 85 விழுக்காட்டுப் பொருள்கள் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. மீதமுள்ளவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியா தன் மொத்த உற்பத்தி வருமானத்தில் 24 இலட்சம் கோடி ரூபாயை விவசாயத்தின் மூலம் ஈட்டுகிறது.
அமெரிக்காவில் விவசாயம்
விவசாய உற்பத்தியில் உற்பத்தித்திறன் அதிகமாகக்கொண்ட அமெரிக்காவில், ஏறக்குறைய 31 கோடி மக்கள் வாழ்கின்றனர். 1990ம் ஆண்டிற்குப்பின் ஆண்டுதோறும் 5 விழுக்காடு என்ற அளவில் விவசாயம் விரிவடைந்து வருகிறது. அண்மை ஆய்வுகளின்படி, 1950ம் ஆண்டின் வேளாண்மை உற்பத்தியை ஒப்பிடும்போது, 250 மடங்கு விவசாயம் வளர்ச்சி கண்டுள்ளது. அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருள்களில் 23 விழுக்காடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தன் மொத்த வருமானத்தில் 13.5 இலட்சம் கோடி ரூபாய் வருவாயை விவசாயம் மூலமாக ஈட்டுகிறது இந்நாடு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்