உலக அளவில் அணு ஆயுதச் சேமிப்பு அதிகரிக்கக்கூடும்
மேரி தெரேசா: வத்திக்கான்
பனிப்போருக்குப்பின்னர், உலக அளவில் முதன் முறையாக, வரும் ஆண்டுகளில் அணு ஆயுதச் சேமிப்புகள் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக, போர்கள் மற்றும், ஆயுதங்கள் குறித்த ஒரு முன்னணி ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்னும் பத்தாண்டுகளில் அணு ஆயுதங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படக்கூடிய ஆபத்து தெரிகின்றது என்றும், ஜூன் 13, இத்திங்களன்று, Stockholm பன்னாட்டு அமைதி ஆய்வு நிறுவனம் (SIPRI) தெரிவித்துள்ளது.
2021ம் ஆண்டு சனவரிக்கும், 2022ம் ஆண்டு சனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது எனவும், அணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகள் இவ்வாயுதங்கள் குறித்து உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளவில்லையெனில், உலக அளவில் அணு ஆயுத உற்பத்தி விரைவில் அதிகரிக்கக்கூடும் எனவும், அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகில் அணு ஆயுதங்களை அதிகமாகக் கொண்டிருக்கும் இரஷ்யாவில் அவை 6,257ம், அதற்கு அடுத்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஏறத்தாழ 5,550ம் உள்ளன, இவை இரண்டு நாடுகளும் உலகிலுள்ள அந்த ஆயுதங்களில் 90 விழுக்காட்டுக்கு மேல் வைத்திருக்கின்றன என, அந்த SIPRI ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரைகள், செய்திகள், மறையுரைகள், திருமடல்கள் என அனைத்திலும் இவ்வுலகம் அணு ஆயுதங்களற்ற பகுதியாக மாறவேண்டும் என்றும், இவை, மனித சமுதாயத்திற்கும் இப்பூமிக்கோளத்திற்கும் பயங்கரமான அச்சுறுத்தலை முன்வைக்கின்றன என்றும் அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார். இரஷ்யா உக்ரைனை ஆக்ரமித்த மூன்று நாள்களுக்குப் பின்பும், இதே வேண்டுகோளை திருத்தந்தை முன்வைத்தார்.
உக்ரைனில் நடந்துவரும் போர், அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் ஒன்பது நாடுகள் மத்தியில் பதட்டநிலைகளை அதிகரித்துள்ளது என்றும், இது உலகிற்கு மிகுந்த கவலைதருகின்றது என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்